"அடிப்படைப் புரிதல் இல்லாத கூட்டம் தமிழ்நாட்டை ஆண்டுகொண்டிருக்கிறது!"- வெளுத்து வாங்கும் வேல்முருகன்

Aug 02, 2026 - 09:30
0
"அடிப்படைப் புரிதல் இல்லாத கூட்டம் தமிழ்நாட்டை ஆண்டுகொண்டிருக்கிறது!"- வெளுத்து வாங்கும் வேல்முருகன்



நீட் தேர்வு முறைகேடுகளைக் கண்டித்து, கரப்பான் ஜனதா கட்சியினர் நாடுமுழுக்க நடத்திய போராட்டத்தின் ஒரு பகுதியாக, தமிழக வாழ்வுரிமைக் கட்சியினரும் சென்னையில் அவர்களது கட்சித் தலைமை அலுவலகத்திலேயே தொடர் போராட்டம்  நடத்தி ஊடக கவனம் பெற்றிருக்கின்றனர். இந்த நிலையில், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகனிடம் நமது கேள்விகளை முன்வைத்தோம்...

"நீட் தேர்வு விவகாரத்தில், 'தேர்வை ரத்து செய்வதுதான் நிரந்தரத் தீர்வு. மற்ற கோரிக்கைகள் முழு பலனைத் தராது' என்ற தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினின் கருத்தை வரவேற்கிறீர்களா?"

"அந்த அறிக்கையில் இருக்கக்கூடிய கருத்துகள் எனக்கும் உடன்பாடானதுதான். அதேசமயம் இதைச் சொல்கின்ற தி.மு.க., கடந்த ஐந்து ஆண்டுகால ஆட்சியின்போது நீட் தேர்வுக்கு எதிராக ஒரேயொரு முறை ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டத்தை மட்டுமே நடத்தியுள்ளது.

வெளிநாட்டில் உள்ள ஓர் இளைஞர் இந்தியா வந்து, நீட் தேர்வு முறைகேடுகளைக் கண்டித்து புதிதாக ஓர் இயக்கத்தை வழிநடத்தி மத்திய பா.ஜ.க அரசுக்கு நெருக்கடி கொடுத்து பணிய வைக்க முடியும் எனில், ஒரு கோடியே 20 லட்சம் வாக்குகளைப் பெற்று வலுவான எதிர்க்கட்சியாக இருக்கின்ற தி.மு.க., நீட் தேர்வு ரத்தை வலியுறுத்தி தமிழ்நாட்டில் ஒரு மாபெரும் போராட்டத்தை ஏன் நடத்தவில்லை? அவர்களைத் தடுத்தது யார்? அதுதான் என் கேள்வி!"

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்



"தி.மு.க-வை நோக்கி இந்தக் கேள்வியை எழுப்புகிற நீங்கள், காங்கிரஸ் கட்சி ஏன் அகில இந்திய அளவில் போராட்டம் நடத்தவில்லை என ஏன் கேட்கவில்லை?"

"காங்கிரஸை நோக்கியும் இதே கேள்வியை நான் முன்வைக்கிறேன். எம்.எல்.ஏ., எம்.பி என எந்தப் பதவியும் இல்லாத விவசாய சங்கங்களால் மாபெரும் போராட்டம் நடத்தி மத்திய பா.ஜ.க அரசைப் பணியவைத்து சட்டத்தையே வாபஸ் பெற வைக்க முடியும் என்றால், இது போன்ற கட்சிகளால் ஏன் முடியாது?

'இந்தி திணிப்பு'க்கு எதிராக கடந்த காலத்தில் மிகச்சிறப்பான போராட்டங்களை நடத்திய வரலாறு தி.மு.க-வுக்கு உண்டு. இவ்வளவு பெருமைமிக்க தி.மு.க., நேற்று ஆரம்பிக்கப்பட்ட காக்ரோச் கட்சி போராட்டத்துக்கு தனது மாணவர் அணியையும் எம்.பி-யையும் அனுப்பி பேசவைக்கிறபோதுதான், ஏன் நீங்களே தன்னிச்சையாக போராட்டத்தை முன்னெடுக்கவேண்டியதுதானே என நான் தி.மு.க-வை நோக்கி கேள்வி எழுப்புகிறேன்."

"கடந்த தி.மு.க-வின் ஐந்து ஆண்டுக்கால ஆட்சியோடு ஒப்பிடும்போது த.வெ.க-வின் ஆட்சி எப்படியிருக்கிறது?"

"கடந்த தி.மு.க ஆட்சியில், அதிகார வர்க்கத்திலிருந்த ஒருசிலர் தன்னிச்சையாக செயல்படுவது, ஆட்சிக்கு அவப்பெயரைத் தேடித்தரும் என தொடர்ந்து 5 ஆண்டுக்காலமும் நான் சட்டமன்றத்தில் வலியுறுத்திவந்தேன். அதுமட்டுமல்லாமல், தி.மு.க-விலிருந்த ஒருசில அமைச்சர்கள் மற்றும் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகளால் இன்றைக்கு அந்தக் கட்சி ஒரு பெரும் தோல்வியை சந்தித்திருக்கிறது. அதேசமயம், தி.மு.க ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மக்கள் நலத்திட்டங்களோ அல்லது ஒழுங்கான கட்டமைப்போ இந்த த.வெ.க ஆட்சியில் இல்லை என்பதுதான் இந்த 70 நாள் ஆட்சியில் தெரியவருகிறது.

