மதுரை: சிறுவன் மரணத்தில் திடீர் திருப்பம்; 10 வயது சிறுவனுடன் தாய் கைதான பின்னணி என்ன?

Oct 27, 2026 - 16:00
0
மதுரை: சிறுவன் மரணத்தில் திடீர் திருப்பம்; 10 வயது சிறுவனுடன் தாய் கைதான பின்னணி என்ன?

மதுரை மாவட்டம், கீழவளவு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தனியமங்கலத்தைச் சேர்ந்த பெரியகருப்பன் – சத்யா தம்பதியின் 7 வயது மகன் முத்துவேல், கடந்த 25ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் அப்பகுதியில் உள்ள அடைக்கலம் காத்த அம்மன் கோவில் அருகே விளையாடச் சென்றுள்ளார். ஆனால், மாலை 4 மணி வரை வீடு திரும்பாததால், உறவினர்கள் வீடுகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடியும் சிறுவனைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதையடுத்து, சிறுவனின் தாயார் சத்யா அளித்த புகாரின்பேரில், கீழவளவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில், 90 காவலர்கள் அடங்கிய ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு, இரவு முழுவதும் தீவிர தேடுதல் பணி நடைபெற்றது.

இந்நிலையில், நேற்று (26ஆம் தேதி) காலை, தனியமங்கலம் ராஜங்கம் பகுதியில் உள்ள பாழடைந்த, ஆளில்லாத வீட்டில் சிறுவன் முத்துவேல் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். இதையடுத்து, தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்ப் படையினர் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. சிறுவனின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

சிறுவன் முத்துவேலன்
சிறுவன் முத்துவேலன்

போலீசார் நடத்திய விசாரணையில், சம்பவத்தன்று காலை கோவில் அருகே முத்துவேலும் அதே பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுவனும் விளையாடிக் கொண்டிருந்தபோது, அந்தச் சிறுவன் விளையாட்டாக முத்துவேலின் கழுத்தில் கயிற்றை இறுக்கியதாகக் கூறப்படுகிறது.

இதனால் முத்துவேல் தப்பிச் செல்லும்போது மயக்கம் அடைந்ததாகவும், பின்னர் கயிற்றால் நெருங்கிய சிறுவனின் வீட்டிற்குச் சென்று முத்துவேல் தண்ணீர் கேட்டதாகவும் கூறப்படுகிறது.

அப்போது, அந்தச் சிறுவனின் தாயார் சந்தியா (32) முன்னிலையில் முத்துவேல் மயங்கி விழுந்துள்ளார். சிறுவன் உயிரிழந்ததைத் தொடர்ந்து, தனது மகனின் செயலை மறைக்கவும், ஆதாரங்களை அழிக்கவும் முற்பட்டு சந்தியா, சிறுவனின் உடலைத் தனியமங்கலம் ராஜங்கம் பகுதியில் உள்ள பாழடைந்த வீட்டில் மறைத்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

கைது
கைது

இந்தச் சம்பவம் தொடர்பாக, சட்டத்துடன் முரண்பட்ட சிறுவனை சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், ஆதாரங்களை அழிக்க முயன்றதாகக் கூறப்படும் சந்தியாவைக் கைது செய்து, நீதித்துறை நடுவர் முன்பு ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

7 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் தனியமங்கலம் பகுதியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User