திறந்துக் கிடந்த வீட்டின் கேட்; சாலைக்குத் தவழ்ந்து வந்த குழந்தை; சாமர்த்தியமாகச் செயல்பட்ட டிரைவர்!

Jun 12, 2026 - 11:02
0
திறந்துக் கிடந்த வீட்டின் கேட்; சாலைக்குத் தவழ்ந்து வந்த குழந்தை; சாமர்த்தியமாகச் செயல்பட்ட டிரைவர்!

கேரள மாநிலம் மலப்புறம் மாவட்டம் கொண்டோட்டியிலிருந்து வலியபறம்பு செல்லும் 'சபா மர்வா' என்ற தனியார் பேருந்து பயணிகளுடன் சென்றுகொண்டிருந்தது.

பேருந்து கிணறுபடி என்ற பகுதியில் வளைவான சாலையில் பேருந்து சென்றுகொண்டிருந்தபோது திடீரென சாலை நடுவே பிஞ்சு குழந்தை அமர்ந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பேருந்து ஓட்டுநர் சாலையிலேயே பேருந்தை நிறுத்தினார்.

சாலையின் நடுவே ஒரு பச்சிளம் குழந்தை தவழ்ந்து செல்வதைக் கண்டு பயணியர் இதயம் ஒரு கணம் நின்றது. பேருந்து நடத்துநர் ​உடனே இறங்கிச் சென்று குழந்தையைப் பத்திரமாக மீட்டார்.

சாலையோரம் இருந்த வீட்டின் காம்பவுண்ட் கேட் திறந்திருந்ததைப் பார்த்த நடத்துநர் குழந்தையை அந்த வீட்டுக்குக் கொண்டு சென்றார். குழந்தையின் பெற்றோர்கள் வீட்டின் வராந்தாவில் அமர்ந்து செய்தித்தாள் வாசித்துக் கொண்டிருந்ததாகவும், வீட்டில் இருப்பவர்கள் கவனிக்காத நேரத்தில், திறந்திருந்த கேட் வழியாக ஒரு வயது கூட நிரம்பாத பெண் குழந்தை தவழ்ந்து வந்து சாலைக்கு வந்ததும் தெரியவந்தது.

குழந்தை வெளியே வந்ததை பெற்றோர் அறியவில்லை. குழந்தையுடன் பேருந்து ஓட்டுநர் சென்றபோதுதான் அவர்களுக்கே விஷயம் புரிந்தது. பெற்றோர் ஆனந்த கண்ணீருடன் குழந்தையைப் பெற்றுக்கொண்டனர்.

குழந்தையை மீட்கச் செல்லும் பேருந்து நடத்துநர்
குழந்தையை மீட்கச் செல்லும் பேருந்து நடத்துநர்

இதுகுறித்து பேருந்தில் இருந்த பயணியர் கூறுகையில், "பேருந்தை ஓட்டி வந்த டிரைவர் ராமச்சந்திரன், சாலையின் நடுவே குழந்தை இருப்பதைக் கண்டதும், எந்தவிதத் தயக்கமுமின்றி உடனடியாக சடன் பிரேக் போட்டு பேருந்தை நிறுத்தினார்.

பேருந்து நின்ற வேகத்தில், நடத்துநர் நவாஸ் கீழே குதித்து ஓடிச் சென்று, அந்தக் குழந்தையை வாரி அணைத்து பாதுகாப்பாக மீட்டெடுத்தார். நொடிப் பொழுதில் நடந்த இந்தச் செயல், பெரியதொரு விபத்தைத் தடுத்தது" என்றனர்.

குழந்தையை மீட்டு எடுத்துச் செல்லும் காட்சி
குழந்தையை மீட்டு எடுத்துச் செல்லும் காட்சி

இந்தச் சம்பவம் பேருந்தில் இருந்த சி.சி.டி.வி-யில் பதிவானது. அந்த சி.சி.டி.வி வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகின்றன.

ஓட்டுநர் மற்றும் நடத்துநரின் துரிதச் செயல்பாடு ஆகியவற்றைக் கண்டு பொதுமக்கள் அவர்களைப் பாராட்டி வருகின்றனர். பெற்றோரின் கவனக்குறைவால் நிகழ்ந்த இச்சம்பவம், சிறிய குழந்தைகளை வைத்திருக்கும் பிற பெற்றோருக்கும் பெரிய பாடமாகவும், எச்சரிக்கையாகவும் அமைந்துள்ளது.

​எந்தவித காயமுமின்றி குழந்தை மீட்கப்பட்டது அந்தப் பகுதி மக்களிடையே பெரும் நிம்மதியை ஏற்படுத்தியது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User