``ஒரே நாளில் 17 கைதிகள் சிறையிலிருந்து தப்பிச் செல்லும் அவலநிலை நிலவுகிறது” - கனிமொழி சாடல்!
தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினர் கனிமொழி, ”தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிப் பொறுப்பேற்றுக் கொண்டதிலிருந்து தமிழ்நாடு முழுவதும் கிட்டத்தட்ட 50 கைதிகளுக்கு மேல் சிறைகளில் இருந்து தப்பிச் சென்றிருக்கிறார்கள் என்று பத்திரிகைச் செய்திகள் கூறுகின்றன. தேனி மாவட்டச் சிறையில் இருந்து ஒரே நாளில் 17 கைதிகள் தப்பித்துச் செல்லக்கூடிய அவல சூழ்நிலை இன்று தமிழ்நாட்டில் நிலவுகிறது.

காவல்துறையில் நடக்கக்கூடிய தவறுகளைச் சுட்டிக்காட்டும்போது ஏதோ ஆளுங்கட்சிக்குக் குரல் கொடுப்பவர்களாக... அரசியல் தலைவர்களுக்கு ஆளுங்கட்சியினர்போல பதிலளிப்பது என்பது வருத்தப்படக்கூடிய சூழலை உருவாக்கி இருக்கிறது. காவல்துறையினர் அவர்களின் பணிகளைச் செய்ய வேண்டுமே தவிர ஆளுங்கட்சி ஐடி-விங்க் போலச் செயல்படக் கூடாது.
தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வந்ததிலிருந்து அனைத்து விலைவாசியும் உயர்ந்து கொண்டே போகிறது. தொடர்ந்து எதிர்க்கட்சிகள் சொல்லிக்கொண்டே இருக்கிறோம். திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் மகளிர் அணி சார்பில் எல்லா மாவட்டத் தலைநகரங்களிலும் வரும் 31-ம் தேதி சட்டம் ஒழுங்கு குறித்தும் விலைவாசி உயர்வு குறித்தும் ஆர்ப்பாட்டத்தை அறிவித்திருக்கிறார்கள்.
அனைத்தும் விலைவாசியும் ஏறிக் கொண்டிருக்கும் நிலையில், அரசு நேரடி கட்டுப்பாட்டில் உள்ள ஆவின் பொருள்கள் விலையையாவது கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம். அதையும் செய்யவில்லை ஆட்சிக்கு நேரடியாக கட்டுப்பாட்டில் இருக்கும் எதுவுமே... இந்த அரசின் கட்டுப்பாட்டில் இல்லை" என்றார்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)