Tiger Shroff attack: டெல்லி டு மும்பை... டைகர் ஷெராப்பைச் சுட துப்பாக்கி கொடுத்த உ.பி பெண்கள்!

Oct 21, 2026 - 18:30
0
Tiger Shroff attack: டெல்லி டு மும்பை... டைகர் ஷெராப்பைச் சுட துப்பாக்கி கொடுத்த உ.பி பெண்கள்!

மும்பையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பாலிவுட் நடிகர் டைகர் ஷெராப் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது தொடர்பாக டெல்லி மற்றும் ஹரியானாவில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ராதா மற்றும் பபிதா ஆகிய இரண்டு பெண்களும் டெல்லி ரயில் நிலையத்தில் கைது செய்யப்பட்டனர். இவர்கள் இரண்டு பேரும் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். மற்ற இருவரான குணால் மற்றும் சுமித் ஆகியோர் ஹரியானா மாநிலம், சோனிபட் என்ற இடத்தில் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட அனைவரும் 19 முதல் 23 வயதுடையவர்கள் ஆவர். போலீஸார் நடத்திய விசாரணையில் குணால் சமீபத்தில் வழக்கு ஒன்றில் ஜாமீனில் வெளிவந்தது தெரியவந்தது.

அவர் ஹரியானாவைச் சேர்ந்த தனது நன்பர் ஒருவர் மூலம் வெளிநாட்டில் பதுங்கி இருக்கும் லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டத்தைச் சேர்ந்த அனில் பண்டிட்டுடன் ஆன்லைன் மூலம் தொடர்பு கொண்டிருக்கிறார்.

அனில் பண்டிட் கேட்டுக்கொண்டபடி அமிர்தசரஸில் இருந்து குணால் துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை வாங்கினார். இரண்டு மாதங்களுக்கு முன்பு குணால் தனது தோழி ராதாவைச் சந்தித்து தனது செயல்பாடுகள் குறித்து எடுத்துக் கூறி, துப்பாக்கியை மும்பையில் டெலிவரி செய்யும்படி கேட்டுக்கொண்டார்.

கடந்த 15ம் தேதி அதாவது துப்பாக்கிச்சூடு நடப்பதற்கு மூன்று நாள்களுக்கு முன்பு குணால் ராதாவையும் பபிதாவையும் புது டெல்லி ரயில் நிலையத்தில் இறக்கிவிட்டார். அவர்கள் அங்கிருந்து மும்பைக்கு ரயிலில் ஏறினர். ராதாவின் பையில் துப்பாக்கி மறைத்து வைக்கப்பட்டு இருந்தது. பயணத்தின் போது, ​​குணால் ஒரு ரகசிய செயலி மூலம் இரண்டு பெண்களுடனும் தொடர்பில் இருந்தார். அதோடு அனில் பண்டிட் சொன்ன தகவல்களையும் தெரிவித்தார். கடந்த 17ம் தேதி இரண்டு பெண்களும் மும்பை தாதர் ரயில் நிலையத்தில் வந்து இறங்கினர்.

அங்கு ஒரு ஹோட்டலில் அறை எடுத்து தங்கினர். அங்கு வந்து துப்பாக்கிச்சூட்டில் தொடர்புடைய மைனர் வந்து துப்பாக்கி இருந்த பையை வாங்கிச் சென்றார். அதே நாள் அவர்கள் வேறு ஒரு ரயில் மூலம் டெல்லிக்கு சென்றனர். அவர்கள் டெல்லியில் இறங்கியவுடன் கைது செய்யப்பட்டனர். அடுத்த நாள் அதாவது கடந்த 18ம் தேதி துப்பாக்கிச்சூடு நடந்தது. துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு பிறகு அதில் ஈடுபட்ட மூன்று பேரும் உடனே மும்பையை காலி செய்ய தேவையான ஏற்பாடுகளை செய்யும்படி குணாலிடம் அனில் பண்டிட் கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.

`எனது மகன் நிரபராதி'

மூவரும் சூரத்திற்கு டாக்சியில் சென்று அங்கிருந்து ராஜஸ்தான் செல்லும் ரயிலில் ஏறி சென்றனர். அவர்களை போலீஸார் கோட்டாவில் மடக்கி பிடித்து கைது செய்தனர். மும்பையில் பாலிவுட் நடிகர் டைகர் ஷெராப் துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக டெல்லி போலீஸாரால் சமீபத்தில் கைது செய்யப்பட்ட நான்கு பேரில் ஒருவரான சுமித்தின் தாயார், தனது மகன் நிரபராதி என்றும், அவரை தேவையில்லாமல் கைது செய்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

தனது மகன் ராஜஸ்தானில் உள்ள காது ஷியாம் கோயிலுக்குச் சென்றதாகவும், துப்பாக்கிச்சூடு அல்லது ஆயுதங்கள் விநியோகம் செய்ததாகக் கூறப்படும் எந்த சம்பவத்திலும் அவருக்கு தொடர்பு கிடையாது என்றும் கூறினார். மேலும், ``என் மகன் ஒரு துணிக்கடையில் மூன்று வருடங்களாக வேலை செய்கிறான். அவன் 9-ம் வகுப்பு வரை படித்திருக்கிறான். அவன் காது ஷ்யாமுக்குச் செல்வதாக கூறிவிட்டு சென்றான்.

தினக்கூலி மூலம் கிடைக்கும் வருமானத்தை நம்பியே குடும்பம் இருக்கிறது. வாடகை வீட்டில் வசிக்கிறோம். அதிக வாடகை காரணமாக சமீபத்தில் இடம் மாறினோம்'' என்று சுமித்தின் தாய் கூறினார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User