ஸ்டாலின்
ஸ்டாலின்



தடி எடுத்தவர்கள் எல்லாம் தண்டல்காரர்கள் என்பதுபோல, த.வெ.க தொண்டர்கள் இன்றைக்கு ஆய்வு என்ற பெயரில், மருத்துவமனை, கல்லூரிக்குப் போவதும், அதிகாரிகளின் நாற்காலியில் அமர்ந்துகொண்டு அட்ராசிட்டி செய்வதுமான நிலை தொடர்கிறது. ஆக, அரசியல் அதிகாரம் என்றால் என்னவென்ற அடிப்படைப் புரிதல்கூட இல்லாத ஒரு கூட்டம் இன்றைக்குத் தமிழ்நாட்டை ஆண்டுகொண்டிருக்கிறது. இவர்களுக்கு நீட் தேர்வு, மேகதாது, முல்லைப்பெரியாறு, காவிரி பிரச்னை என எதைப்பற்றியும் தெரியாது.

கடந்த தி.மு.க ஆட்சியின்போது, என்.எல்.சி பங்குகளை தனியாருக்கு விற்பதற்கான அறிவிப்பு வெளியானவுடனேயே, தி.மு.க அரசு எனது தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக்கூட்டியது. இதையடுத்து என்.எல்.சி உற்பத்தியை ஜீரோவுக்குக் கொண்டுவந்து, நிர்வாகத்தை நாங்கள் பணியவைத்தோம். ஆட்சி மாறியவுடன் இப்போது மீண்டும் என்.எல்.சி பங்குகளை தனியாருக்கு விற்று வருகிறார்கள். ஆனால், இன்றைய த.வெ.க அரசு இதை எதிர்த்து வெறுமனே ஒரு கடிதம் மட்டும் எழுதி பொறுப்பை முடித்துக்கொண்டார்கள். வேறு ஒன்றும் செய்யவில்லை!"

"அப்படியென்றால், 'கடந்தகாலத்தில் ஆக்கபூர்வமாக செயல்பட்டுவந்த தி.மு.க கூட்டணியிலிருந்து நாம் பிரிந்துவந்தது தவறு' என இப்போது நீங்கள் உணர்கிறீர்களா?"

"தவறு என்று எண்ணவில்லை. பெரியண்ணன் மனப்பான்மையில் இருந்த தி.மு.க., எங்களது மூன்று அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற மறுத்தது. எங்கள் சுயமரியாதையை மதிக்கத்தவறிய தி.மு.க-வுக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும் என்றுதான் கூட்டணியிலிருந்து பிரிந்து வந்தோம்.

தேர்தலுக்கு பத்து நாள்கள் முன்பு கூட்டணியிலிருந்து வெளியே வந்து, புதிதாக ஒரு சின்னத்தைப் பெற்று வெற்றி பெற்றுவிட முடியாது என்று அப்போதே எனக்கும் தெரியும். ஆனாலும் 2026 தேர்தலில் எங்கள் கூட்டமைப்பு கிட்டத்தட்ட 3 லட்சம் வாக்குகளைப் பெற்றிருக்கிறது. அதேசமயம் தி.மு.க வெறும் 100 ஓட்டுகளில் ஆரம்பித்து 5 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் 27 இடங்களில் தோற்றிருக்கிறது. எனவே, வேல்முருகனால் சில தொகுதிகளில் தி.மு.க-வைத் தோற்கடிக்க முடியும் என நிரூபித்திருக்கிறேன்."

ராமதாஸ் - அன்புமணி
ராமதாஸ் - அன்புமணி



"கடந்த காலத்தில், பா.ம.க-வில் துணைப் பொதுச்செயலாளர், மாநில அமைப்புச் செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்து, கட்சியைக் கட்டமைத்து வளர்த்தெடுத்ததில் என்னுடைய பெரும்பங்கு இருக்கிறது. இந்த நிலையில், என் கண் முன்பே, அன்புமணியும் மருத்துவர் ராமதாஸும் தங்களுக்குள் சண்டையிட்டுக்கொண்டு கட்சியை அழிவுப்பாதைக்குக் கொண்டுசெல்வது ஏற்புடையதல்ல என எண்ணி, இருவரிடமும் ஒன்றிணைந்து கட்சியைக் காப்பாற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தேன். ஏனெனில், சமூக நீதித் தளத்தில் போராடுவதற்கு பா.ம.க ஒன்றுபட்டு நிற்பது தற்போதைய காலகட்டத்தில் இன்றியமையாத ஒன்று. அந்தவகையில், அக்கட்சியின் தலைவர்கள் இருவரும் ஒன்றிணைந்ததில் எனக்கு மாபெரும் மகிழ்ச்சி! அதை நான் வரவேற்கிறேன்."

"இருவரும் ஒன்று சேர்ந்திருக்கும் இந்த வேளையில், ஜி.கே.மணி, அருள் போன்றவர்கள் பா.ம.க-விலிருந்து விலகி நிற்பதை எப்படி பார்க்கிறீர்கள்?"

"அது பா.ம.க-வின் உட்கட்சி பிரச்னை. அதில் நான் தலையிட முடியாது."

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User