செந்தில் பாலாஜி: `ஆட்சியை கவிழ்க்க சதி; ஹவாலா பணம்' - அனல் பறக்கும் வாதம் | முன்ஜாமீன் கிடைக்குமா?

Jul 08, 2026 - 17:02
0
செந்தில் பாலாஜி: `ஆட்சியை கவிழ்க்க சதி; ஹவாலா பணம்' - அனல் பறக்கும் வாதம் | முன்ஜாமீன் கிடைக்குமா?

தமிழக வெற்றிக் கழக (TVK) எம்.எல்.ஏ இளையராஜா என்பவருக்கு 35 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்க முயன்றதாகக் கூறப்படும் வழக்கில், திமுக எம்.எல்.ஏ செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுக்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தன.

இந்த விசாரணையின்போது, இது வெறும் லஞ்சப் புகார் மட்டுமல்ல, ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு ஆட்சியைக் கவிழ்க்க நடந்த சதி என்றும், இதில் ஹவாலா பணப் பரிமாற்றம் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் அரசுத் தரப்பு அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ, "குற்றம் சாட்டப்பட்ட தொலைபேசி அழைப்பு நிகழ்ந்ததாகக் கூறப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பிறகே புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்த அழைப்பிற்கான ஒலிப்பதிவு ஆதாரம் ஏதும் இல்லை, அழைப்பு விவரப் பதிவுகள் (CDR) மட்டுமே உள்ளன," என்று வாதிட்டார்.

மேலும், "ஆட்சியைக் கவிழ்க்கும் முயற்சி என்பதெல்லாம் புகார்தாரரின் யூகங்களே. சட்டமன்றத்தில் சபாநாயகர் தேர்தலின்போது அனைத்துக் கட்சிகளும் ஒருமனதாக வாக்களித்தன," என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

முதல் தகவல் அறிக்கையில் செந்தில் பாலாஜியின் பங்கு என்ன என்பது குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை என்று நீதிபதி இளந்திரையன் கேள்வி எழுப்பியபோது, "முக்கிய குற்றவாளி ஈரோட்டில் இருந்த அதே நாளில் செந்தில் பாலாஜியும் அங்கே இருந்தார் என்பது மட்டுமே அவர்கள் வைக்கும் ஒரே ஆதாரம். கரூர் இடைத்தேர்தல் வரவிருக்கும் சூழலில், தனது பணிகளைச் செய்ய விடாமல் தடுக்கும் நோக்கத்துடன் இந்த வழக்கில் செந்தில் பாலாஜியை சிக்கவைக்கப் பார்க்கிறார்கள்," என்று இளங்கோ வாதிட்டார்.

அசோக் குமார் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி. குமரேசன், செந்தில் பாலாஜியின் சகோதரர் என்பதற்காகவே இந்த வழக்கில் அவர் தேவையற்ற முறையில் சேர்க்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

இதற்குப் பதிலளித்த அரசுத் தரப்பு வழக்கறிஞர் ஜான் சத்யன், "குற்றம் சாட்டப்பட்டவர்கள் சென்னையில் அறைகள் எடுத்து தங்கி சதி செய்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. இந்த வழக்கின் முக்கிய குற்றவாளிகளில் ஒருவர் சிங்கப்பூருக்குத் தப்பிச் சென்றுவிட்டார். அவர் அங்கிருந்தபடியே ஆதாரங்களான சில காட்சிகளை அழித்துள்ளார், அவற்றை மீட்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன," என்று தெரிவித்தார்.

மேலும், "இது ஒரு தனிப்பட்ட நபர்கள் சம்பந்தப்பட்ட வழக்கல்ல. ஒரு அரசு முக்கியமான காலகட்டத்தில் இருந்தபோது, அதைச் சீர்குலைக்கும் முயற்சியாக இது நடைபெற்றது. முதல் முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு எம்.எல்.ஏ-வை குறிவைத்துள்ளனர்," என்று அவர் வாதிட்டார்.

செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி

இந்த வழக்கில் ஹவாலா பணப் பரிமாற்றம் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்பதற்கு வலுவான ஆதாரங்கள் இருப்பதாகவும், அதை நிலை அறிக்கையாகத் தாக்கல் செய்யத் தயாராக இருப்பதாகவும் அரசுத் தரப்பு தெரிவித்தது. இந்த வழக்கின் விசாரணை பெங்களூரு வரை விரிவடைந்துள்ளதாகவும், செந்தில் பாலாஜி மற்றும் அசோக் குமார் இருவருக்கும் எதிராக வலுவான ஆதாரங்கள் இருப்பதாகவும் ஜான் சத்யன் நீதிமன்றத்தில் ஆணித்தரமாகத் தெரிவித்தார்.

ஒரு லஞ்சப் புகார் என்ற அளவில் தொடங்கிய இந்த வழக்கு, தற்போது 'ஆட்சி கவிழ்ப்பு சதி', 'ஹவாலா பணப் பரிமாற்றம்' எனப் பல்வேறு தீவிர பரிமாணங்களைப் பெற்றுள்ளது.

ஒருபுறம், அரசியல் பழிவாங்கும் நோக்கில் தகுந்த ஆதாரங்கள் இல்லாமல் தங்களைச் சிக்கவைக்க முயற்சி நடப்பதாக செந்தில் பாலாஜி தரப்பு வாதிடுகிறது.

மறுபுறம், இது ஜனநாயகத்திற்கு எதிரான பெரும் சதி என அரசுத் தரப்பு வலுவான ஆதாரங்கள் இருப்பதாகக் கூறுகிறது.

நீதிமன்றத்தில் தொடர்ந்து வாதங்கள் நடைபெற்று வருகிறது.!

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User