செங்கோட்டையனை சுத்துப்போடும் த.வெ.க-வினர் டு மனம் வருந்தும் திருமா | கழுகார் அப்டேட்ஸ்

Sep 17, 2026 - 12:31
0
செங்கோட்டையனை சுத்துப்போடும் த.வெ.க-வினர் டு மனம் வருந்தும் திருமா | கழுகார் அப்டேட்ஸ்

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்துவிட்டன. த.வெ.க, தி.மு.க, அ.தி.மு.க கம்யூனிஸ்ட், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் களமிறங்கும் நிலையில், போட்டியிடாத மற்ற கட்சிகள் தங்கள் நிலைப்பாட்டை தெரிவித்து வருகிறார்கள். மதுராந்தகத்தில் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் பா.ம.க மட்டும் இன்னும் நிலைப்பாட்டை அறிவிக்காமல் சஸ்பென்ஸ் வைத்திருக்கிறது.

சூரியக் கட்சியின் மேலிட குடும்பப் புள்ளி, பா.ம.க தலைமையிடம் நேரடியாகப் பேசி 'நம்ம கூட்டணிக்கு வந்துவிடுங்கள்... நாங்களும் ஓ.பி.சி அரசியலைதான் முன்னெடுக்கிறோம்' என பேசிப் பார்த்தாராம். இலைக் கட்சிப் புள்ளிகளும், 'நமக்கு ஆதரவு தெரிவித்துவிடுங்கள்' என வேண்டிக் கேட்டுக் கொள்கிறார்களாம். ஆனால், இரண்டு தரப்புக்கும் பிடிகொடுக்காமல் இருக்கிறதாம் பா.ம.க தலைமை. ஆளும்தரப்பும் பல்வேறு ரூட்டுகளில் பா.ம.க தலைமையை அணுகியிருப்பதால், 'இடைத் தேர்தலை புறக்கணிக்கிறோம்' என பா.ம.க அறிவித்துவிடுமோ என அஞ்சுகிறார்களாம் இலைக் கட்சி நிர்வாகிகள் சிலர்!

'மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க-விலிருந்து வந்தவர்களுக்கே மீண்டும் சீட் கொடுப்பதா?' எனக் கொதிக்கிறார்கள் லோக்கல் த.வெ.க புள்ளிகள். அதிலும், தாராபுரம் த.வெ.க வேட்பாளர் சத்தியபாமாவுக்கு வேலை செய்ய விருப்பமில்லை என ஒத்துழையாமை இயக்கத்தை நடத்தி வருகிறார்கள் த.வெ.க புள்ளிகள். இந்நிலையில், கடந்த 14-ம் தேதியன்று ஈரோடு வந்திருந்த அமைச்சர் செங்கோட்டையன், தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசியபோது, "பெருந்துறை சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட உள்ள அன்பு வேட்பாளர் ஜெயக்குமார் அவர்களே" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

செங்கோட்டையன்

'பெருந்துறைக்கு இடைத்தேர்தல் வந்தால் த.வெ.க நிர்வாகிக்கு சீட் கொடுக்க வேண்டும்' என ஈரோடு த.வெ.க-வினர் மத்தியில் கோரிக்கை வலுத்துவரும் நிலையில், செங்கோட்டையனின் பேச்சு சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. முதல்வர் விஜய்யும் பொதுச்செயலாளர் ஆனந்தும் முடிவெடுக்க வேண்டிய விவகாரத்தில், தன் முடிவைச் சொல்ல அமைச்சர் செங்கோட்டையன் யார் என்ற கேள்வி த.வெ.க-வுக்குள் தீயாய் பரவி வருகிறது!

இடைத்தேர்தல் நடைபெறவுள்ள தொகுதிகளில் சர்வே நடத்தியிருக்கிறதாம் அறிவாலயம். சர்வே ரிசல்ட்டில், 'தாராபுரத்தில் த.வெ.க வீக்காகவும் அ.தி.மு.க வெற்றிபெற வாய்ப்பும் இருக்கிறது. மதுராந்தகம் பக்கம் கவனத்தை திருப்பினால் வெற்றிப்பெறலாம்' என்று ரிப்போர்ட் அளிக்கப்பட்டதாம். அதைத்தொடர்ந்து, மதுராந்தகம் தொகுதியில் முழுமூச்சாக இறங்குகிறது தி.மு.க. சமீபத்தில் நடந்த இளைஞரணி கூட்டத்தில், 'மாநிலம் முழுவதிலிருந்தும் நிர்வாகிகளை வரவழையுங்கள். மதுராந்தகம் தொகுதியை 7 பாகமாக பிரித்து பொறுப்பாளர்களை நியமியுங்கள்' என உத்தரவிட்டிருக்கிறாராம் உதயநிதி.

