சிவப்பு ட்ரோஜன் குதிரை | உளவன் 12

Jul 30, 2026 - 18:01
0
சிவப்பு ட்ரோஜன் குதிரை | உளவன் 12

“பயப்படாதீங்க. மயக்க மருந்துதான். விமானத்துல ஏறுற வரைக்கும்தான் மயக்கம் இருக்கும்…” வோல்கோவுக்கு புரிந்து விட்டது. சச்சரவு எதுவும் செய்யாமல் ஒத்துழைத்தார். வோல்கோவின் மனைவி அதிர்ச்சியில் உறைந்தார். கடுமையாக கூக்குரலிட்டார். முயன்றவரை எதிர்ப்புக் காட்டினார். 

வந்தவர்கள் வோல்கோவையும் அவர் மனைவியையும் வலுக்கட்டாயமாக இருக்கையில் அமர்த்தி மயக்க ஊசியை செலுத்தினர். மயக்க மருந்து வேலை செய்யத் தொடங்கியதும் வந்தவர்கள் அடுத்த வேலையில் பரபரப்பாக இறங்கினர்.

துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் இருந்த சோவியத் ரஷ்யாவின் தூதரக வளாகம் அது. அங்கேயே தூதரக ஊழியர்களின் குடியிருப்புகளும் இருந்தன. வோல்கோவ் (Konstantin Dmitrievich Volkov) சோவியத் ரஷ்யாவின் துணைத் தூதர். இது வெளிப்படையான பதவி. துருக்கியில் உளவு பார்க்கும் ரஷ்ய உளவுத்துறையின் துணைத் தலைவர் என்ற பொறுப்பே பிரதானப் பணி.

ரஷ்ய தூதருக்கும் அவருக்கும் மனக்கசப்பு. நாளடைவில் அது உயிரச்சமாக வளர்ந்தது. எதிலாவது சிக்க வைத்து தன்னை கொல்ல வாய்ப்பிருப்பதாக பயந்தார் வோல்கோவ். வேலை செய்யும் இடம் அப்படி. நாட்டின் அதி ரகசிய உளவு தகவல்களை கையாளும் உயர் பதவி. துரோகி என முத்திரை குத்தி எளிதாக கதையை முடித்து விடலாம். உடனடியாக அங்கிருந்து தப்பிக்க முடிவெடுத்தார்.

தாய் நாட்டுக்கு திரும்பினாலும் உயிர் பிழைக்க முடியாது. உயிரைக் காக்க ஏதாவது செய்தாக வேண்டும். சதிகாரன் என்ற பட்டம் கட்டி பாடை கட்டுவதைவிட, நாமே துரோகியாகி வாழ்நாளை நீட்டித்துக் கொள்ளலாம். அந்த நப்பாசையில் துரிதமாக துரோகச் செயலில் இறங்கினார். அதேசமயம் மிக மிக கவனமாகவும் காலடி எடுத்து வைத்தார். 

1945, ஆகஸ்ட் 19-ம் தேதி இஸ்தான்புல்லில் உள்ள பிரிட்டிஷ் தூதரகத்தை அணுகினார். பிரிட்டிஷ் துணைத் தூதர் சாண்ட்ரி ஹாமில்டன் பேஜை (Chandry Hamilton Page) சந்தித்தார். அங்கிருந்த செயலாளர்களில் ரஷ்ய மொழி தெரிந்த ஒருவர் மொழிபெயர்ப்பாளராக உதவினார்.

“பிரிட்டனில் பணியாற்றும் மூன்று ரஷ்ய உளவாளிகளின் உண்மையான பெயர் எனக்கு தெரியும்.” இதைக் கேட்டதும் பேஜ் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. “அவர்களில் இரண்டு பேர் வெளியுறவு அலுவலகத்தில் இருக்கின்றனர். மற்றொருவர் லண்டனில் உள்ள உளவுத்துறையின் ஒரு பிரிவை வழி நடத்துகிறார். (Two of them were in Foreign Office; one was head of a counter-espionage organization in London.)” தன்னிடம் இருக்கும் அணுகுண்டைத் தூக்கி வீசினார் வோல்கோவ்.

பிற நாடுகளுக்கு உளவு பார்க்கும் குள்ள நரிகள் எல்லா தேசத்திலும் இருப்பது வழக்கம்தான். பணத்துக்காக சொந்த தேசத்தையே காட்டிக் கொடுக்கும் பாதகர்கள் இருக்கத்தான் செய்வார்கள். ஆனால், உளவுத்துறை தலைமைப் பொறுப்பிலேயே எதிரியா? பிரிட்டிஷ் துணைத் தூதர் பேஜ் அதிர்ச்சியில் உறைந்தார்.

