"கூவத்தூரையே மிஞ்சுகிறது உங்கள் கூத்து; புஷ்பா படப்பாணியில்.!" - தவெகவை கடுமையாக சாடிய உதயநிதி

May 13, 2026 - 13:01
0
"கூவத்தூரையே மிஞ்சுகிறது உங்கள் கூத்து; புஷ்பா படப்பாணியில்.!" - தவெகவை கடுமையாக சாடிய உதயநிதி

2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தவெக பெரும்பாலான தொகுதிகளில் வெற்றி பெற்று, தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆளும் கட்சியாக படியேறியுள்ளது.

59 தொகுதிகளில் வெற்றி பெற்று திமுக எதிர்க்கட்சியாக பொறுப்பேற்றுள்ளது.

இன்று தவெக ஆட்சி பெரும்பான்மை நிரூபிப்பதற்கான வாக்கெடுப்பு நடந்தது.

அப்போது எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது, "வாக்கு எண்ணிக்கை முடிந்த 10 நாள்களில் என்னென்ன நடந்துள்ளது என்பதை கூற விரும்புகிறேன்.

தவெக ஆட்சி அமைக்க வேண்டும் என்று பெரும்பான்மையான மக்கள் வாக்களிக்கவில்லை. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 4.93 கோடி மக்கள் வாக்களித்துள்ளனர். அதில் 1.72 கோடி தான் தவெகவிற்கு வாக்களித்துள்ளனர். மீதி 3.21 மக்கள் இந்த ஆட்சியை விரும்பவில்லை.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

நன்றி தெரிவிக்கவில்லை

தமிழ்நாடு சட்டமன்றம் 234 உறுப்பினர்களைக் கொண்டது. 118 உறுப்பினர்களை கொண்ட கட்சி தான் ஆட்சி அமைக்க முடியும். ஆனால், உங்கள் கட்சிக்கு எந்த எண்ணிக்கை இல்லை.

முதலமைச்சர் தன்னுடைய வெற்றி மீது நம்பிக்கை இல்லாமல் இரண்டு இடங்களில் போட்டியிட்டார். அதில் ஒரு இடத்தை ராஜினாமா செய்துள்ளார். ஆனால், அந்தத் தொகுதி மக்களை நேரடியாக சந்தித்தோ, அறிக்கை மூலமாகவோ நன்றி தெரிவிக்கவில்லை.

நேற்றைய உயர்நீதிமன்ற தீர்ப்பில் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் வாக்களிக்க கூடாது என்று தீர்ப்பளித்துள்ளனர். ஆக, இப்போது தவெகவிற்கு 106 இடங்கள் தான்.

ஆனால், எந்தத் தலைவருக்கு எதிராக போட்டியிட்டாரோ, அந்தக் கட்சியின் கூட்டணியை தான் தற்போது சேர்த்து ஆட்சி அமைப்பதற்கான கடிதம் ஆளுநருக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

உங்கள் கொள்கை எதிரி என்று சொல்லக்கூடிய பாஜக கூட்டணியில் போட்டியிட்ட ஒரு சட்டமன்றத் உறுப்பினரை அந்தக் கட்சி தலைவருக்கே தெரியாமல் ஆதரவு தர வைத்திருக்கிறீர்கள்.

அதேபோல பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் இருக்கக்கூடிய பெரியக்கட்சியான அதிமுக இரண்டாக பிளவுப்பட்டு இருக்கிறது.

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்

அதில் ஒரு தரப்பு உங்களுக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள். பிளவுப்பட்ட ஒரு வீட்டுக்கு புது சோபா ஒன்று போகிறது. சோபா பின்னால் புது முதல்வரும் வீட்டிற்கு செல்கிறார். புதுமையான ஆட்சி புதுமையான ஆட்சி என்று சொன்னீர்கள். இன்றைக்கு புஷ்பா படப் பாணியில் ஆட்சி நடந்துக்கொண்டிருக்கிறது.

நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு முன்பாகவே இந்த ஆட்சி மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டது. இவர்களுக்கு நம்பிக்கைக் கொடுத்த எங்கள் தோழமை கட்சியின் நம்பிக்கையும் கொஞ்சம் கொஞ்சமாக சிதைத்து கொண்டு இருக்கிறது.

தேர்தல் நேரத்தில் ஊழல் சக்தி ஊழல் சக்தி என்று சொன்னீர்கள். இன்றைக்கு சமூக வலைத்தளங்களில் மக்கள் உங்களை கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டார்கள்.

கூவத்துரையே மிஞ்சும் அளவிற்கு நீங்கள் கூத்தடிப்பதைப் பார்க்கும்போது இந்த அரசு எத்தனை நாட்களுக்கு நீடிக்கபோகுது என்று மக்களுக்கு சந்தேகம் வந்துவிட்டது.

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்

முதல்வர் நேற்று சில அரசியல் கட்சியினரை சந்தித்து இருக்கிறார். அவர்களுக்கு அமைச்சர் பதவி கொடுக்கயிருப்பதாகவும் கூறப்படுகிறது. அதற்கும் வாழ்த்துகள்.

எம்எல்ஏக்களை எல்லாம் கடன் பெற்று ஆட்சி நடத்துகின்ற முதல்வர் எங்கள் ஆட்சியில் வளர்ச்சிக்காக பெற்ற கடனை தவறாக எடுத்துரைத்து மக்களை திசைதிருப்புகிறார். இந்த அரசு நல்லாட்சி தரும் என்று மக்களுக்கு துளியும் நம்பிக்கை இல்லை" என்று காட்டமாக விமர்சித்திருக்கிறார்.

மேலும் இந்த ஆட்சி தொடர தடையாக இருக்க மாட்டோம் என்று வாக்கெடுப்பில் இருந்து விலகி வெளிநடப்பு செய்தார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User