திகிலை வென்ற அனுபவம் -சிறுகதை
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
இந்தத் தலைமுறை கண்டு அனுபவித்த போதாத காலத்தின் மிக மிக கொடுமையான காலகட்டம் அது.
மனித இனமே உயிரை கையில் பிடித்துக் கொண்டு ஊண் உறக்கம்இல்லாமல், நல்லது கெட்டதுக்கு செல்லாமல்,பள்ளி கல்லூரி, அன்றாடப் பணிகள், போக்குவரத்து என மக்களின் அனைத்து இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டு கொரோனாவின் நரகப்பிடியில் உலகமே சிக்கித் தவித்த நேரத்தில் மாயைகளைப் பின் தள்ளி தன்னம்பிக்கையுடன் செயல்பட்ட இரு பெண்களின் அனுபவக் கதையிது.
மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரக் கிராமம் அது. இரண்டு மைல் தாண்டி வந்தால் தான் சாதாரண சாலை,ஐந்து மைல் தாண்டினால் போக்குவரத்து சாலை என வசதி!!
படைத்த கிராமப்புற அமைப்பு. மலைமீது அங்கொன்றும் இங்கொன்றுமாக வீடுகள், மிகக்குறைவான மனிதர்கள், அடிப்படை வசதிகள் குறைந்த வாழ்க்கைத்தரம் என்ற நிலையிலுள்ள கிராமம்.
கந்தசாமி இங்குள்ள மூத்த குடிமக்களில் ஒருவர். விவசாயத் தொழிலே தெய்வமென்று வாழ்ந்தவர். நல்ல பாட்டாளி. பணப்பற்றும் இனப்பற்றும் மிகுந்தவர். ஜாதி பார்த்து பழகுவார்.உயர்ந்த குடிப்பிறப்பாக தன்னை எண்ணும் அவர் அந்த வட்டத்தை விட்டு வெளியில் வரமாட்டார்.பத்து ஆண்டுகளுக்கு முன் மனைவி மங்கம்மா காலமாகிவிட்டார்.ஒரே மகன் குருமூர்த்தி சியாச்சின் பகுதியில் பட்டாளத்து வேலையில் இருப்பதில் பெரியவருக்கு பெருமிதம் அதிகம். தோட்டத்தில் மருமகளும் இவரும் மட்டும்தான். கூலியாட்களும் ஊருக்குப் போய்விட்டனர்.
மருமகள்செம்பவளம்(செம்பா) கொடைக்கானல் பண்ணைக்காடு பகுதியை சேர்ந்தவள்.நம்ம கந்தசாமியின் சொந்தத் தங்கச்சி மகள்தான். நிறைமாத கர்ப்பிணி. பிரசவத்துக்கு தாய் வீடு செல்ல முடியாமலும்,தாய் இங்கே வரமுடியாமலும் பொல்லாத கொரோனா தடுத்தது.
மாட்டு சாளையை சுத்தம் செய்து விட்டு மாடுகளுக்கும் மேவு போட்டுட்டு வாய்க்கால் தண்ணியில் கைகால் அலம்பி கழுவியதும் திண்ணையில் வந்து உக்காந்தபெரியவர்"கண்ணூ!செம்பா!நெறயா கருப்பட்டி போட்டு ஒரு சொம்பு வரக்காப்பி கொண்டு வாம்மா!" என்று உள்பக்கம் பாத்து சத்தமாக சொன்னார்.சொல்லி பத்து நிமிக்ஷத்துக்கு மேலாகியும் எந்தப் பதிலும்வரவில்லை.இவர் கேட்ட வரக்காப்பியையும் காணோம்.
என்னாச்சு இந்தப்புள்ளைக்கு?!சத்தத்தையே காணமே? என்றவர் மெல்ல உள்ளே எட்டிப்பார்த்தார். படுக்கையிலிருந்து எந்திரிக்காத செம்பாவிடமிருந்து அனத்தல் சத்தம் மட்டுமே வந்தது.
" கண்ணூ...,சாமி...,செம்பா!என்னாச்சும்மா?மேலு கீலு சுடுதா? சொல்லு தாயி"என்று கேட்டார்.
பெரியவர் குரல் கேட்டு எந்திரிச்ச செம்பா "இல்ல மாமா! ஏனோ அடிவயிறு வலிக்கிது. குழந்தையோட அசைவு கொஞ்சம் ஜாஸ்தியா இருக்குது. மூச்சிரைக்கற மாதிரி இருக்கு" என்று பலஹீனமான குரலில் சொன்னாள்.
கந்தசாமிக்கு ஏதோ புரிந்த மாதிரியும் இருந்தது. புரியாத மாதிரியும் இருந்தது. நெஞ்சுக்குள் பந்து வந்து அடைத்தது போன்ற உணர்வு ஏற்பட்டது. "ஐயோ கடவுளே!துணைக்குக் கூட யருமில்லியே, வெள்ளிங்கிரி ஆண்டவா...!பேரூர் பட்டீஸ்வரா...குறிஞ்சி ஆண்டவா...!குழந்தைக்கு நல்ல வழி காட்டு.திக்கத்தவங்களுக்கு தெய்வமே துணை"என்று கிழக்கு நோக்கி கை கூப்பி கும்பிட்டார்.