Udhayanidhi

உதயநிதியின் பிரசாரம் குறித்தும் விவாதம் நடந்திருக்கிறது. அப்போது, 'இளந்தலைவர் ஒருநாள் பிரசாரத்துக்கு வருவார்.. கழகத் தலைவர் பிரசாரத்துக்கு வரமாட்டார். அதேபோல, நிர்வாகிகள் மேடைப் போட்டு பேசுவதைவிட்டு வீடுவீடாக சென்று வாக்கு சேகரியுங்கள்' என சொல்லப்பட்டிருக்கிறது. 'மதுராந்தகத்தை வெல்ல வேண்டும் என நினைக்கிறார் உதய். ஆனால் முதல்வர் விஜய் ஸ்டெயிலில் ஒருநாள் பிரசாரம்தான் வருவார் எனச் சொல்வது நல்ல முடிவல்ல' என குமுறுகிறார்களாம் உடன்பிறப்புகள்!

தேர்தலுக்கு பிறகு தி.மு.க கூட்டணியை உதறிவிட்டு த.வெ.க கூட்டணியில் பங்கெடுத்தது விடுதலை சிறுத்தைகள் கட்சி. அமைச்சரவையிலும் பங்கெடுத்து வன்னி அரசை சமூகநீதித்துறை அமைச்சராக்கினார் அக்கட்சித் தலைவர் திருமாவளவன். இந்நிலையில், 'திருமா மாறி மாறி பேசுகிறார்.. வி.சி.க தடம்மாறிவிட்டது' போன்ற காட்டமான விமர்சனங்களை அரசியல் நோக்கர்கள், தி.மு.க, தே.மு.தி.க உள்ளிட்ட கட்சிகள் முன்வைத்து வருகின்றனர். கரூர் விவகாரத்தில், 'விஜய் தாமதமாக வந்தார்.. வழக்கு பதியச் சொன்னேன்' என திருமா பேசியதால், அவரை த.வெ.க-வினரும் தாக்கினார்கள்.

விசிக தலைவர் திருமாவளவன்
விசிக தலைவர் திருமாவளவன்

இப்படி, நாலா பக்கமும் தாக்குதல் நடப்பதால் கடும் மன உளைச்சலில் இருக்கிறாராம் திருமா. 'என்னை எல்லோரும் தாக்குகிறார்கள்.. ஆனால், அவற்றை டிஃபெண்ட் செய்ய எனக்காக யாரும் பேசுவதில்லை. சொந்தக் கட்சியின் முக்கியப் புள்ளிகளே என்மீதான தாக்குதலை வேடிக்கை பார்க்கிறார்கள்' என மனம் நொந்துவிட்டாராம். 'வன்னி அரசு அமைச்சராகிவிட்டார். பொதுச்செயலாளர் ரவிக்குமார், சிந்தனைச்செல்வன் ஆகியோர் அப்செட்டில் இருக்கிறார்கள். ஆளூர் ஷாநவாஸ் தி.மு.க பிடியில் இருக்கிறார். என்மீதான விமர்சனங்களுக்கு நானே பதில் சொல்லிக் கொள்ள வேண்டியிருக்கிறது' என வருந்துகிறாராம்!

தனியார் பள்ளிகளுக்கு அனுமதி வழங்க லஞ்சம் பெற்றதாக அன்பில் மகேஸ் மீது மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவருடைய இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால், அன்பில் மகேஸ் ஆதரவாளர்களும் தி.மு.க முன்னணி நிர்வாகிகளும் இந்த ரெய்டை ரொம்பவே கூலாக டீல் செய்தனராம். ஏனெனில், அன்பில் மகேஸ் வீட்டுக்கு ரெய்டு வரப்போகிறது என்ற தகவல் அவரது டீமுக்கு முன்பே தெரிந்துவிட்டதாம். 'சிக்கலான விவகாரங்களை க்ளீன் செய்துவிட வேண்டும்' என நேற்று மதியமே உத்தரவுகள் பறந்திருக்கின்றன.

அன்பில் மகேஸ்

அன்பிலின் உதவியாளர்கள், அவரது அலுவலகத்தில் பணிபுரிவோரின் செல்போன்கள் என எதிலுமே எந்தவித சர்ச்சைக்குரிய விவகாரங்கள் இல்லாதபடி தயார் நிலையில் இருந்திருக்கிறார்கள். தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் கே.என் நேரு, எ.வ வேலு ஆகியோர் வீடுகளில் ரெய்டு நடந்தபோதும் தகவல்களை முன்பே கசிந்ததாக சர்ச்சைகள் வெடித்தன. தற்போதும் தகவல் கசிந்திருப்பதால் கடும் அப்செட்டில் இருக்கிறதாம் ஆட்சி மேலிடம்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User