Delimitation: தொகுதி மறுவரையறையில் அண்டா நமக்கு; பிரியாணி அவங்களுக்கா?

Apr 16, 2026 - 19:31
 0
Delimitation: தொகுதி மறுவரையறையில் அண்டா நமக்கு; பிரியாணி அவங்களுக்கா?

இந்தியாவில் `தொகுதி மறுவரையறை' (Delimitation) என்ற பெயரில் எதிர்காலத்தில் ஒரு பிரமாண்டமான அரசியல் மேஜிக் ஷோ நடக்கப்போகிறது.

சிறு வயதில் பள்ளியில் ஒரு லாஜிக் சொல்வார்கள், நன்றாகப் படித்து வாத்தியார் பேச்சைக் கேட்டு நடக்கும் மாணவனுக்குப் பரிசு கிடைக்கும், படிக்காதவனுக்குத் தண்டனை கிடைக்கும் என்று. ஆனால், நமது தொகுதி மறுவரையறை லாஜிக் என்னவென்றால், வகுப்பில் அமைதியாகப் படித்து, ஆசிரியர் பேச்சைக் கேட்டு நடந்த மாணவனைப் பார்த்து, "நீ ரொம்ப நல்ல பையனா இருக்கியே, அதனால உனக்கு இனிமேல் கிளாஸ் லீடர் பதவி கிடையாது. அதோ அங்க சும்மா உக்காந்து இருக்கான் பாரு அவன்தான் இனிமே லீடர்" என்று சொல்வது போலத்தான் இது!

Delimitation
Delimitation

நாம் இருவர் நமக்கு இருவர்

எழுபதுகளில் மத்திய அரசு `நாம் இருவர் நமக்கு இருவர்' என்று சொன்னதும், தென்னிந்திய மாநிலங்கள், குறிப்பாகத் தமிழ்நாடு, அதை ரொம்ப சீரியஸாக எடுத்துக்கொண்டு குடும்பக் கட்டுப்பாடு செய்து மக்கள்தொகையைக் குறைத்தது. ஆனால், வட மாநில அரசுகளோ சாதுர்யமாகச் செயல்படாமல், "நாம் இருவர், நமக்கு ஒரு கிரிக்கெட் டீம்" என மக்கள் தொகையை ராக்கெட் வேகத்தில் ஏற்றின. இதனால், அதிகம் பாதிக்கப்பட்டது அம்மாநிலத்தைச் சேர்ந்த உழைக்கும் மக்கள்தான்.

இப்போது பல வருடங்கள் கழித்து மத்திய அரசு சொல்கிறது, "எந்த ஊரில் ஆட்கள் அதிகமோ, அவர்களுக்குத்தான் இனி நாடாளுமன்றத்தில் எம்.பி சீட் அதிகம்" என்று! அடப்பாவிகளா, மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தியதற்குக் கிடைத்த பரிசு, நாடாளுமன்றக் கட்டுப்பாட்டை இழப்பதுதானா?

அதாவது, ஒரு பெரிய ஹோட்டலில் சாப்பிடாமலே தென்னிந்தியா பில் கட்டுகிறது, அதே ஹோட்டலில் பில் கட்டாமல் வட இந்தியா தனக்குப் பிடித்த மெனு கார்டை முடிவு செய்கிறது.

லாஜிக்படி பார்த்தால்...

பொருளாதார ரீதியாக இந்தியாவின் ஜிஎஸ்டி மற்றும் வரி வருவாயில் பெரும்பகுதியை அள்ளிக் கொடுப்பது தென் மாநிலங்கள்தான். ஆனால், இந்தத் தொகுதி மறுவரையறை மட்டும் அமலுக்கு வந்தால், காசு கொடுப்பது நாமாக இருப்போம், ஆனால் ஆட்சி அதிகாரமும் நாடாளுமன்றப் பெரும்பான்மையும் வட மாநிலங்களின் கைகளுக்கு முழுமையாகச் சென்றுவிடும்.

