பிரதீப் ராஜ் கொலை: ``காவல்துறை முதல்வரின் கட்டுப்பாட்டில்தான் செயல்படுகிறதா?" - டிடிவி தினகரன்

Sep 10, 2026 - 13:30
0
பிரதீப் ராஜ் கொலை: ``காவல்துறை முதல்வரின் கட்டுப்பாட்டில்தான் செயல்படுகிறதா?" - டிடிவி தினகரன்

கந்துவட்டிக் காரர்களின் தொல்லையால் தன் உயிருக்கு ஆபத்து இருக்கிறது எனவும், தன்னைக் காப்பாற்றும்படியும் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார் பிரதீப் ராஜ் (30).

காவல்துறை கந்துவட்டிகாரர்களுக்கு ஆதரவாகச் செயல்படுகிறது எனப் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் குற்றச்சாட்டும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், அவர் நேற்று மர்ம நபர்களால் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டிருக்கிறார்.

இந்தக் கொலை குறித்து அமமுக தலைவர் டிடிவி தினகரன், ``புகார் அளிக்க வந்த இளைஞருக்குக் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாகக் கூறப்படும் காவல் ஆய்வாளர்; புகார் அளித்த மறுநாளே படுகொலை செய்யப்பட்ட இளைஞர் – ஒவ்வொரு குற்றச் சம்பவத்திற்கும் ஒவ்வொரு காரணம் கூறும் முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்கள், இக்கொலைக்குச் சொல்லப்போகும் காரணம் என்ன?

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

சென்னை, திருவொற்றியூர் காவல் ஆய்வாளர் தன்னை அழைத்துக் கொலை மிரட்டல் விடுத்ததாகவும், பொய் வழக்குப் பதிவு செய்து தன்னைக் கைது செய்யவுள்ளதாகவும் இளைஞர் பிரதீப் ராஜ் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் தெரிவித்திருந்த நிலையில், அதற்கு மறுநாளே அவர் அடையாளம் தெரியாத கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டதாக வெளியாகியுள்ள செய்திகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.

“சட்டத்தை மதித்து நடப்பவர்களுக்கு உற்ற நண்பனாகவும், சட்டத்தை மீறுவோருக்கு அச்சத்தை ஏற்படுத்தும் எதிரியாகவும் காவல்துறை இருக்க வேண்டும்” என்று முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்கள் காவல்துறையைப் பாராட்டிப் பேசிய இரண்டு நாட்கள்கூட முழுமையாக நிறைவடையாத நிலையில், காவல்துறை ஆய்வாளர் ஒருவர் மிரட்டியதாகப் புகார் தெரிவித்த நபர் அடுத்த நாளே படுகொலை செய்யப்பட்டிருப்பது, காவல்துறை முதலமைச்சரின் முழுமையான கட்டுப்பாட்டில்தான் செயல்படுகிறதா என்ற கேள்வியையும், காவல்துறை மீதான பொதுமக்களின் நம்பிக்கையையும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளது.

டிடிவி தினகரன்
டிடிவி தினகரன்

குடும்பப் பிரச்னை, சொத்துத் தகராறு, முன்விரோதம், பழிவாங்கும் மனநிலை எனத் தமிழகத்தில் தவெக ஆட்சிக்கு வந்த பிறகு நிகழும் ஒவ்வொரு குற்றச் சம்பவத்திற்கும் வெவ்வேறு காரணங்களைக் கூறி, அவை சட்டம் ஒழுங்குடன் தொடர்பில்லாதவை என்பது போல் சித்தரிக்கும் முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்கள் இளைஞர் பிரதீப் ராஜ் படுகொலை செய்யப்பட்ட இந்தச் சம்பவத்திற்கும் சொல்லப்போகும் காரணம் என்ன?

எனவே, தமிழகத்தில் அரங்கேறும் ஒவ்வொரு குற்றச் சம்பவத்திற்குப் பின்னரும் புதுப்புது காரணங்களைத் தேடாமல், குற்றச் சம்பவங்கள் நிகழ்வதற்கு முன்பாகவே அவற்றைத் தடுக்கும் வகையில் காவல்துறையைச் செயல்படச் செய்து, சட்டம் ஒழுங்கைப் பேணிக் காத்து, தமிழக மக்களின் பாதுகாப்பை உறுதி செய்திட முன்வர வேண்டும் முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களை வலியுறுத்துகிறேன்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User