"'அந்தோனி'க்கு விருது இல்லேனாலும் கூட" - ஆஸ்கர் போகும் முதல் இலங்கைத் தமிழ்ப்படம் குறித்து இயக்குநர்

Sep 21, 2026 - 19:31
0
"'அந்தோனி'க்கு விருது இல்லேனாலும் கூட" - ஆஸ்கர் போகும் முதல் இலங்கைத் தமிழ்ப்படம் குறித்து இயக்குநர்

இளையராஜா இசையில் முதல் முறையாக உருவான இலங்கை தமிழ்த் திரைப்படமான 'அந்தோனி', இப்போது இலங்கை திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் ஊடாக 2027ஆம் ஆண்டுக்கான ஆஸ்கார் விருதின் சிறந்த சர்வதேச திரைப்படப் பிரிவிற்கான தேர்வுக் குழுவிற்கு அனுப்பப்பட்டிருக்கிறது.

பட விழாவில்
பட விழாவில்

சுகிர்தன் கிறிஸ்துராஜா மற்றும் ஜெனோசன் ராஜேஸ்வர் இணைந்து இயக்கியுள்ள ‘அந்தோனி’, கடந்த மார்ச் மாதம் திரைக்கு வந்தது. மூன்று மொழிகளில் உருவான இந்தப் படத்தில் கயல் வின்சன்ட், டி.ஜே.பானு, சுதர்சன் ரவீந்திரன், செளமி முனசிங்க, நிழல்கள் ரவி, அருள்தாஸ் எனப் பலரும் நடித்துள்ளனர்.

கலைவளரி, இரமணதாஸ் மற்றும் சுகந்தினி இரமணதாஸ் ஆகியோர் தயாரித்துள்ளனர். இலங்கைத் தமிழ் சினிமாவான 'அந்தோனி'யின் ஆஸ்கார் பயணம் கோடம்பாக்கத்தில் பேசுபொருளாகியுள்ளது. இது பற்றி படத்தின் இயக்குநர்களில் ஒருவரான ஜெனோசன் ராஜேஸ்வரிடம் பேசினோம்.

அந்தோனி பட இயக்குநர்கள்
அந்தோனி பட இயக்குநர்கள்

``இலங்கையில் தமிழ் சினிமா இருக்கறது பலருக்கும் புதுத்தகவலாகவே இருக்கும். ஆனா, ஈழத்து தமிழ் சினிமாக்கள் நிறையவே வந்திருக்கு. 'சினம் கொள்', 'கோமாளி கிங்ஸ்', 'வெந்து தணிந்தது காடு' (சிம்பு படமல்ல..), 'ஆறாம் நிலம்' எனப் பக்காவான தமிழ் சினிமாக்கள் அங்கேயே உருவாகி, வெளியாகியிருக்கு.

இதற்கு முன்னர் 1960, 70 கள்ல நிறைய ஈழத்து தமிழ் சினிமாக்கள் ஏராளமா வந்திருக்கு. அந்த வகையில 2010க்குப் பிறகு இலங்கை காசில் எடுக்கப்பட்ட ஒரு பெரிய பட்ஜெட் படமென 'அந்தோனி'யைச் சொல்லலாம். இது ஒரு மீனவனோட குடும்ப வாழ்வியலைச் சொல்லும் படமாகும். நானும் நண்பர் சுகிர்தனும், தென்னிந்தியாவில் பல படங்களில் உதவி இயக்குநராகப் போராட்டங்களைக் கடந்து, இந்தப் படத்தின் மூலம் இயக்குநர்களாகியிருக்கோம்.

தயாரிப்பாளர்கள்
தயாரிப்பாளர்கள்

இந்தப் படத்தில் இளையராஜா இசையமைச்சிருக்கறது எங்களது கனவு நனவான சந்தோஷம். போன வருஷ விநாயகர் சதுர்த்தியில் இந்தப் படத்திற்கான பாடல்களை எழுதி கொடுத்தார் ராஜா சார். மொத்தம் 5 பாடல்கள் அவரே எழுதி கொடுத்ததுடன், அதே வேகத்துல இசையமைத்தும் கொடுத்திருக்கிறார்.

ஈழத் தமிழ்ப் படத்துக்கு இளையராஜா இசையமைத்திருப்பது ஒரு வரலாற்று நிகழ்வு. அது எங்களது படத்துக்கு அமைந்தது பெரிய சந்தோஷம். இந்தப் படத்தைப் பிரமாண்ட காமிராவான ஆரி அலெக்ஸாவிலும் படமாக்கின இலங்கைத் தமிழ்ப் படம் என்ற பெருமையும் உண்டு.

கடந்த மார்ச் மாதம் இந்தப் படம் 12 நாடுகளுக்கு மேல உலகெங்கும் வெளியானது. இலங்கையில் இருந்து உருவாகி உலகம் முழுவதும் (ஓவர்சீஸ் ரிலீஸ்) வெளியான படம் என்ற சிறப்பும் 'அந்தோனி'க்குக் கிடைச்சிருக்கு. சில நாடுகள்ல 100 நாள்களைக் கடந்து ஓடினாலும், தமிழ்நாட்டுல திரையரங்க ரிலீஸ் பெருசா கைக்கொடுக்கலை. அதனால ஓடிடியிலும் படத்தைக் கொண்டு வந்துட்டோம்.

பட போஸ்டர்
பட போஸ்டர்

இந்தச் சூழல்லதான் தியேட்டர் ரிலீஸுக்குப் பிறகும் படத்தை சர்வதேச திரைப்பட விழாக்களுக்கும், ஆஸ்கார் விருது தேர்வுகளுக்கும் அனுப்ப முடியும்ங்கற செய்தி கிடைச்சது. இதுவரைக்கும் இந்தியாவில் இருந்துதான் எந்த ஒரு திரைப்படத்தையும் அனுப்பலாம் என்பது ஆசிய நாடுகளுக்கான விஷயம், ஆனா, முதன்முறையா இந்தாண்டு முதல் 2027க்கான ஆஸ்கார் விருதுகளுக்கு இலங்கையில் இருந்தும் படங்களை அனுப்ப முடியும் என ஆஸ்கார் கமிட்டி தெரிவிச்சிருக்கறதால, 'அந்தோனி'யை அனுப்பியிருக்கோம்.

இந்தப் படம் விருதுக்குத் தேர்வு செய்யபடாமல் போனாலும் கூட, இலங்கையில் உருவான ஒரு தமிழ்ப் திரைப்படம் ஆஸ்கார் விருதின் தேர்வுக்குழுவுக்கு அனுப்பவது இதுதான் முதல்முறையாகும். இப்படிப் பல விஷயங்கள்லேயும் முதல்முறை என்ற பெருமை இந்தப் படத்துக்குப் கிடைச்சிருக்கறது, அடுத்தடுத்து நல்ல படங்களைக் கொடுக்கணும்ங்கற ஊக்கத்தையும் உற்சாகத்தையும், இலங்கையிலும் தொழில் முறை தமிழ் சினிமாக்கள் உருவாகுதுனு வெளியுலகத்துக்குக் காட்டவும் இந்தப் படம் எங்களுக்குக் கொடுத்திருக்குது'' என்கிறார் இயக்குநர் ஜெனோசன் ராஜேஸ்வர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User