Vijay: "கர்நாடகம் சென்ற விஜய் காவிரி நீரைக் கொண்டு வருவாரா?" - தவெக அரசுக்கு திமுக கேள்வி

Jun 12, 2026 - 13:32
0
Vijay: "கர்நாடகம் சென்ற விஜய் காவிரி நீரைக் கொண்டு வருவாரா?" - தவெக அரசுக்கு திமுக கேள்வி

காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை சாகுப்படிக்காக கடந்த சில ஆண்டுகளாக மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டு வரும் நிலையில் இந்தாண்டு தண்ணீர் திறக்கப்படவில்லை.

இதற்கு அரசியல் தலைவர்கள் எல்லோரும் குரல் கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் இதுதொடர்பாக தி.மு.க, த.வெ.க அரசுக்கு கேள்வி எழுப்பி இருக்கிறது.

தி.மு.க வெளியிட்டிருக்கும் அறிக்கையில், "தண்ணீருக்கு வழியில்லாமல் குறுவைத் தொகுப்பா? கர்நாடகம் சென்ற விஜய் - காவிரி நீரைக் கொண்டு வருவாரா?

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

இன்று ஜூன் 12. கடந்த ஐந்தாண்டுகளில் இதே நாளில் காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகளின் குறுவைப் பருவ நெல் சாகுபடிக்காக திராவிட மாடல் அரசின் முதலமைச்சராக இருந்த கழகத் தலைவர் முன்னின்று, மேட்டூர் அணையைத் திறந்து வைப்பது வழக்கம்.

அதற்கு முன்பாகவே ஆறுகள், வாய்க்கால்களில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, கடைமடை வரை தண்ணீர் பாய்வதற்கு வழிவகை செய்யப்பட்டிருக்கும். குறுவை நெல் சாகுபடியில் சாதனை அளவை எட்டியதுடன், வேளாண்துறையில் 9% வளர்ச்சியைக் காட்டியது திராவிட மாடல் அரசு.

மேட்டூர் அணை திறக்கப்பட வேண்டிய நாளான இன்று, போதிய நீர் இல்லை என்பதால் திறக்கப்படவில்லை. வறண்ட ஆற்றைப் பார்த்து வாடிப் போய் இருக்கிறார்கள் டெல்டா விவசாயிகள். ஆளே இல்லாத கடையில் டீ ஆத்துவது போல, தண்ணீருக்கு வழி செய்யாமல், குறுவை சிறப்புத் தொகுப்பு அறிவிக்கும் ரீல்ஸ் ஆட்சியின் முதல்வர், தனது சொந்த வேண்டுதலுக்காக கர்நாடகாவுக்குச் சென்றிருக்கிறார்.

காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின்படி ஆணையம் வலியுறுத்தியும் தமிழ்நாட்டிற்கான 19 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகா வழங்கவில்லை. அங்கே நடப்பது காங்கிரஸ் ஆட்சி. அதாவது, தேர்தலுக்கு முன்பே த.வெ.க.வுடன் ரகசிய உறவுடன் இருந்த அதே காங்கிரஸ் கட்சியின் ஆட்சி.

ஸ்டாலின்
ஸ்டாலின்

டெல்லி வரை சென்று உறவு கொண்டாடி வந்திருக்கும் முதல்வர் விஜய், கர்நாடகாவில் தனது வேண்டுதலுடன், தமிழ்நாட்டு விவசாயிகளின் வேண்டுதலை மனதில் கொண்டு, காங்கிரஸ் அரசுடன் பேசி காவிரித் தண்ணீரைக் கொண்டு வருவாரா? இல்லை, விவசாயிகளின் வயிற்றில் அடிக்கப் போகிறாரா?" என்று கேள்வி எழுப்பி இருக்கிறது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User