‘பாட்டிலுக்கு 10 ரூபாயை ஒழிக்க வேண்டியது ஏன்?’ – டாஸ்மாக் ஊழியர்களிடம் அமைச்சர் விக்னேஷ் விளக்கம்!
கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் மதுவிலக்கு துறை அமைச்சர் விக்னேஷை நேரில் சந்தித்து தங்கள் கோரிக்கைகள் குறித்து நேற்று மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்டு பேசிய அமைச்சர் விக்னேஷ், “பார் நடத்துபவர்களை எந்தெந்த இடத்தில் கட்டுப்படுத்த வேண்டும் என்பது தெரியும்.
மதுவிலக்கு துறைதான் இருப்பதிலேயே புறக்கணிக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட துறையாக இருக்கிறது. டாஸ்மாக் துறை என்றால் அதை பார்ப்பதிலேயே ஏளனமாக பார்க்கிறார்கள். எனக்கே இப்படி என்றால் உங்களது குழந்தைகள் எங்க அப்பா டாஸ்மாக்கில் வேலை செய்கிறார் என்று சொல்வது கஷ்டமாக இருக்கும்.
டாஸ்மாக் ஆரம்பித்ததன் நோக்கமே கள்ளச்சாராயத்தை ஒழிக்க வேண்டும். மக்கள் வேறு பாதையில் சென்று விடக்கூடாது என்பதற்காகத்தான், வருவாய் மட்டுமே என்பது நோக்கம் அல்ல.

23 ஆண்டுகளாக டாஸ்மாக் என்றாலே சம்பாதிப்பதற்கும், தவறு செய்வதற்கு மட்டும்தான் இந்தத் துறை என்று மாற்றிவிட்டார்கள். பத்து ரூபாய் பாட்டிலுக்கு வாங்கினாலும், அதிலிருந்து 1 ரூபாய், அல்லது 1.5 ரூபாய் உங்களுக்கு வரும். மற்றவை வேறு யாருக்கோ செல்கிறது. மற்றவர்களுக்கு சம்பாதித்து கொடுத்துவிட்டு பழி வாங்குவது நீங்கள்தான். அதனால்தான் முதலில் பாட்டிலுக்கு பத்து ரூபாயை ஒழிக்க வேண்டும். பலர் இதை தவறாக புரிந்து கொண்டார்கள், நீங்கள் வந்த உடனேயே பத்து ரூபாய் வாங்கத்தானே செய்கின்றார்கள் என்கிறார்கள்.
நாம் காலி பாட்டில் திரும்ப பெற டெபாசிட் அமௌன்ட் ஸ்டிக்கருக்கு பத்து ரூபாய் வாங்க வேண்டும். அதற்கு மேல் 10 ரூபாய் வாங்க கூடாது. அந்த டெபாசிட் தொகையும், ஜூன் மாதத்திற்குள் பாட்டிலை நீங்கள் கையில் வாங்க வேண்டிய தேவை இருக்காது, அது தொடர்பாக பேசிக்கொண்டு இருக்கிறோம். படிப்படியாக ஊதிய உயர்வு வழங்கவும், பாட்டிலில் ஸ்டிக்கரை ஊழியர்கள் ஒட்டாமல், மதுபாட்டில் தயாரிப்பின் போதே ஸ்டிக்கர் ஒட்டி வருவது போன்ற பணிகளை செய்து கொண்டிருக்கிறோம்.

தமிழகத்தில் உள்ள 4,600 பார்களையும் நானே எடுத்துக் கொண்டு, 3,600 பார்களை மற்றவர்களுக்கு கொடுப்பேன் என்பது போன்றவை எதுவும் இந்த ஆட்சியில் இருக்காது. இதுபோன்ற தவறுகள் எல்லாம் ஒழிக்க வேண்டும் என முதல்வர் சொல்லியிருக்கிறார். ஒரு கண்ணியமான துறையாக கேரளா, கர்நாடகா, ஆந்திராவைப் போல சக தொழிலாளர்கள் பார்க்கும் வகையில், டாஸ்மாக் துறையை மாற்றுவோம்” என்றார்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)