“அது யார், யார் எனச் சொல்கிறேன். ஆனால் ஒரேயொரு நிபந்தனை. நானும் என் மனைவியும் இங்கிருந்து பத்திரமாக வெளியேற வேண்டும். ரஷ்ய உளவுத்துறை அதிகாரிகள் கைகளில் சிக்கிக் கொள்ளக் கூடாது. சைப்ரஸ் அல்லது தென்னாஃப்ரிக்காவில் வேறு அடையாளத்தில் குடியேற தேவையான ஆவணங்களை ஏற்பாடு செய்து தர வேண்டும். 27500 பவுண்ட் பணமும் வேண்டும்.”

பிரிட்டன் தூதரக அதிகாரிகளை நம்பி, கையில் இருக்கும் தகவல்களை முழுமையாக கொட்டிடவில்லை. அதேசமயம், விலை மதிப்புமிக்க தகவல் இருப்பதை நம்பும்படியாகச் சொன்னார். பிரிட்டன் உளவுத்துறை தலைமைப் பொறுப்பிலேயே ரஷ்ய உளவாளி இருப்பதாகச் சொல்கிறார். அந்த சிவப்பு ட்ரோஜன் குதிரைக்கே (Trojan Horse) வோல்கோவ் வந்துபோன தகவல் சென்றுவிடுமே! இதை யோசிக்க அவர் தவறிவிட்டார். உயிர் பயம் அவர் சிந்தனையை மழுங்கடித்திருந்தது.

“பிரிட்டன் தலைமையை தொடர்பு கொண்டு பேசி விட்டு விரைவில் தகவல் தெரிவிக்கிறோம்.” துணைத் தூதர் பேஜ் பதிலளித்தார்.

“ஓகே… முக்கியமான நபரை இங்கு வரச் சொல்லுங்கள். அவரிடம் நேரடியாகத்தான் பெயர்களைச் சொல்ல முடியும். எந்த வகையிலும் தந்தி வழியாக தகவல்கள் தர இயலாது. பிரிட்டிஷ் சங்கேதக் குறியீடுகள் பலவற்றை ரஷ்யர்கள் உடைத்துள்ளனர். அதனால், நான் இங்கு வந்து போனதைக்கூட தந்தி மூலம் லண்டனுக்கு தகவல் அனுப்பி விடாதீர்கள்.” மிகவும் வலியுறுத்தி கேட்டுக் கொண்டார்.

அடுத்தடுத்து அதிர்ச்சி ஏவுகணைகளை வீசினார் வோல்கோ. அவரிடம் இருக்கும் தகவல்களுக்கு அவர் கேட்ட விலை குறைவுதான். அவர் சொல்லும் தகவல்கள் உண்மை என்றால், கேட்டதற்கும் மேலேயே செய்து கொடுக்கலாம். விரைவாக பிரிட்டனின் MI6 அதிகாரிகளுக்கு தகவல் பறந்தது. அந்த சிவப்பு ட்ரோஜன் குதிரைக்கும் அந்தத் தகவல் கிடைத்திருக்கும்.

இரண்டாம் உலகப் போர் ஏறக்குறைய முடிவுக்கு வந்துவிட்டது. டபுள் கிராஸ் திட்டத்தின் (XX) வெற்றி விகிதம் நூறு சதவீதமாக இருந்தது. மனித உளவு (HUMANINT) வகையறாவில் ‘இரட்டை உளவாளிகள்’ பிரிவை உருவாக்கியதை, பிரிட்டன் உளவுத்துறையின் சாதனை என்றே சொல்லலாம். அதனை தனிப் பிரிவாக்கி போரில் வாகை சூடியது பிரிட்டன். ஜெர்மனியையும் இத்தாலியையும் மண்ணைக் கவ்வச் செய்ததில் இரட்டை உளவாளிகளே கதாநாயகர்கள். அதற்கென தனிக் கொள்கையையும் உருவாக்கியது.

எதிரி நாட்டில் உளவு பார்க்க புதிய ஆட்களைத் தேர்வு செய்து, பயிற்சி அளித்து, அங்கு அனுப்பி, தகவல்களைத் திரட்டி… யப்பப்பா அதிக செலவு பிடிக்கும் திட்டம். போதுமான பலனையும் தருவதில்லை. பிரிட்டன் உளவுத்துறையின் பழுத்த அனுபவம் இது. இதற்குப் பதிலாக பிரிட்டனில் உளவு பார்க்கும் எதிரி நாட்டு உளவாளியைக் கைது செய்து மிரட்டினால் போதும். அவர்களை ஜகஜால எத்தன்களாக்கி விடலாம்.