Delimitation
Delimitation

"இந்தத் தொகுதி மறுவரையறையின் அவசியம்தான் என்ன?" என்று சட்டப்புத்தகத்தைப் புரட்டினால், "மக்கள்தொகைக்கேற்ப சமமான பிரதிநிதித்துவம் தர வேண்டும்" என்று ஜனநாயகத்தின் பெயரால் நியாயம் பேசுவார்கள். லாஜிக்படி பார்த்தால், ஒரு மாநிலம் சிறப்பாகச் செயல்பட்டு மனிதவள மேம்பாட்டில் சாதித்தால் அதற்கு அதிக அதிகாரம் தர வேண்டும். ஆனால் இங்கே, "நீங்கள் மருத்துவத்தில் பெஸ்ட், கல்வியில் பெஸ்ட், உள்கட்டமைப்பில் பெஸ்ட், வறுமை ஒழிப்பில் பெஸ்ட்... ஆஹா எவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டிருக்கிறீர்கள், இதோ உங்கள் மாநிலத்தின் எம்.பி சீட்டுகளைப் பாதியாகக் குறைக்கிறோம்" என்று ஒரு விசித்திரமான 'ரிவார்டு' கொடுக்கிறார்கள்.

மாஸ்டர் பிளான்

தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இதை `தென் மாநிலங்களுக்கு இழைக்கப்படும் மாபெரும் வஞ்சகம்' என்று கொதிப்பதில் எந்தத் தவறும் இல்லை. ஏனென்றால், இதன் பின்னணியில் உள்ள மத்திய அரசின் உள்நோக்கத்தைப் பார்த்தால் ஒரு விஷயம் தெளிவாகப் புரிகிறது.

"தென்னிந்தியாவில், குறிப்பாகத் தமிழ்நாட்டில், நாமும் என்னென்னவோ செய்து பார்க்கிறோம், ஜெயிக்கவே முடியவில்லை. சரி, பேசாமல் அவர்கள் மாநிலத்தின் அரசியல் மதிப்பையே குறைத்துவிட்டால் என்ன?" என்ற மத்திய பா.ஜ.க அரசின் மாஸ்டர் பிளானாகவே எதிர்க்கட்சிகளால் இது பார்க்கப்படுகிறது.

Delimitation
Delimitation

எதிரியின் கோட்டையைப் பிடிக்க முடியாவிட்டால், அந்தக் கோட்டையை அரசியல் வரைபடத்தில் இருந்தே சிறிதாக்கிவிடும் வித்தை இது! மொத்தத்தில், தொகுதி மறுவரையறை என்பது, நாம் கஷ்டப்பட்டு டயட் இருந்து உடல் எடையைக் குறைத்து ஆரோக்கியமாக மாறிய பிறகு, "நீங்க ரொம்ப ஒல்லியா இருக்கீங்க, அதனால உங்களுக்கு ரேஷனில் அரிசி கிடையாது" என்று சொல்லிவிட்டு, பக்கத்து இலையில் பாயாசத்துடன் வகைதொகையில்லாமல் சாப்பிட்டுக்கொண்டிருப்பவர்களுக்கு பிரியாணி அண்டாவைத் தூக்கிக் கொடுப்பது போலத்தான். இதனால், நம் சகோதரர்களான வடமாநிலத்தவர்களும் பலனடைவார்களா என்றால், அதில் எந்தத் தெளிவும் உறுதியும் இல்லை.

நிலைமை இப்படியே சென்றால், இனிமேல் அரசியல் கட்சிகள் தமிழ்நாட்டில் "எங்களுக்கு வாக்களியுங்கள்" என்று கேட்பதை விட, "தயவுசெய்து ஆளுக்கு நாலு குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளுங்கள், அப்போதுதான் நம் மாநிலத்திற்கு எம்.பி சீட் தப்பும்" என்று பிரசாரம் செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஆக, இந்தியாவின் எதிர்கால அரசியல் அதிகாரம் என்பது ஐடி கம்பெனிகள் கட்டுவதிலோ, தொழில் வளர்ச்சியிலோ இல்லை; அது அதிக குழந்தை பெத்துக்கொள்வதில்தான் ஒளிந்திருக்கிறது என்று அபத்தமாகச் சொன்னாலும் ஆச்சரியம் இல்லை!

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0