'பேமென்ட் 1 லட்சம்; 2 AC ரூம் கட்டாயம்' - பில் போடும் நாஞ்சில் சம்பத்? ; விழிபிதுங்கும் தவெகவினர்!
தவெகவின் பரப்புரைச் செயலாளரான நாஞ்சில் சம்பத் வாகன பிரசாரங்களிலும் பொதுக்கூட்டங்களிலும் பேச விதிக்கும் கண்டிஷன்களாலும் பாக்கெட்டை பதம் பார்க்கும் அளவுக்கு போடும் பில்லாலும் தவெக வேட்பாளர்களும் நிர்வாகிகளும் விழிபிதுங்கி போயிருப்பதாக கிசுகிசுக்கின்றனர் கட்சி வட்டாரத்தினர்.
நாஞ்சில் சம்பத்தை தங்கள் ஊர் பிரசாரத்திற்கு பேச அழைத்து அனுபவப்பட்ட தவெக நிர்வாகிகள் சிலர் நம்மிடம் பேசுகையில், 'எங்கள் தலைவர் எல்லா ஊருக்கும் எல்லா தொகுதிக்கும் போய் பிரசாரம் செய்வார் என எதிர்பார்த்தோம். அது நடக்கவில்லை. பொதுச்செயலாளர் தொடங்கி இரண்டாம் கட்ட தலைவர்கள் வரைக்கும் ஏன் தொலைக்காட்சி விவாதங்களில் பேசும் செய்தித் தொடர்பாளர்கள் வரைக்கும் எல்லாரும் ஆளுக்கொரு தொகுதியை பிடித்துக் கொண்டு வேட்பாளராக நிற்கிறார்கள்.
அவர்களால் சொந்தத் தொகுதியை விட்டு வெளியில் வர முடியவில்லை. அப்படியிருக்க எந்த செல்வாக்கும் இல்லாமல் மக்கள் இயக்கத்திலிருந்து வந்த எங்களுக்காக பிரசாரம் செய்ய ஒன்றிரண்டு பேரை தவிர ஆளே இல்லை. இந்த சூழலைத்தான் நாஞ்சில் சம்பத் போன்றோர் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள். நாஞ்சில் சம்பத்தின் உறவுக்காரப் பையன் ஒருவர்தான் அவரின் தேதிகளை பார்த்துக் கொள்கிறார். அவரை அழைத்து ஐயா எங்கள் தொகுதியில் பேச வேண்டுமென்றால் எங்கே எந்த தொகுதி என்றெல்லாம் கேட்காமல் எடுத்த எடுப்பிலேயே 'ஒரு ரூபாய் ஆகுமே..' என்கிறார். 
கொஞ்சம் பார்த்து செய்யுங்கள் என்றால், 'ஐயாவுக்கு வயதாகிவிட்டது. அவர் எவ்வளவு பெரிய சீனியர்...உங்களுக்காக கொஞ்சம் குறைத்து 75000 ரூபாய்க்கு முடிக்கிறேன். சீக்கிரம் தேதியை சொல்லுங்கள்' என அவசரப்படுத்துகிறார். சரி ஒரே அமௌண்டாக கொடுத்து முடித்துவிடலாம் என்றால் அதுவும் இல்லை. டிராவலுக்கு தனியாக 10000 ரூபாய் ஜிபே செய்ய சொல்கிறார். தங்குவதற்கு நல்ல சௌகரியமான ஹோட்டலில் 2 AC ரூம்களை கேட்கிறார். ஒன்று நாஞ்சில் சம்பந்துக்கும் இன்னொன்று அவருடன் இருக்கும் அந்த பையனுக்குமாம். இதுபோக பிக் & டிராப் மற்றும் இதரச் செலவுகள் வேறு.
அவரை ஒரு கூட்டத்துக்கு பேச அழைத்தால் குறைந்தபட்சமாக 1.5 லட்ச ரூபாயிலிருந்து 2 லட்ச ரூபாய் வரை செலவு செய்ய வேண்டியிருக்கிறது. இருப்பவர்களிடம் போய் கேட்டால் கூட பரவாயில்லை. 'தம்பி விஜய் ஆட்டோ ஓட்டுபவரையும் சைக்கிள் கடை வைத்திருப்பவரையுமென எளிய பிள்ளைகளை வேட்பாளர்களாக நிறுத்தியிருக்கிறார்' என்று பேசுகிறார். அந்த எளிய பிள்ளைகள் அரசியல் மாற்றத்துக்காக தெருவில் நிற்கும் போது லட்சத்தில் பேரம் பேசுவது அறமா? எங்களால் இயன்ற தொகையையும் அவருக்கான வசதியையும் மகிழ்ச்சியாக அளிக்க தயாராக இருக்கிறோம். ஆனால், அவரோ உதவியாளருக்கும் சேர்த்து நம் தலையில் பில்லை கட்டுகிறார்' எனக் குமுறுகின்றனர்.
மேலும் பேசியவர்கள், 'இவ்வளவையும் செய்தாலும் டைமரை ஓடவிட்டு பேசுவதை போல அளந்துதான் பேசுகிறார். மேடை என்றால் 40-45 நிமிடம். பிரசார வாகனம் என்றால் ஒரு பாய்ண்ட்டுக்கு 10 நிமிடம். எல்லா இடத்திலும் பேசிய பொருளையே மீண்டும் மீண்டும் பேசுகிறார். 'சிவாஜி ஓட்டையே கள்ள ஓட்டா போட்ட கும்பல் இது' என ஒரே கதையை எல்லா இடத்திலும் வசனம் மாறாமல் ஒப்பிக்கிறார். கேட்கிற மக்களுக்கு எந்த சுவாரஸ்யமும் இல்லை' என வேதனைப்படுகின்றனர்.
கட்சி சார்பில் பரப்புரைச் செயலாளராக நியமிக்கப்பட்டவர் நாஞ்சில் சம்பத். பரப்புரையில் ஈடுபட வேண்டியது அவரது பொறுப்பு. அதற்கு இத்தனை கறாராக பில் போடுவது என்ன நியாயம்? என்கின்றனர் நிர்வாகிகள். தலைமை தலையிட்டு இந்த பேமண்ட் விவகாரத்தை ஒழுங்குப்படுத்த வேண்டுமென நிர்வாகிகள் விரும்புகின்றனர்.
இதுசம்பந்தமாக நாஞ்சில் சம்பந்திடம் விளக்கம் கேட்க தொடர்புகொண்டோம். 'மாலை 4.30 க்கு மேல் அழையுங்கள்' என அவர் தரப்பில் கூறப்பட்டது. நாமும் பின்னர் அழைத்து பார்த்தோம், அழைப்பை ஏற்கவில்லை. நாஞ்சில் சம்பத் தரப்பில் உரிய விளக்கம் கொடுத்தால் பரிசீலித்து அதையும் வெளியிடுவோம்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0