செம்பா தங்கம்!,கண்ணூ! இந்தா இந்தத் தண்ணியக் குடி, பயப்படாதே. ஒண்ணுஞ் சிரமப்படாதே, பொறுத்துக்கோ.
தைரியமா இரு. நானு வெளியிலே நின்னு சொல்லறத எல்லாம் செய்யு கண்ணூ! நாம கும்பிடற கடவுள் நம்மள கையுட மாட்டாரு," என்று சொல்லி கதவை பாதி மட்டும் சாத்தி விட்டு வெளிய வந்து நின்றார்.
"ஒண்டிமுனிய கும்பிட்டுக்கோ!" என்றார்.
உள்ளிருந்து பதில் இல்லை.
இரண்டு நிமிடம் கழிச்சு மறுபடியும் கூப்பிட்டார்.
இப்போதும் பதில் இல்லை.
பிறகு ரொம்ப சத்தமாக
'ஒண்டிமுனிய கும்பிட்டியா செம்பா! செம்பா !
உளமாற கும்பிட்டனே மாமா! மாமா!
இருமுடிநாதனை கும்பிட்டியா செம்பா! செம்பா!
இருகை கூப்பி கும்பிட்டனேமாமா! மாமா!
மும்மூர்த்தியை கும்பிட்டியா செம்பா! செம்பா!
முட்டி போட்டு கும்பிட்டனே மாமா !
மாமா!
நான்முகனை கும்பிட்டியா செம்பா! செம்பா!
நெஞ்சுருக கும்பிட்டனே மாமா! மாமா!
ஐங்கரனை கும்பிட்டியா செம்பா! செம்பா!
அஞ்சுதரம் கும்பிட்டனே மாமா! மாமா!
ஆறுமுகனை கும்பிட்டியா செம்பா! செம்பா!
ஆறுதல் தர கும்பிட்டனே மாமா! மாமா!
கந்தசாமி ஏழு, எட்டு,ஒன்பது என அடுக்கிட்டே போக வலி பொறுக்க முடியாத செம்பா ஒரு கட்டத்துலே "யோவ் மாமா,கும்பிட்டதெல்லாம் போதும் யாரையாச்சும் கூப்பிடு! என்னாலே முடியலே, விட்டா நானே உருண்டு கீழே போயிடுவேன்", என்று கூப்பாடு போட நிலைமை மோசமாவதை உணர்ந்து வரப்பு ஓரம் வந்து பார்த்தார்.
கண்ணுக்கெட்டிய தூரம் வரை யாருமில்லை. திடீர்னு ஆடுகளின் சத்தம் கேட்டது. திரும்பிப் பார்த்தால் ஆடுகளின் பின்னால் கன்னியம்மா கிழவி குச்சியோடு வந்துட்டிருந்தா. பட்டியலின கிழவியை வீட்டுக்குள் அனுமதிக்க ஒருகணம் யோசித்தார். செம்பாவின் அலறல் சத்தம் அதிகமாகவே கை தட்டி கூவி அழைத்தார்.
பயந்துபோய் ஓடிவந்த அவளிடம் நிலைமையை கூறினார். வீட்டுக்குள் கால் வைக்க தயங்கி நின்றபோது செம்பாவின் கதறல் தானாக உள் இழுத்தது. திரும்ப வெளியே வந்தவள் "ஐயா!
கொஞ்சம் சுடு தண்ணி, சுத்தமான பிளேடு இல்லைன்னா கத்தி, வேட்டி ரெண்டு குடுங்க. கீழே கோயில் வாசல்லே எங்க பசங்க மூணுபேர் குண்டாடிட்டு இருந்தாங்க ,அவங்களப்போய் மெயின் ரோட்லே இருக்கிற டாக்டர் , நர்ஸ் யாரையாவது கூட்டிட்டு வரச்சொல்லுங்க. பனிக்குடம் ஒடைஞ்சுருச்சு. சீக்கிரம் போங்க", என்றாள்.

அதிகாரம், பணம் பந்தா சாதி உணர்வு எல்லாத்தையும் மலைச் சரிவுலே உதறிவிட்டு ஓடினார் கந்தசாமி.
மீண்டும் செம்பா அருகில் வந்த கன்னியம்மா, அவளின் தலையை கோதிவிட்டு "பயப்படாதே கண்ணூ! இந்த மாதிரி நேரத்திலே மன தைரியந்தான் முக்கியம். பட்டாளத்தான் பொண்டாட்டி நீ, உனக்கு துணிச்சலுக்கு சொல்லித் தரத் தேவையில்ல."
