த.வெ.க அரசின் அமைச்சரவை விரிவாக்கம் எப்போது? | பின்னணி தகவல்!

May 15, 2026 - 18:02
0
த.வெ.க அரசின் அமைச்சரவை விரிவாக்கம் எப்போது? | பின்னணி தகவல்!

முதல்வர் விஜய் தலைமையிலான த.வெ.க அரசு பொறுப்பேற்று, இன்றுடன் ஆறு நாட்கள் ஆகிறது. அவருடன் ஒன்பது பேர் அமைச்சர்களாகப் பொறுப்பேற்ற நிலையில், இதுவரையில் அவர்களுக்கு இலாகா ஏதும் ஒதுக்கப்படவில்லை. அதேநேரத்தில், அமைச்சரவையை விரிவாக்கமும் செய்யவில்லை.

இதனால், அரசு அலுவலகங்களில் கோப்புகள் தேக்கமடைந்திருப்பதாகச் சொல்கிறார்கள் அதிகாரிகள். இந்தப் பிரச்னையால், முதல்வர் விஜய் தலைமையில் அமைச்சரவைக் கூட்டமும் இதுவரையில் நடத்தப்படவில்லை. பல்வேறு நிர்வாகச் சிக்கல்களை உருவாக்கியிருக்கும் இப்பிரச்னை குறித்து, த.வெ.க வட்டாரங்களில் விசாரித்தோம்.

விஜய் பதவியேற்பு விழா
விஜய் பதவியேற்பு விழா

நம்மிடம் பேசிய த.வெ.க-வின் சீனியர்கள் சிலர், "தேர்தலுக்கு முன்பாகவே, எங்கள் கட்சியிலிருந்து யாருக்கெல்லாம் அமைச்சர் பொறுப்பு தரலாம் என்பதை முன்கூட்டியே ஆலோசித்திருந்தோம். சமூக பிரதிநிதித்துவத்தின் அடிப்படையில் ஒரு பட்டியலும் தயாராக இருந்தது. ஆனால், யாரும் எதிர்பாராத விதமாக ஆட்சியமைக்கும் எண்ணிக்கையை நாங்கள் பெறவில்லை. இதனால், கூட்டணிக் கட்சிகளை அரவணைத்துதான் ஆட்சியமைக்கும் சூழல் உருவானது.

காங்கிரஸ், சி.பி.எம்., சி.பி.ஐ., வி.சி.க கட்சிகள் எங்களுக்கு ஆதரவளிக்க முன்வந்தன. பிற்பாடு ஐ.யு.எம்.எல் கட்சியும் ஆதரவளித்தது. அ.ம.மு.க சார்பில் மன்னார்குடியில் வெற்றிப்பெற்ற எஸ்.காமராஜும் த.வெ.க-வுக்கு ஆதரவளித்தார். இதனால், ஐந்து அமைச்சர் பதவிகளை கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கிவிட்டு, மீதமிருக்கும் 29 அமைச்சர் பதவிகளை த.வெ.க எம்.எல்.ஏ-க்களுக்கு அளிக்க ஆலோசிக்கப்பட்டது.

எங்கள் முடிவை கூட்டணிக் கட்சிகளுக்கு தெரியப்படுத்தியபோது, கம்யூனிஸ்ட்டுகளும் வி.சி.க-வினரும் கூட்டணி அரசாங்கத்தில் இடம்பெற மறுத்துவிட்டனர். தார்மீக ரீதியாக வெளியிலிருந்து ஆதரவளிப்பது என முடிவெடுத்தனர். அதைத்தொடர்ந்து, காங்கிரஸ் கட்சிக்கு இரண்டு அமைச்சர் பதவிகள் தர ஆலோசித்த முதல்வர், மீதமிருக்கும் பதவிகளை த.வெ.க-வினருக்கு பிரித்தளிக்க முடிவெடுத்தார்.

