`எட்டு தலித் அமைச்சர்கள் வந்துவிட்டால் எல்லாம் மாறிவிடுமா..?’ - அமைச்சர் வன்னி அரசு

Oct 27, 2026 - 17:01
0
`எட்டு தலித் அமைச்சர்கள் வந்துவிட்டால் எல்லாம் மாறிவிடுமா..?’ - அமைச்சர் வன்னி அரசு

கோவையில் சாதியப் பாகுபாடு காரணமாக தற்கொலை செய்துகொண்ட மாணவர் அகிலனின் இல்லத்திற்கு நேரில் சென்ற அமைச்சர் வன்னி அரசு, மாணவரின் உடலுக்கு மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து மாணவரின் பெற்றோருக்கு ஆறுதல் கூறிய அவர், மாணவரின் இறுதி ஊர்வலத்திலும் பங்கேற்றார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் வன்னி அரசு, ”முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி இங்கு வந்துள்ளேன். எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்படி உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். பள்ளி வளாகங்களில் நீண்ட காலமாக நிலவிவரும் சாதியப் பாகுபாடுகளைக் களைய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும். பள்ளிகளில் சாதிப் பெயர்களை நீக்க வேண்டும் என்ற நீதியரசர் சந்துரு குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த சட்டமன்றத்திலேயே வலியுறுத்தியுள்ளேன்.

அகிலன் உடலுக்கு அஞ்சலி
அகிலன் உடலுக்கு அஞ்சலி

இவ்வழக்கு சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. குற்றவாளிகள் எவ்வளவு பெரிய சாதிப் பின்புலம் கொண்டவர்களாக இருந்தாலும் தப்ப முடியாது. அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள். நான் அமைச்சரவையில் இருந்தாலும் முதல் நாளிலிருந்தே தோழர்களுடனும், காவல்துறை அதிகாரிகளுடனும் தொடர்ந்து பேசி உரிய நீதிக்காக அழுத்தம் கொடுத்து வருகிறேன். அமைச்சராக இல்லாதிருந்தால் நானும் போராட்டக் களத்திலேயே நின்றிருப்பேன். அரசில் எத்தனை அமைச்சர்கள் இருக்கிறார்கள் என்பது முக்கியமல்ல. இந்தச் சமூகம் ஆயிரம் ஆண்டுக்கால சாதிய மற்றும் சனாதனக் கட்டமைப்பைக் கொண்டது. பட்டியல் சமுகத்தைச் சேர்ந்த எட்டு பேர் அமைச்சராக வந்துவிட்டதால் அனைத்தும் மாறிவிடும் என்று நம்புவது மூடநம்பிக்கை. சாதிய அழுக்குகளையும் இந்துத்துவத்தையும் வேரறுத்து, சாதியப் பாகுபாடுகள் முழுமையாக ஒழியும் வரை சமூக விடுதலைக்கான போராட்டங்களைத் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டிய தேவை இருக்கிறது” எனத் தெரிவித்தார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User