  1. எதிரி நாட்டின் உளவு அமைப்பை கட்டுப்படுத்த வேண்டும்.

  2. எதிரி நாட்டின் ஒற்றர்களை வளைக்க வேண்டும்.

  3. எதிரி நாட்டின் உளவு அமைப்பின் தலைவர்கள், ஆளுமைகளை பற்றித் தெரிந்திருக்க வேண்டும். அவர்களின் உளவு முறையை விரிவாக அறிய வேண்டும்

  4. எதிரி நாட்டின் உளவு அமைப்பின் குறியீடுகள், தொழில்நுட்பங்களை அறிய வேண்டும்.

  5. எதிரி நாட்டிலிருந்து கேட்கப்படும் கேள்விகளிலிருந்து அவர்களின் திட்டங்கள் - நோக்கங்களை அறிய வேண்டும்.

  6. எதிரி நாட்டுக்கு அனுப்பப்படும் பதில்கள் மூலம் அவர்களின் திட்டங்களை பாழாக்க வேண்டும்.

  7. பிரிட்டனின் திட்டங்களைப் பற்றி எதிரியை ஏமாற்ற வேண்டும்.

இப்படி, இரட்டை உளவாளிகள் திட்டத்திற்கு இலக்குகளை நிர்ணயித்து முன்னேறினர். 

ஆனால், எத்தனுக்கு எத்தன் இருக்கத்தானே செய்வான். பிரிட்டன் உளவுத்துறை மேல்மட்டத்திலேயே ஆட்டுத் தோல் போர்த்திய நரி. எந்தப் பிரிவில், யாரை சந்தேகம் கொள்வது? ஒரு பக்கம் ஃபாசிஸத்திற்கெதிராக போரில் கூட்டணி. மறுபக்கம் நட்பு நாடுகளிலேயே உளவு வலைப் பின்னல். அதுவும் மேல் மட்டத்திலேயே வைத்திருக்கிறதே ரஷ்யா…? ரஷ்யாவின் நயவஞ்சகத்தனத்தை பொறுக்க முடியவில்லை. உளவுத்துறை அதிகாரிகளின் ஆலோசனையிலேயே வாரங்கள் கடந்தன. வோல்கோவைச் சந்திக்க யாரும் இன்னும் இஸ்தான்புல்லுக்கு புறப்படவில்லை.

இரண்டாம் உலகப் போர் காலக் கட்டத்திலேயே பிரிட்டனுக்கு ஓர் ஐயம் இருந்தது. ஐயம் என்பதைவிட அச்சம் என்றே சொல்லலாம். தற்போது நட்பு நாடாக இருக்கும் ரஷ்யா மீதுதான் அந்த சந்தேகப் பார்வை. ஜெர்மனியை எதிர்ப்பதற்காக போரில் கூட்டு சேர்ந்தாலும், ரஷ்யா மீது ஒரு கண் வைத்திருந்தது. 

முதலாளித்துவ பார்வை கொண்ட பிரிட்டன், கம்யூனிஸ நாடான ரஷ்யாவை அபாயமாகவே பார்த்தது. செங்கொடி புரட்சி முழக்கம் கேட்டு விடக்கூடாது என்பதில் முழு ஐரோப்பாவுமே விழிப்போடு இருந்தது. அதனால், ரஷ்யாவைக் கண்காணிப்பதற்காக 1944-ம் ஆண்டு தொடக்கத்திலேயே Section IX என்ற பிரிவை பிரிட்டன் தொடங்கியது. கம்யூனிஸ்ட் ஒற்றர்களைக் கையாள்வதற்கென்றே தனிப் பிரிவு.


அந்தப் பிரிவின் தற்போதைய தலைவர் கிம் ஃபில்பியை (Kim Philby) இஸ்தான்புல் அனுப்புவதென தீர்மானித்தனர். அவரின் வருகையை எதிர்பார்த்து காத்திருக்கவில்லை வோல்கோவ். அவர்தான் வரப் போகிறார் என்பதும் வோல்கோவுக்கு தெரியாது. பிரிட்டன் உளவுத்துறை உயர் அதிகாரிகளிடம் நேரடியாக தகவலைச் சொல்ல வேண்டும் என்று மட்டும்தான் விரும்பினார். யார் வந்தால் அவருக்கு என்ன? ஆனால் நாட்கள் செல்லச் செல்ல அவருக்கு நம்பிக்கை போய்விட்டது.

