நாகப்பட்டினம்: ரூ.270 கோடி மதிப்பிலான 135 கிலோ மெத் கடத்தல்; சிக்கிய தவெக நிர்வாகி; 4 பேர் கைது
நாடப்பட்டினம் சிந்தாமணி மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் பூபாலன்(42) தவெக-வில் மாவட்ட செயற்குழு உறுப்பினர். இவரது மனைவி பிரேமியா இலங்கையைச் சேர்ந்தவர். வழக்கறிஞரான பூபாலன் தவெகவின் நாகை மாவட்டச் செயலாளர் சுகுமாறனின் நெருங்கிய ஆதரவாளர் என்கிறார்கள். கட்சி ரீதியிலான சுகுமாறனின் சில செலவுகளை பூபாலன் செய்துள்ளதாகச் சொல்லப்படுகிறது.

நாகையில் இருந்து கடல் மூலமாக இலைங்கைக்கு மெத்தபெட்டமைன் போன்ற உயர் ரக போதைப்பொருள் கடத்தப்படுவதாகத் தொடர்ந்து தகவல் வெளியாகி வந்தன. இதுபோன்ற புகார்கள் கிளம்பியும் கடத்தல் சம்பவங்கள் குறையவில்லை எனவும் பேசப்பட்டு வந்தது.
நாகை கடற்பகுதியில் இருந்து போதைப்பொருளைக் கடத்திச் சென்று நடுக்கடலில் இலங்கையில் இருந்து வரும் படகில் மாற்றி விடுவதாக புகார் எழுந்தது.
வேளாங்கண்ணி அருகே உள்ள பிரதாபராமபுரத்தைச் சேர்ந்தவர் சுகன் என்கிற சுதாகன். இவரது வீட்டில் மெத்தபெட்டமைன் பதுக்கி வைத்து கடத்தப்படுவதாக தகவல் வெளியானது. இதைத்தொடர்ந்து மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்படும், மத்திய வருவாய் புலனாய்வு இயக்குநரகத்தின் திருச்சி மண்டல அதிகாரிகள் 16 பேர் குழுவாக நேற்று சுகன் வீட்டில் அதிரடிச் சோதனை நடத்தினர்.

அப்போது இலங்கைக்குக் கடத்துவதற்காகப் பதுக்கி வைத்திருந்த 135 கிலோ மெத்தபெட்டமைன் பறிமுதல் செய்தனர். மேலும் சுகன் வீட்டில் இருந்த அவரது நண்பர்களான மணிகண்டன், சதீஷ்குமார் ஆகியோரிடமும் விசாரணை நடத்தினர். இதில் கடத்தலில் இவர்களுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. மூன்று பேரிடமும் நடந்த விசாரணையில் தவெக நிர்வாகி பூபாலனைக் கைகாட்டியுள்ளனர்.
இதையடுத்து மத்திய வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் பூபாலன் வீட்டில் சோதனை நடத்தி விசாரணை மேற்கொண்டனர். இந்தக் கடத்தலுக்கு மூளையாக பூபாலன் செயலப்பட்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து பூபாலன், சுகன், மணிகண்டன், சதீஷ்குமார் ஆகிய நான்கு பேர் கைது செய்தனர்.
நான்கு பேரிடமும் தீவிர விசாரணை தொடர்ந்து வருகிறது. பறிமுதல் செய்யப்பட்ட மெத்தின் மதிப்பு ரூ.270 கோடி இருக்கும் என்கிறார்கள். இந்த விவகாரம் பெரும் பரபரப்பைக் கிளப்பிய நிலையில் எதிர்க்கட்சியினர் சமூக ஊடகங்களில் கடுமையாக விமர்சனத்தை முன் வைத்தனர்.

இதையடுத்து மாவட்ட செயலாளரான சுகுமாறன், பூபாலனை தவெகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்துன் நீக்குவதாக அறிக்கை வெளியிட்டார்.
இதுகுறித்து விபரம் அறிந்த தரப்பில் பேசினோம், ''ஏற்கனவே மெத் கடத்தல் வழக்கில் புல்லட் மகாலிங்கம் மற்றும் அவரது மகன் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கின்றனர். நாகை கடல் வழியாக இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தப்படுவதாகப் பரவலாகப் பேசப்பட்டு வந்தது.
தவெக நிர்வாகி பூபாலன் மாவட்டச் செயலாளர் சுகுமாறனுக்கு நெருக்கமானவர். இவர் மீது கடத்தல் சர்ச்சைகள் எழுந்த நிலையிலும் சுகுமாறன் கண்டுகொள்ளவில்லை. சுகுமாறனுக்குச் சில செலவுகளை பூபாலன் செய்து கொடுத்ததால் அவரது நடவடிக்கையைக் கண்டு கொள்ளவில்லை என்கிறார்கள்.
பூபாலனின் நண்பர் சுகன் வேளாங்கண்ணியில் உள்ள விடுதி ஒன்றை லீஸ்க்கு எடுத்து நடத்தி வந்தார். ஏற்கனவே பூபாலனுக்குக் கடத்தலில் நல்ல லிங்க் உள்ளது. இவரது மனைவி பிரேமியா மூலமாக ஸ்கெட்ச் போட்டு கடத்தலில் ஈடுப்பட்டார் என்கிறார்கள்.
பின்னர், சுகன் உள்ளிட்டவர்களைக் கூட்டு சேர்த்து கொண்டு லாட்ஜில் வைத்து திட்டம் போட்டு மெத் கடத்தியுள்ளார் பூபாலன். தற்போது 135 கிலோ மெத் கடத்தலுக்குத் திட்டம் போட்டுள்ளனர். இதுகுறித்த தகவல் கிடைத்ததும் மத்திய வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் களத்தில் இறங்கினர்.
இதில் கடத்துவதற்காக சுகன் வீட்டில் இருந்த 135 கிலோ மெத், கத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட கார், டூவீலர் உள்ளிட்டவைகளைப் பறிமுதல் செய்தனர். பூபாலன் வீட்டில் இருந்தும் மெத் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகச் சொல்கிறார்கள். ஏற்கனவே பல்வேறு சர்ச்சைகளில் அடிபட்டு வரும் சுகுமாறன் கடத்தலில் ஈடுப்பட்டவரை கட்சியில் பொறுப்பு வழங்கி தன் விசுவாசியாக வைத்திருந்ததும் விமர்சனமாகியிருக்கிறது'' என்றனர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)