Asian games: காலில் அறுவை சிகிச்சை; விடாமுயற்சியால் வெண்கலம் வென்ற மயிலாடுதுறை வீராங்கனை!

Sep 27, 2026 - 12:30
0
Asian games: காலில் அறுவை சிகிச்சை; விடாமுயற்சியால் வெண்கலம் வென்ற மயிலாடுதுறை வீராங்கனை!

ஜப்பானில் 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் பல நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர். குறிப்பாக இந்தியாவின் பல மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான வீரர்கள், வீராங்கனைகள் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு இந்தியா சார்பில் விளையாடி திறமையை வெளிப்படுத்தி வெற்றி பெற்று பதக்கங்களை குவித்து வருகின்றனர்.

மயிலாடுதுறை பரணிகா

மயிலாடுதுறை மாவட்டம, குத்தாலம் அருகே உள்ள சேத்திரபாலபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் 28 வயதான பரணிகா. இவருக்கு போல் வால்ட் எனப்படும் கம்பு ஊன்றி தாண்டுதல் போட்டியில் சிறுவயதில் இருந்தே ஆர்வம். பல போட்டிகளில் பங்குபெற்று வெற்றிகளையும், பதக்கங்களையும் குவித்துள்ளார். ஆசிய போட்டியில் விளையாடி பதக்கம் வெல்ல வேண்டும் என்பதற்காக கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டு வந்தார்.

இந்நிலையில், ஜப்பானில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியில் போல் வால்ட் போட்டிக்கான பெண்கள் பிரிவில் பரணிகா கலந்து கொண்டு விளையாடினார். இதில் 4.15 மீட்டர் உயரம் தாண்டி வெண்கல பதக்கத்தை வென்றார். அத்துடன், பெண்களுக்கான போல் வால்ட் பிரிவில் ஆசிய விளையாட்டு போட்டிகள் வரலாற்றிலேயே பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாற்று சாதனையையும் பரணிகா படைத்துள்ளார். இதையடுத்து மயிலாடுதுறை மட்டுமன்றி தமிழகம் முழுவதிலிருந்தும் பரணிகாவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

போல்வால்ட் பிரிவில் வெண்கல பதக்கம் வென்ற வீராங்கனை பரணிகா

முதல்வர் ஜோசப் விஜய், கோல் ஊன்றித் தாண்டுதல் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ள தடகள வீராங்கனை பரணிகா இளங்கோவனுக்கு வாழ்த்து தெரிவித்ததுடன், கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சியால் இவ்வெற்றியைப் பெற்றுள்ள பரணிகாவின் சாதனையைப் பாராட்டும் வகையில், தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.

முதல்வர் விஜய்யின் பாராட்டு பரணிகாவின் குடும்பத்தை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. பரணிகாவின் தந்தை இளங்கோவன் கூறுகையில், ``என் மகள் எங்களுக்கு மட்டுமல்ல இந்தியாவுக்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளார். பரணிகாவுக்கு ஸ்போர்ட்ஸ் தான் உசுரு. ஸ்போர்ட்ஸில் சாதனை படைக்க வேண்டும் என்பது அவளின் பெரும் கனவாக இருந்தது. இந்நிலையில், பரணிகாவுக்கு கால் முறிவு ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்யும் நிலை ஏற்பட்டது. அறுவை சிகிச்சை செய்யப்பட்டதால் இனி பழையபடி விளையாட முடியாது என்றே எல்லோரும் நினைத்தோம்.

ஆனால், பரணிகா அந்த வலியை பொருட்படுத்தாமல் தன்னம்பிக்கையுடன் பயிற்சி மேற்கொண்டார். கொஞ்சம் கூட பின் வாங்காமல் கடுமையாக உழைத்தார். அவரது கடின முயசிக்கான பலன் கிடைத்திருக்கிறது. முதல்வர் உட்பட பலரும் என் மகளை பாராட்டுவதை நினைக்கும் போது ஒரு தந்தையாக எனக்கு பெருமிதம் அடைகிறேன்" என்றார். வெண்கலப் பதக்கம் வென்ற பரணிகா, ``பொதுவா ஸ்போர்ட்ஸ்க்குள் சென்று விட்டால் படிப்பு பாதிக்கும் என பலர் நினைக்கிறார்கள். இதனால் பல பெற்றோர்கள் பிள்ளைகளை விளையாட அனுமதிப்பதில்லை. விளையாட்டினால் ஒரு போதும் படிப்பு பாதிக்காது" என ஜப்பானில் இருந்தபடி பேசியிருப்பதும் வைரலாகி வருகிறது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User