தூத்துக்குடியில் வீசிய திடீர் ராட்சத சுழல் காற்று - விமான நிலையப் பகுதிகள் சேதம்!

Jun 22, 2026 - 12:31
0
தூத்துக்குடியில் வீசிய திடீர் ராட்சத சுழல் காற்று - விமான நிலையப் பகுதிகள் சேதம்!

தூத்துக்குடியில் நேற்று பகல் முழுவதும் அதிகமான வெயில் காணப்பட்டது. மாலையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. புறநகர் பகுதிகளான மறவன்மடம் முதல் வாகைகுளம் வரை மாலை சுமார் 4.45 மணி அளவில் திடீரென பலத்த காற்று வீசத் தொடங்கியது. விமானநிலையம் மற்றும் டோல்கேட் பகுதியில் காற்று வலுவடைந்து வீசத் தொடங்கியது.

சுழல் காற்று

மேகக்கூட்டத்திலிருந்து நேரடியாக தரையைத் தொட்டபடி சுழல்காற்றால் சிறிய மரங்கள் வேரோடு சாய்ந்தது. இதில் ஒரு மரம் தூக்கி வீசப்பட்டதில் டோல்கேட் கேபின்கள், அலுவலகம், கண்ணாடிகள், கம்யூட்டர் உள்ளிட்ட பொருட்கள் முற்றிலும் சேதமடைந்தன. டோல்கேட் பகுதியில் வைக்கப்பட்டிருந்த பேரிகார்டுகள் பறந்தன. காற்றினால் தூக்கி வீசப்பட்ட தகர ஷீட்டுகள் அங்கிருந்த மின் கம்பங்களில் விழுந்தன.

இதனால் அங்கு மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. வாகனங்களை ஸ்கேன் செய்யும் கருவிகளும் பறந்தன. ஊழியர்கள் ஓடிச் சென்று வேறு இடங்களில் பாதுகாப்பாக நின்று கொண்டனர். அங்கிருந்து நகர்ந்த சுழல் காற்றால் விமான நிலைய பார்க்கிங் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த ஷெட்டுகளும் பறந்து காம்பவுண்ட் சுவரைத் தாண்டி விழுந்தது. விமான நிலையத்தின் அருகில் உள்ள தனியார் தீம் பார்க்கும் சேதமடைந்தன.

சூறைக்காற்று

அதன் மேற்கூரைகள் பறந்து நீச்சல்குளத்தில் விழுந்ததால் குளித்துக் கொண்டிருந்த 6 பேருக்கு காயம் ஏற்பட்டது. கேளிக்கை அமைப்புகள், மண் ஓடுகள், குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருட்களும் சேதமடைந்தன. இந்த சுழல் காற்றால் சுமார் 200 அடி தூரத்திற்கு மண் புழுதி வீசி கண்ணுக்கு எட்டிய தூரம்வரை சாலையே தெரியாமல் போனது.

மேகம் கடல் நீரை உறிஞ்சுவது போல பூமிக்கும் வானுக்கும் இடையே பெரிய மேகக் குழாய்கள் போன்று உறிஞ்சி சென்றது. அப்பகுதியில் பைக்குகளில் வந்தவர்கள் அச்சத்துடன் ஓரமாக நின்று கொண்டனர். பலர் வாகனங்களில் அமர்ந்தவாறே இந்த சுழல் காற்றினை செல்போனில் வீடியோ எடுத்தனர்.

சரிந்த மின்கம்பங்கள்

இந்த சுழல் காற்றால் பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தது. அமெரிக்காவின் டொரண்டோ போன்ற நகரங்களில் வீசுவது போல வீசிய இந்த காற்றினால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இது குறித்து வருவாய்த்துறையினர் மற்றும் வானிலை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.  

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User