‘விஜய் திமுக-விடம் கடன் வாங்கி ஆட்சி நடத்துகிறார்!’ – பாஜக எஸ்.ஆர். சேகர்

May 11, 2026 - 14:01
0
‘விஜய் திமுக-விடம் கடன் வாங்கி ஆட்சி நடத்துகிறார்!’ – பாஜக எஸ்.ஆர். சேகர்

விஜய் முதல்வராக பதவியேற்ற நிகழ்வில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவது பாடப்பட்டது சர்ச்சையானது. இதனை தொடர்ந்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா இது தொடர்பான ஒரு விளக்கத்தை வழங்கினார்.

இந்நிலையில் பா.ஜ.க. மாநிலப் பொருளாளர் எஸ்.ஆர். சேகர் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது, “தனக்கென்று ஒரு பாணி வகுக்காமல், பிறர் வகுத்த  வழியில் இலவசமாக பயணிப்பது விஜய்க்கு ஒன்றும் புதிது அல்ல. அந்த வகையில், இப்போதைய அரசியலில் 13 எம்.எல்.ஏ.க்களை தி.மு.க-விடமிருந்து கடனுக்கு வாங்கி அதன் வழியை  பின்பற்ற முடிவு செய்திருக்கிறார்.

போகிற போக்கில், இந்தி எதிர்ப்பு என்று மென்மையாக தொடங்கி, மோடி எதிர்ப்பு, பா.ஜ.க எதிர்ப்பு என்று திசை மாறி, மெல்ல மெல்ல இந்திய தேசிய எதிர்ப்பு என்ற ஒரு புள்ளியில் வந்து நின்று தி.மு.க-வின் மாடலை பின்பற்றுவார்.

ஆளுநர் உரையில் ஜெய்ஹிந்த் என்ற வார்த்தை இல்லை என்று சிலாகித்து சொன்னவர்கள் தி.மு.க-வினர். அது போன்ற ஒரு ஆபத்தான மறைமுக பிரிவினையை முதல் நாளிலிருந்து விஜய் ஆதரிக்கிறாரா என்ற சந்தேகம் எழுகிறது.

ஆதவ் அர்ஜுனா அமைச்சராகிவிட்டார். நியூஸ் பேப்பர் படிப்பது, மத்திய அரசின் சர்குலேசன் என்ன சொல்கிறது என்று எடுத்து கூறும் நபர்களை அருகில் வைத்துக் கொள்வது நல்லது. இந்திய தேசியத்தை ஒருங்கிணைத்த வந்தே மாதரம் என்ற பாடல் இசைக்கப்பட்டு 150 ஆண்டுகள் ஆகிறது. அதை ஒட்டி, கடந்த நவம்பர் மாதம் முதல், வரும் நவம்பர் மாதம் வரையிலான ஓராண்டு காலத்துக்கு கொண்டாட வேண்டும் என்ற நோக்கில், அனைத்து அரசு நிகழ்ச்சியிலும் வந்தே மாதரம் பாடலை பாடி சிறப்பிக்க வேண்டும் என்பது மத்திய அரசின் சுற்றறிக்கை.

 எஸ்.ஆர்.சேகர்
எஸ்.ஆர்.சேகர்

150 ஆண்டுகளாக இந்திய தேசியத்தை ஒருங்கிணைத்த ஒரு பாடலை பாடுவதற்கே இவர்களுக்கு கசக்கிறது. தமிழ்த்தாயை போற்றுவது தமிழ்த்தாய் வாழ்த்து என்றால், பாரதத் தாயை போற்றுவதுதான் வந்தே மாதரம் என்பது தெரியுமா தெரியாதா? இந்த மண்ணின் உப்பை தின்றுவிட்டு வளங்களை அனுபவித்து விட்டு, பாரதத் தாயை வணங்குவதில் அப்படி என்ன சங்கடம்?

தவிர்க்க முடியாத சூழலில் தான் முதலில் வந்தே மாதரம் இசைக்கப்பட்டது என்று கூறுகிறார் தமிழ்நாட்டின் அமைச்சர். இது எவ்வளவு பெரிய ஆபத்தில் கொண்டு போய் முடியும் என்பது இந்திய அரசமைப்பின் மீது, இந்திய இறையாண்மையை காப்பேன் என்று உறுதிமொழி எடுத்த விஜய்க்கு புரிகிறதா  இல்லையா? தி.மு.க பாணியில் ஒன்றிய அரசு என்று அழைக்க வேண்டும் என்றால் தாராளமாக அழைத்துக் கொள்ளுங்கள்.

ஆனால் அதற்கு முன்பு, உங்கள் கொள்கை தலைவர்களான அம்பேத்கரும், காமராஜரும் இந்த தேசத்தின் ஒற்றுமைக்காக சிறை சென்றவர்கள் வாழ்நாள் முழுவதும் உழைத்தவர்கள் என்பதை மறந்து விடாதீர்கள். நீங்கள் பாஜகவை எதிர்த்தாலும், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தமிழகத்துக்கு அள்ளிக் கொடுப்பதை நிறுத்த மாட்டார். ஆனால் இந்திய தேசியத்தை நேரடியாகவோ, மறைமுகமாகவோ எதிர்த்தால், அதை பா.ஜ.க வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது” என தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User