உருவகேலி செய்ததால் ஆத்திரம்; சுமைதூக்கும் தொழிலாளி வெட்டிக் கொலை - தூத்துக்குடியில் அதிர்ச்சி!

Oct 27, 2026 - 16:00
0
உருவகேலி செய்ததால் ஆத்திரம்; சுமைதூக்கும் தொழிலாளி வெட்டிக் கொலை - தூத்துக்குடியில் அதிர்ச்சி!

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி  அருகிலுள்ள சங்கரலிங்கபுரம் பகுதியைச் சேர்ந்தவர் காளிராஜ். இவர், திட்டங்குளத்தில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் வணிக வளாகத்தில் செயல்பட்டு வரும் தனியார் தினசரி சந்தையில் சுமை தூக்கும் தொழிலாளியாகப் பணியாற்றி வந்தார்.  இன்று காலை, சந்தையில் உள்ள காய்கறிக் கடையில் காளிராஜ் தூங்கிக் கொண்டிருந்தபோது, அதே தினசரி சந்தையில் சுமை தூக்கும் தொழிலாளியாகப் பணியாற்றி வரும் அஞ்சரம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சின்னத்துரை, கோடரியால் வெட்டிக் காளிராஜைப் படுகொலை செய்துவிட்டு, கொப்பம்பட்டி காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

கொலை செய்யப்பட்ட காளிராஜ்

இதனையடுத்து, கொப்பம்பட்டி காவல் நிலைய போலீஸார்  கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, கிழக்கு காவல் நிலைய போலீஸார், கொலை செய்யப்பட்டுக் கிடந்த காளிராஜின் உடலை மீட்டு, உடற்கூறாய்வுக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்தைத் தூத்துக்குடி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். கொலை செய்துவிட்டு காவல் நிலையத்தில் சரணடைந்த சின்னத்துரையிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொலை செய்யப்பட்ட காளிராஜ், சின்னத்துரையை அடிக்கடி உருவக் கேலி செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்படுவதும் சக தொழிலாளிகள் இருவரையும் சமாதானப்படுத்துவதும் வழக்கமாக இருந்து வந்துள்ளது. கடந்த 24-ம் தேதி, இதே போன்று இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டபோது, காளிராஜ் சின்னத்துரையைக் கீழே தள்ளி தாக்கியதாகக் கூறப்படுகிறது. ஏற்கெனவே உருவக் கேலி செய்து வந்ததுடன், தினசரி சந்தையில் அனைவரின் முன்னிலையிலும் தன்னைக் கீழே தள்ளித் தாக்கியதை அவமானமாகக் கருதிய சின்னத்துரை, ஆத்திரத்தில் காளிராஜைக் கொலை செய்திருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

கொலை நடந்த தனியார் காய்கறிச்சந்தை

உருவக் கேலி மற்றும் தாக்குதல் ஆகியவைதான் கொலைக்குக் காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்தும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  கொலை செய்யப்பட்ட காளிராஜுக்குத் திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் அவரது மனைவிக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. விளையாட்டுத்தனமாகத் தொடங்கிய கிண்டல், கேலி பிரச்னை கொலையில் முடிந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User