`ஆமீர் தான் முதல் இலக்கு; அவரை நெருங்க முடியாததால் டைகரைக் குறிவைத்தோம்'- வெளியான அதிர்ச்சி தகவல்கள்
பாலிவுட் நடிகர் டைகர் ஷெராப் கடந்த வாரம் மும்பை ஜுகு பகுதியில் 3 பேர் கொண்ட கும்பலால் துப்பாக்கியால் சுடப்பட்டார். ஆனால் அதிர்ஷ்டவசமாக அவர் உயிர்த் தப்பினார். இத்தாக்குதல் தொடர்பாக இதுவரை துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்ட 3 பேர் உட்பட 11 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். டைகர் ஷெராப் கார் அருகில் நின்று சுட்டபோது துப்பாக்கி செயல்படாமல் போனதால், அவர் உயிர்த் தப்பினார். துப்பாக்கியால் சுட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் முதலில் ஆமீர் கானைத்தான் குறிவைக்கும்படி தங்களுக்கு உத்தரவு வந்ததாகத் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் மும்பையில் இதற்காக ஒரு மாதம் தங்கி இருந்து உளவு பார்த்துள்ளனர். அந்தக் காலக்கட்டத்தில் ஆமீர் கான் வசிக்கும் பகுதியில் குறைந்தது மூன்று முறை உளவு பார்த்தனர். இருப்பினும், அவர் படப்பிடிப்புக்காக அடிக்கடி வெளியில் இருந்ததாலும் அல்லது அவரது வீட்டிற்குள் பல நாள்கள் தங்கியிருப்பதையும் அவர்கள் கண்டறிந்தனர்.

இதையடுத்து தங்களது இலக்கை பின்னர் டைகர் ஷெராப்பிற்கு மாற்றியதாகத் தெரிவித்துள்ளனர்.
டைகர் ஷெராப்பை அணுகுவது எளிதாக இருந்ததாகவும், அவர் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ஜுகுவில் உள்ள கால்பந்து மைதானத்திற்கு வருவதை வழக்கமாக கொண்டிருந்ததைக் கண்டுபிடித்ததாகவும் அவர்கள் போலீஸாரிடம் தெரிவித்தனர். கடந்த ஜூலை மாதம் ஆமீர் கானுக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கொலை மிரட்டல் விடுத்து இருந்தார். அதன் தொடர்ச்சியாகவே அவரை இலக்கு வைக்க லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் உத்தரவிட்டதாக பிடிபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
டைகர் ஷெராப்பை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்ற மூன்று பேருக்கும் போலீஸ் விசாரணை குறித்து உடனுக்குடன் தகவல் கிடைத்து கொண்டே இருந்துள்ளது. அதற்கு தக்கபடி தங்களது பயணத்தை 3 பேரும் மாற்றிக்கொண்டே இருந்தனர். துப்பாக்கிச்சூடு நடத்தியவுடன் மூன்று பேரும் என்க்ரிப்ட் செய்யப்பட்ட வாய்ஸ் ஓவர் இன்டர்நெட் புரோட்டோகால் (VoIP) மெசேஜிங் அப்ளிகேஷன்கள் மூலம் தங்களுக்கு இப்பணியைக் கொடுத்தவர்களிடம் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் தப்பிச் செல்லும்போது ஒரு கட்டத்தில், தொலைக்காட்சி சேனல்கள் தாக்குதலின் காட்சிகளை ஒளிபரப்பியபோது, துப்பாக்கிச்சூடு நடத்திய ஒருவருக்கு, “தும்ஹரே செஹ்ரே ஆ கயே ஹைன், நிகல் ஜாவோ வஹா சே” (உங்கள் முகங்கள் வெளியே வந்து கொண்டிருக்கிறது. உடனே அங்கிருந்து வெளியேறுங்கள்) என்று அவசரச் செய்தி கிடைத்ததாகக் கூறப்படுகிறது. மொபைல் எண்கள் இல்லாமல் பதிவு செய்யக்கூடிய சிக்னல் அல்லது ஜாங்கி போன்ற இணைய அடிப்படையிலான பயன்பாடுகள் மூலம் தொடர்ந்து தங்களுக்கு உத்தரவிட்டவர்களுடன் தொடர்பு கொண்டிருந்தது டிஜிட்டல் சான்றுகள் மூலம் தெரிய வந்துள்ளது.

அதன் மூலம்தான் அடிக்கடி பயணத் திட்டத்தை மாற்றிக்கொண்டே இருந்தனர். அவர்கள் ஆரம்பத்தில் பஸ் மூலம்தான் தப்பித்துச் செல்வது என்று முடிவாகி இருந்தது. ஆனால் சூரத் பேருந்து நிலையத்தில் பஸ் வருவது தாமதம் ஆனதால் அவர்கள் உடனே தங்களது திட்டத்தை மாற்றி, ரயில் மூலம் புறப்பட்டுச் சென்று ராஜஸ்தானில் பிடிபட்டனர்.
பிடிபட்ட 3 பேரில் இரண்டு பேர் டைகர் ஷெராப் கார் மீது துப்பாக்கியால் சுட்டனர். அதில் ஒருவரது துப்பாக்கி கோளாறு காரணமாக இயங்காமல் போனதால், டைகர் ஷெராப் தப்பித்தார். இத்துப்பாக்கிச்சூட்டுக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி சூரத்தில் பறிமுதல் செய்யப்பட்டு, மும்பை கொண்டு வரப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)