ரஷ்ய உளவுத்துறை அதிகாரிகள் கதவைத் தட்டினர். சாவை நேரில் கைகுலுக்கி வரவேற்றார் வோல்கோவ். வந்தவர்கள் எந்த விசாரணையுமின்றி சுட்டுக் கொன்றுவிடுவார்கள். அப்படித்தான் அவர் எதிர்பார்த்தார். ஆனால் வந்தவர்கள் ரஷ்யா அழைத்துச் செல்வதாக வாக்குறுதி அளித்தனர். 

விசாரணை என்ற பெயரில் ரஷ்யாவில் சித்ரவதை செய்வார்கள். இறுதியில் கொலை. தாய் மண்ணில் வைத்து உயிரை விடப் போகிறோம். வோல்கோவ் அனைத்தையும் மனக் கண்ணில் ஓட்டிப் பார்த்தார். மயக்க மருந்து செலுத்தும்போது அவர் எந்த எதிர்ப்பும் காட்டவில்லை. ஆனால், அவர் மனைவிக்குத்தான் என்ன நடக்கிறது என்பதே புரியவில்லை.

தூதரகத்தில் பணிபுரிந்தவர்களைக் கைது செய்ய, தூதரகம் அமைந்திருக்கும் நாட்டின் அனுமதி தேவையில்லை. அதனால், சட்டவிரோதக் கைதை எந்த எதிர்ப்புமின்றி ரஷ்ய உளவுத்துறை அதிகாரிகள் மேற்கொண்டனர். பொருட்களை விமானத்தில் அனுப்பும் நீண்ட பைகள் இரண்டை எடுத்தனர். அதில் இருவரையும் திணித்தனர். காரில் பார்சலை ஏற்றுவதுபோல பாவனை காட்டி வோல்கோவையும் அவர் மனைவியையும் விமான நிலையத்திற்கு கொண்டு சென்றனர். 

விமான நிலையத்தில் வழக்கமாக மேற்கொள்ளப்படும் சுங்க - குடிவரவுத் துறை சோதனை தூதரக அதிகாரிகளுக்கு மேற்கொள்ளப்படுவது கிடையாது. அதனால், எந்தப் பதற்றமும் இல்லாமல் மெதுவாக பார்சல்களை இறக்கினர். தயாராக இருந்த சோவியத் யூனியனின் ராணுவ விமானத்தில் இருவரையும் ஏற்றி மாஸ்கோவுக்கு கொண்டு சென்றனர். இருவரின் கதியும் என்ன ஆனது என்பது வரலாற்றின் இருண்ட பக்கங்களில் மறைந்து விட்டது.

உளவுத்துறையின் ரகசிய அறையில் வைத்து நாட்கணக்கில் விசாரணை நடந்திருக்கலாம். கடுமையான சித்திரவதைகளுக்குப் பின்பு வோல்கோவ் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கலாம். மனைவிக்கு துரோகத்தில் பங்கு இருக்காது என்பதால், அவர் சிறையில் அடைக்கப்பட்டு இறந்திருக்கலாம். எல்லாமே யூகம்தான். இது எதுவுமே Section IX பிரிவு தலைவர் கிம் ஃபில்பிக்கு தெரிய வாய்ப்பில்லை. அவர் இஸ்தான்புல் போய் இறங்கும்போது, வோல்கோவ் என்ற துரோகி அங்கு இல்லை.

அந்த துரோகி வைத்திருந்த ரகசிய தகவல் பிரிட்டனுக்கு கிடைக்காமலேயே போய்விட்டது. அந்நாட்டு உளவுத்துறையை மட்டுமல்ல, சூரியன் மறையாத ஐக்கிய ராஜ்ஜியத்தையே அசைத்துப் பார்த்திருக்கும் அந்தத் தகவல் கிடைக்காமலேயே போய்விட்டது. 

அப்படிச் சொல்ல முடியாது. வோல்கோவ் வைத்திருந்த ரகசிய தகவல், பிரிட்டன் உளவுத்துறைக்குத் தெரியுமோ தெரியாதோ, அந்த நபருக்கு நிச்சயம் தெரிந்திருக்கும். லண்டனில் உள்ள உளவுத்துறையின் ஒரு பிரிவை வழி நடத்தும் அந்த ‘ரஷ்ய தோழருக்கு’ நிச்சயம் தெரிந்திருக்கும். சிவப்பு ட்ரோஜன் குதிரைக்கு அந்தத் தகவல்கள் தெரிந்ததால்தானே வோல்கோவ் கடத்தி, தடம் தெரியாமல் அழிக்கப்பட்டார்.

(தொடரும்)

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User