"முன் நெத்தி வேர்த்திருக்கு மூக்கு சிவந்து வெடைச்சிருக்கு
பனிக்குடம் ஒடைஞ்சு தண்ணி வழியுது. கர்ப்பப் பை வாய் திறந்திருக்கு, குழந்தையோட தலை உச்சி தெரியுது. வலியும் தொடர்ச்சியாக இருக்குது.நல்லா தம் கட்டி மூச்சடக்கி கீழ் நோக்கி முக்கித் தள்ள முயற்சி பண்ணு. பயப்படாதே."
" டாக்டரை கூப்பிட ஆள் போயிருக்காங்க. இப்ப வந்துடுவாங்க. வலி அடிக்கடி நல்லா எடுக்குது. வர்ற வலியை வீண் பண்ணாம உன்னோட வலு அத்தனையும் குடுத்து தள்ளிவிடு. ஆமாமா அப்படித்தான் கெட்டிக்காரப்பொண்ணு. விடாதே, பாப்பா உன்னைய கஷ்டப்படுத்தாம சீக்கிரம் வெளியே வந்துடும். பாப்பாவுக்கு மூச்சுத் திணறல் வராம இருக்க நீயும் சீக்கிரமாக தள்ளி வுடு தங்கம்.ஆ..... ஆமாமா அப்படித்தான் பொண்ணே! எஞ்சாமி,நல்லவழிபண்ணிட்ட சாமி. இனி பொறுமையா நல்லா மூச்சு விட்டுக்கோ. சுட்டிப்பையன் ஜம்முன்னு பூமிக்கு வந்துட்டான்."
" இனி எந்த வலியும் உனக்கில்ல கண்ணூ,இந்தா கொஞ்சம் தண்ணி குடிச்சுட்டு உன்னோட செல்வத்தை பார்த்துட்டு கண்ணை மூடி ரெஸ்ட் எடு." என்றாள் கன்னியம்மா. பட்ட வலி வேதனையை மறந்து சிரித்தாள் செம்பா.
இதற்குள் கந்தசாமியும் கன்னியம்மாளின் உறவுப் பசங்களும் வந்துட்டாங்க. கீழே யாரும் இல்லை எனச் சொன்னார்கள்.
குழந்தையை துடைத்து கந்தசாமியிடம் தந்துவிட்டு செம்பாவையும் பிரசவமான இடத்தையும் சுத்தம் செய்தாள் கன்னியம்மா. பசங்களுக்கு இது மிகப்பெரிய வியப்பாகவும் கன்னியம்மா கிழவியை நினைச்சு பெருமையாகவும் இருந்தது.
கந்தசாமிக்கு கன்னியம்மா காலில் விழவேண்டும் போல் இருந்தது. கையெடுத்து கும்பிட்டு மனசார நன்றி சொன்னார். கணக்கிட முடியாத அளவு கடவுள்களை கும்பிட்டாலும் தன்னால் விலக்கி ஒதுக்கப்பட்ட ஓர் உயிர் தான் இன்று தனது வம்சத்தை மீட்டுக்கொடுத்ததாக உணர்ந்தார். அவரது கண்களில் இருந்து வழிந்த கண்ணீர் அவரிடம் இதுவரை இருந்த சாதி வெறி, ஆணவம் , அகங்காரம் பணப்பெருமை எல்லாவற்றையும் கழுவிக்கொண்டு கீழே விழுந்து சிதறியது.
கைகளில் பஞ்சுப் பொதி போல் இருந்த பேரனைப் பார்த்த போது" சீக்கிரம் சியாச்சினுக்கு தகவல் அனுப்பு , நான் அப்பாவை பார்க்கணும்" என்று சொல்வது போல் இருந்தது.
"அய்யா! மருமகளை பக்குவமாக படுக்க வச்சுடடேன். பாத்துக்கங்க,நான் வர்றேனுங்க" என்ற கன்னியம்மாவிடம்,
" இரு தாயி! இனி நீ அந்த ஒழுகிற ஓலைக்குடிசையில தனியாஇருக்கவேண்டாம். பேரனை கூட்டிட்டு இங்கேய வந்து எங்களோடவே இரு.ஆடுகளுக்கு தோட்டத்திலெயே பெரிசா பட்டி கட்டிக்கலாம். இந்த கொரோனா சனியன் போனவுடன் நானே உம் பேரன் படிப்புக்கு ஏற்பாடு பண்றேன். எங்குட்டித் தங்கத்தை நீ தான் வளர்த்திக்கொடுக்கணும்" என்றார் கந்தசாமி.
"பூமிக்கு வந்த பூந்தளிர் பூகம்பத்தையே புஸ்வானம் ஆக்கும்போது இந்தக் கொரோனா எல்லாம் எம்மாத்திரம்?!" என்று பேசிக்கொண்டே பேரனையும் ஆடுகளையம் அழைதது வரக் கிளம்பினாள் கன்னியம்மா....
அனுப்புநர்,
நீலவேணி தேவராஜன்
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே...!
Link : https://chat.whatsapp.com/G7U0Xo0F63YA5PC6VgYMBQ
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)