விருதுநகர்: மாயமான மூதாட்டி; அழைத்துச் சென்ற தாய், மகள் - நகைக்காக கொல்லப்பட்ட கொடூரம்

Mar 12, 2026 - 14:31
 0
விருதுநகர்: மாயமான மூதாட்டி; அழைத்துச் சென்ற தாய், மகள் - நகைக்காக கொல்லப்பட்ட கொடூரம்

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகேயுள்ள பண்ணை மூன்றடைப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன், மனைவி அம்பிகா (வயது 62). இவர் கடந்த மார்ச் 8-ம் தேதி, காரியாபட்டி அருகேயுள்ள சித்து மூன்றடைப்பு கிராமத்திற்கு ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்றவரை  அன்று மதியம் முதல் காணவில்லை. இதனையடுத்து அவரது உறவினர்கள் அம்பிகாவை பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து திருச்சுழி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.  

பைக்கில் கடத்திச் செல்லப்படும் மூதாட்டி

இந்த நிலையில், திருச்சுழியில் இருந்து காரியாபட்டி செல்லும் சாலையில் புலிக்குறிச்சி பஸ் நிறுத்தம் அருகேயுள்ள காட்டுப் பகுதியில் மூதாட்டி ஒருவரின் சடலம் கிடப்பதாக தகவல் கிடைத்தது. இதனையடுத்து தகவல் அறிந்த திருச்சுழி போலீஸார் அங்கு சென்று பார்த்தபோது சடலமாக கிடந்தது மூதாட்டியான அம்பிகாதான் எனத் தெரிய வந்தது.

இந்த நிலையில் இந்த கொலைச் சம்பவம் குறித்து அப்பகுதியில் இருந்த சி.சி.டி.வி கண்காணிப்பு கேமரா பதிவுக்காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்த போது கொலை செய்யப்பட்ட மூதாட்டியை இருசக்கர வாகனத்தில் நடுவில் அமர வைத்து இரண்டு பெண்கள் டூவீலரில் ஏற்றி சென்றது பதிவாகி இருந்தது.

போலீஸாரின் விசாரணையில், டூவீலரை ஓட்டிச் சென்றது 17 வயது சிறுமி என்பதும், பின்னால் அமர்ந்து வந்தது சிறுமியின் தாய் லோகாம்பாள் என்பதும் தெரிய வந்தது. இதனையடுத்து இருவரிடமும் நடத்திய விசாரணையில், சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த மூதாட்டியை  திருமண நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் இறக்கி விடுவதாகக்கூறி நைசாக பேசி டூவீலரில் ஏற்றி அழைத்து சென்று,  நகைக்காக அவரை கழுத்தை நெரித்து கொலை செய்து திருச்சுழி அருகே காட்டுப்பகுதியில் உடலை வீசி விட்டு அங்கிருந்து இருவரும் தப்பிச் சென்றதை ஒப்புக் கொண்டனர்.

கைது செய்யப்பட்ட லோகாம்பாள்

இருவரையும் கைது செய்த திருச்சுழி போலீஸார், அவர்களிடம் இருந்து  சுமார்  4 சவரன் தங்க நகைகள் மற்றும் ஒரு இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். திருச்சுழி  அருகே  காணாமல் போனதாக வழக்குப்பதிவு  செய்து மூதாட்டியை இடங்களில் தேடி வந்த நிலையில், திருச்சுழி அருகே காட்டுப்பகுதியில் மூதாட்டி பிணமாக  மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.  

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0