அந்தச் சூழலில்தான், யாரும் எதிர்பாராத விதமாக எங்களுக்கு அ.தி.மு.க-விலிருக்கும் 25 எம்.எல்.ஏ-க்கள் ஆதரவளித்தனர். ஆட்சி அதிகாரத்துக்குள் வர விரும்பும் அவர்கள், எட்டு அமைச்சர் பதவிகளையும் ஆறு வாரியத் தலைவர் பதவிகளையும் எதிர்பார்க்கின்றனர். ஆனால், ஐந்து அமைச்சர் பதவிகளை மட்டுமே தர முடியுமென த.வெ.க தலைமை கூறிவிட்டது. இதனால்தான், இடியாப்ப சிக்கலில் சிக்கியிருக்கிறது அமைச்சரவை விரிவாக்கம்.

சி.வி சண்முகம், வேலுமணி, நத்தம் விஸ்வநாதன்

அ.தி.மு.க-விலிருந்து வேலுமணி, சி.வி.சண்முகம், நத்தம் விஸ்வநாதன், ஆர்.காமராஜ், சி.விஜயபாஸ்கர், மரகதம் குமரவேல், கே.சி.வீரமணி, கே.பி.அன்பழகன் ஆகியோர் அமைச்சராக விரும்புகிறார்கள். மின்சாரத்துறை, கனிமவளத்துறை, நகராட்சி நிர்வாகம், சமூகநலத்துறை, பொதுப்பணித்துறை, சுகாதாரத்துறை என்று பவர்புல்லான இலாகாக்களை எதிர்பார்க்கிறார்கள். அவர்கள் விரும்பிய எண்ணிக்கையையும் இலாகாக்களையும் ஒதுக்க முடியாமல் தவிக்கிறார் முதல்வர் விஜய்.

அமைச்சரவை விரிவாக்கத்திற்காக காக்க வைக்கப்பட்ட எம்.எல்.ஏ-க்களை ஊருக்குக் கிளம்பச் சொல்லிவிட்டது தலைமை. அமைச்சர்களாக பொறுப்பேற்ற அருண்ராஜ், செங்கோட்டையன், கீர்த்தனா உள்ளிட்டவர்களும் அவரவர் ஊருக்குப் புறப்பட்டுவிட்டனர். ஞாயிற்றுக்கிழமைதான் சென்னை திரும்பவிருக்கிறார்கள்.

வரும் திங்கட்கிழமை, கேரளாவில் புதிய அரசு பொறுப்பேற்கிறது. முதல்வர் உட்பட அமைச்சர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்துவிட்டுத்தான் தமிழகம் வரவிருக்கிறார் பொறுப்பு ஆளுநர் அர்லேக்கர். ஆகவே, அ.தி.மு.க தொடர்பான பதவி பஞ்சாயத்து முடிவுறாத நிலையில், அடுத்த வாரம்தான் அமைச்சரவை விரிவாக்கம் நடைபெறும் எனத் தெரிகிறது. அதுவரையில், குழப்பம்தான்" என்றனர்.

செங்கோட்டையன்,
செங்கோட்டையன், புஸ்ஸி ஆனந்த்

அ.தி.மு.க-வின் வேலுமணி, சி.வி.சண்முகம், சி.விஜயபாஸ்கரிடம் அமைச்சர் பதவி எண்ணிக்கை, இலாகா குறித்துப் பேச வேண்டிய பொறுப்பை அமைச்சர்கள் புஸ்ஸி ஆனந்திடமும் செங்கோட்டையனிடமும் ஒப்படைத்திருக்கிறார் விஜய்.

அ.தி.மு.க-வின் உட்கட்சி குழப்பத்திலேயே வேலுமணியும் சண்முகமும் தீவிர ஆலோசனை நடத்திக் கொண்டிருப்பதால், த.வெ.க-வுடன் பேசுவதற்கு அவர்களுக்கு நேரமில்லை. அதனால்தான், கோவில் கோவிலாக நேர்த்திக்கடன் செலுத்த புஸ்ஸி ஆனந்தும், கோபிச்செட்டிப்பாளையம் தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்க செங்கோட்டையனும் புறப்பட்டுச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. இப்படியான அரசியல் சூழலில், அமைச்சரவை விரிவாக்கம் என்பது சிக்கலாகிக் கொண்டே போகிறது.!

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User