‘தவெக-அதிமுக கூட்டணி சேர்வதை மக்கள் விரும்ப மாட்டார்கள்’ – போர்க்கொடி தூக்கிய காங்கிரஸ்

May 13, 2026 - 22:02
0
‘தவெக-அதிமுக கூட்டணி சேர்வதை மக்கள் விரும்ப மாட்டார்கள்’ – போர்க்கொடி தூக்கிய காங்கிரஸ்

தமிழ்நாடு காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் கணபதி சிவக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக மக்கள் ஊழலுக்கு எதிராகவும், பி.ஜே.பி அரசின் மதவாதத்திற்கு எதிராகவும் வாக்களித்தார்கள். ஊழலற்ற நேர்மையான ஆட்சியை தருவீர்கள் என்ற நம்பிக்கையுடன், மாற்றத்தை வேண்டி வாக்களித்த மக்கள் மகத்தான வெற்றியை த.வெ.க-விற்கு தந்துள்ளார்கள். விஜய் முதல்வராக பதவி ஏற்றவுடன் தமிழக அரசியலில் நாகரிகமான அரசியலை முன்னெடுக்கும் விதமாக, முன்னாள் முதல்வர் உள்ளிட்ட அனைத்து கட்சி தலைவர்களையும் நேரில் சந்தித்து ஒரு ஆரோக்கியமான அரசியலுக்கு வழி வகுத்துள்ளீர்கள்.

அதே சமயம், ஒரு சில நிகழ்வுகள் எந்த நோக்கத்திற்காக, ஊழலுக்கு எதிராக, மக்கள் வாக்களித்தார்களோ, அந்த நோக்கத்தையும், எதிர்பார்ப்பையும் சிதைப்பதாக உள்ளது. அ.தி.மு.க கடந்த பத்தாண்டுகளாக பி.ஜே.பி கட்சியுடன் கூட்டணி சேர்ந்து, தமிழக மக்களுக்கு எதிராக செயல்பட்டு வந்துள்ளது. அ.தி.மு.க ஆட்சி காலத்தில் பல்வேறு அமைச்சர்கள் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகினார்கள். ஊழலுக்கு ஊற்றுக்கண்ணாக விளங்கி பல்வேறு வழக்குகளை சந்தித்துள்ள ஒரு சிலர் பி.ஜே.பி தலைமையுடன் வெகு நெருக்கம் காட்டி, தேசிய ஜனநாயக கூட்டணி அமைய முனைப்பு காட்டி கூட்டணியை உருவாக்கினார்கள்.

கணபதி சிவக்குமார்
கணபதி சிவக்குமார்

அத்தகைய அ.தி.மு.க நிர்வாகிகளான எஸ்.பி. வேலுமணி, சி.விஜயபாஸ்கர், சி.வி. சண்முகம் ஆகியோரை நேரில் சந்தித்திருப்பது தங்களுக்கு வாக்களித்த 1.72 கோடி வாக்காளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த செயல் தங்களது வெற்றிக்காக தங்களது எதிர்காலத்தை பணயமாக வைத்து உழைத்த த.வெ.க தொண்டர்கள் மற்றும் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் மத்தியில் ஒருவித ஏமாற்றமும் விரக்தியும் நிலவிட வழி செய்கிறது. ஊடகங்களில் வெளிவரும் செய்திகளைப் போல, ஒருவேளை அ.தி.மு.க ஒரு பிரிவினருடன் கூட்டணி அமைத்து அமைச்சர் பதவி வழங்கப்பட்டால், இதுவரை ஆண்ட ஊழல் கட்சிகளுக்கும் தங்களது அரசுக்கும் வேறுபாடு இல்லை என்று மக்கள் நினைக்கத் தோன்றும். எனவே,தங்களது முடிவினை மறுபரிசீலனை செய்து ஊழலற்ற ஆட்சியை அமைக்க உறுதியோடு இருக்க வேண்டுகிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User