8,000 ரூபாய் கூப்பனா, 10,000 ரூபாய் QR Code டோக்கனா? மக்களை விலை பேசும் மலிவான அரசியல்

Apr 17, 2026 - 20:01
 0
8,000 ரூபாய் கூப்பனா, 10,000 ரூபாய் QR Code டோக்கனா? மக்களை விலை பேசும் மலிவான அரசியல்

தேர்தல் வந்துவிட்டாலே நம் ஊர்கள் களைகட்டிவிடும். சுவரொட்டிகள், மேடைப் பேச்சுகள் ஒருபுறம் இருந்தாலும், திரைக்குப் பின்னால் நடக்கும் `கவனிப்பு' நாடகங்கள் தான் உச்சகட்டமாக இருக்கும். ஜனநாயகத் திருவிழா என்பதை விட, `பட்டுவாடா பெருவிழா' என்று சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும்.

கூப்பனா, QR Code டோக்கனா?
கூப்பனா, QR Code டோக்கனா?

காகிதத்தில் ஏழைகள்... களத்தில் கோடீஸ்வரர்கள்!

தேர்தல் நாடகத்தின் முதல் காட்சி வேட்புமனு தாக்கலில் தொடங்குகிறது. வேட்பாளர்கள் தங்கள் சொத்துப் பட்டியலைத் தாக்கல் செய்யும்போது, அதைச் படிக்கும் சாதாரண நடுத்தரக் குடிமகனுக்கே கண்ணீர் வந்துவிடும். "அடப்பாவமே, இவருக்குச் சொந்தமா ஒரு கார்கூட இல்லையாமே, வங்கிக் கணக்கில் வெறும் பத்தாயிரம் ரூபாய் தானாமே!" என்று நாமே அவர்களுக்குக் கொஞ்சம் நிதி திரட்டிக் கொடுக்கலாமா என்று தோன்றும் அளவுக்கு `ஏழைகளாக' காட்சியளிப்பார்கள்.

ஆனால், களத்தில் இறங்கியதும் எங்கிருந்துதான் இந்த ஏழைகளுக்கு அள்ள அள்ளக் குறையாத அட்சய பாத்திரம் கிடைக்கிறதோ தெரியாது! கோடிக்கணக்கில் செலவுகள், ஆடம்பரப் பிரசாரங்கள் எனத் தேர்தல் களமே பண மழையில் நனையும். காகிதத்தில் இல்லாத சொத்துக்கள் எல்லாம் கரன்சிகளாகக் களத்தில் எப்படி மாறுகின்றன என்பது தேர்தல் ஆணையத்திற்கே வெளிச்சம்!

`டிஜிட்டல்' இந்தியா!

முன்பெல்லாம் ஓட்டுக்குப் பணம் கொடுக்க வேண்டும் என்றால், இருட்டில் வந்து ரகசியமாக ஒரு கவரைக் கொடுத்துவிட்டுப் போவார்கள். ஆனால், இப்போது காலம் மாறிவிட்டது; பட்டுவாடாவும் அப்டேட் ஆகிவிட்டது! வாக்காளர்களைக் கவர்வதற்காகச் சிலிக்கான் வேலி இன்ஜினியர்களை விட அதிகமாக மூளையைக் கசக்குகிறார்கள் நம் அரசியல்வாதிகள்.

கூப்பனா, QR Code டோக்கனா?
கூப்பனா, QR Code டோக்கனா?

பணமாகத் தந்தால் பிடிபட்டு விடுவோம் என்று, எந்தக் கடையில் வேண்டுமானாலும் ஸ்கேன் செய்து பொருட்களை வாங்கிக் கொள்ளும் நவீன க்யூ-ஆர் கோடு டோக்கன்கள்! பல்பொருள் அங்காடிகளில் பல ஆயிரங்களுக்குப் பொருட்களை வாங்கிக் கொள்ள சிறப்பு `டிஸ்கவுண்ட்' கூப்பன்கள். மேலோட்டமாகப் பார்த்தால் ஸ்வீட் பாக்ஸ் போலத் தெரியும். ஆனால், அடியில் பல `இனிப்பான' கரன்சி ஒளித்து வைக்கப்பட்டிருக்கும் கிஃப்ட் பாக்ஸ்கள்! இப்படி ஒவ்வொரு தரப்பும் புதுப்புது ஐடியாக்களுடன் களமிறங்கி, ஏலம் கேட்கத் தொடங்கிவிட்டார்கள்.

இதுவா ஜனநாயகம்?

ஐந்து வருடங்கள் ஆட்சியில் இருந்தபோதோ, அல்லது எதிர்க்கட்சியாக இருந்தபோதோ மக்களைத் திரும்பிப் பார்க்காதவர்கள், தேர்தலுக்குச் சில நாட்களுக்கு முன் மட்டும் `மக்கள் சேவகன்' என்று காலில் விழ வருகிறார்கள். பணத்தைக் கொடுத்து வாக்குகளை வாங்கிவிட்டால், அடுத்த ஐந்து வருடங்களுக்குக் கேள்விகேட்க யாருக்கும் உரிமை இல்லை என்ற அகம்பாவம்தான் இந்த நூதனப் பட்டுவாடாக்களுக்குக் காரணம்.

இந்த க்யூ-ஆர் கோடுகளை உருவாக்குவதற்கும், கூப்பன்களை அச்சிடுவதற்கும், ஸ்வீட் பாக்ஸ்களைச் சப்ளை செய்வதற்கும், அதிகாரிகளின் கண்களில் மண்ணைத் தூவுவதற்கும் இவர்கள் செலவழிக்கும் மூளையையும், நேரத்தையும், பணத்தையும் கொஞ்சமாவது மக்கள் நலனில் செலுத்தியிருந்தால் இதெல்லாம் தேவைப்பட்டிருக்காது.

கூப்பனா, QR Code டோக்கனா?
கூப்பனா, QR Code டோக்கனா?

ஐந்தாண்டுகள் நேர்மையாக உழைத்து, மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்து கொடுத்து, அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தியிருந்தால் தானாக ஓட்டு விழுந்திருக்கும்.

கூப்பன்களையும் டோக்கன்களையும் தரக் கூடாது என்று தேர்தல் கமிஷன் தடை விதித்தாலும் அந்தத் தடைக்கற்களை எல்லாம் படிக்கற்களாக மாற்றத் துடிக்கும் அரசியல்வாதிகளே... `மக்களுக்கு நல்லது செய்தாலே போதும், அவர்கள் மனமுவந்து வாக்குகளை அளிப்பார்கள்’ என்கிற எளிய உண்மையை உணர்ந்துகொண்டால் இவ்வளவு கஷ்டம் இருக்காதுதானே!

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0