இரவு பார்ட்டிக்கு எதிர்ப்பு, கேமரா மூலம் கண்காணிப்பு: ஆத்திரத்தில் மாமனாரை ஆள்வைத்து கொன்ற மருமகள்!

Sep 08, 2026 - 18:00
0
இரவு பார்ட்டிக்கு எதிர்ப்பு, கேமரா மூலம் கண்காணிப்பு: ஆத்திரத்தில் மாமனாரை ஆள்வைத்து கொன்ற மருமகள்!

உத்தரப்பிரதேச மாநிலம், கான்பூரைச் சேர்ந்தவர் வினீத் மினோச்சா (63). தொழிலதிபரான இவரின் மருமகள் பெயர், ஷாலு. சம்பவத்தன்று வினீத் அவரது வீட்டில் 26 முறை கத்தியால் குத்திக் கொலைசெய்யப்பட்டார். இது தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரித்து வந்தனர். விசாரணையில் அங்கிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது வீட்டிற்கு முன்னாள் வேலைக்காரர் விஷாலும், அவரது கூட்டாளி ராஜ் கிஷோரும் வந்து சென்றது பதிவாகி இருந்தது. அவர்கள் எதற்காக வந்து சென்றனர் என்ற சந்தேகம் எழுந்தது.

இதையடுத்து அவர்கள் இரண்டு பேரையும் பிடித்துச் சென்று போலீஸார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் மினோச்சாவின் 36 வயது மருமகள் ஷாலுவின் உத்தரவின் பேரில் இந்தக் கொலை நடந்ததாக விஷால் கூறினார். கொலை செய்ய பணம் தருவதாக ஷாலு கூறியதும் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து ஷாலு கைது செய்யப்பட்டார்.

அவரிடம் விசாரித்தபோது அவர் போலீஸாரை தவறாக திசை திருப்ப முயன்றார், ஆனால் பின்னர் விசாரணையின் போது அவர் தனக்கு இக்குற்றத்தில் தொடர்பு இருப்பதை ஒப்புக்கொண்டார் என்று போலீஸார் தெரிவித்தனர்.

இது குறித்து போலீஸார் மேலும் கூறுகையில், ''ஷாலு தனது மாமனார் சிசிடிவி கேமராக்கள் மூலம் வீட்டிற்குள் நடக்கும் நடவடிக்கைகளை உன்னிப்பாகக் கண்காணித்ததாகவும், அவர் இரவு விருந்துகளில் கலந்துகொள்வதையோ அல்லது தாமதமாக வீடு திரும்புவதையோ எதிர்த்தார் என்றும் கூறுகிறார். பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், வீட்டுச் செலவுகளில் தனக்குக் கட்டுப்பாடு இருந்ததாகவும், தானும் தன் கணவரும் சிறு செலவுகளுக்கும் மாமனாரிடம் பணம் கேட்க வேண்டியிருந்தது என்றும் தெரிவித்தார். ஜூலை 28 அன்று, ஷாலு ஒரு விருந்தில் இருந்து தாமதமாக வீடு திரும்பினார். இது அவரது மாமனாருடன் கடுமையான வாக்குவாதத்திற்கு வழிவகுத்தது.

அந்த தகராறு அவர்களின் உறவில் மிகப்பெரிய திருப்புமுனையாக மாறியது. இச்சம்பவத்திற்கு பிறகு மாமனாரை கொலைசெய்ய ஷாலு முடிவு செய்தார். இதற்காக ஷாலு, விஷாலை அணுகி தனது மாமனாரை கொலை செய்ய ரூ.6 லட்சம் கொடுப்பதாக தெரிவித்தார்.

ரூ.2 லட்சத்தை கடந்த 6-ம் தேதி கொடுத்துள்ளார். மீதமுள்ள ரூ.4 லட்சத்தை 15 நாள்களுக்குப் பிறகு தருவதாக தெரிவித்துள்ளார்.


டூப்ளிகேட் சாவி தயாரித்து கொடுத்த மருமகள்

ஷாலு, வீட்டின் டூப்ளிகேட் சாவியை ஏற்பாடு செய்து விஷாலிடம் கொடுத்தார். கடந்த 4 ஆம் தேதி, ஜென்மாஷ்டமி பண்டிகையின் போது, ​விஷாலை அழைத்து, திட்டத்தை இறுதி செய்ததாக கூறப்படுகிறது. கொலை நடந்த அன்று ஷாலு தனது கணவர் சுப்ரத் மற்றும் குழந்தையுடன் இரவு விருந்துக்கு சென்றுவிட்டார். அவர்கள் சென்ற சில நிமிடங்களில் விஷாலும், ராஜ் கிஷோரும் தங்களிடம் இருந்த டூப்ளிகேட் சாவி மூலம் வீட்டிற்கு வந்ததாக கூறப்படுகிறது.

பாதுகாவலர் மதன் அவர்களை தடுத்து நிறுத்தினார். ஆனால் விஷால் அவரை ஷாலுவுடன் தொலைபேசியில் தொடர்பு பேசச் செய்ததாக கூறப்படுகிறது. விஷாலும் கிஷோரும் மருந்துகளை டெலிவரி செய்ய வந்ததாகவும், அவர்களை உள்ளே அனுமதிக்க வேண்டும் என்றும் ஷாலு காவலரிடம் கூறியதாக கூறப்படுகிறது.

வினீத் மினோச்சாவை தலையணையால் மூச்சுத் திணற வைத்து கொலை செய்துவிட்டு மாரடைப்பு ஏற்பட்டு இறந்ததாக நாடகம் நடத்துவதே ஷாலுவின் திட்டமாக இருந்தது. மினோச்சா அறைக்குள் நுழைந்தபோது இருவரும் மகனின் படுக்கையறையில் மறைந்திருந்தனர். பின்னர் அவர்கள் அவரை கத்தியால் தாக்கியதாகவும், 26 முறை குத்து காயங்களை ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்றதாகவும் கூறப்படுகிறது. ஷாலுவும் அவரது கணவரும் அதிகாலை 3:00 மணியளவில் விருந்திலிருந்து வந்தபோது, ​​மினோச்சா படுக்கையறைக்குள் ரத்த வெள்ளத்தில் கிடந்ததைக் கண்டு போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர்" என்றனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User