Peddi: ``பாண்டி பஜாரும் 12B பஸ்ஸும்..." - சென்னை நினைவுகள் குறித்து சிவ ராஜ்குமார் நெகிழ்ச்சி!

May 31, 2026 - 10:31
0
Peddi: ``பாண்டி பஜாரும் 12B பஸ்ஸும்..." - சென்னை நினைவுகள் குறித்து சிவ ராஜ்குமார் நெகிழ்ச்சி!

மெகா பவர் ஸ்டார் ராம் சரண் நடிப்பில், இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கித்தில் உருவாகியிருக்கும் 'பெத்தி' திரைப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார்.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் சுகுமார் ரைட்டிங்ஸ் வழங்கும் இப்படத்தை, விருத்தி சினிமாஸ் நிறுவனம் சார்பில் வெங்கட சதீஷ் கிலாரு மிக பிரமாண்டமாகத் தயாரித்துள்ளார்.

ஏற்கனவே வெளியான இந்தப் படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், ஜூன் 4-ம் தேதி உலகம் முழுவதும் படம் வெளியாகிறது. பெத்தி படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது.

சிவ ராஜ்குமார்
சிவ ராஜ்குமார்

இந்த நிகழ்வில் பேசிய நடிகர் சிவ ராஜ்குமார், ``இயக்குநர் புச்சி பாபு முதலில் என்னிடம் வந்து இந்தச் கதையைக் கூறி, இதில் 'குருநாயிடு' என்ற ஒரு முக்கியக் கதாபாத்திரம் இருக்கிறது என்று சொன்னபோதே நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்.

இந்தத் திரைப்படத்தை நான் ஒப்புக்கொண்டதற்கு இரண்டாவது முக்கியக் காரணம் ராம் சரண் சார். எனக்கு ராம் சரண் சாரையும், அவரது ஒட்டுமொத்தக் குடும்பத்தையும் ரொம்ப பிடிக்கும். அவர் மீது எனக்கு எப்போதுமே ஒரு தனிப்பட்ட அன்பும் பாசமும் உண்டு.

அவருடன் இணைந்து ஒரு படம் பண்ண வேண்டும் என்று நான் நினைத்த நேரத்தில்தான் இந்த வாய்ப்பு வந்தது. கதையைக் கேட்டவுடனேயே எனக்கு மிகவும் பிடித்துவிட்டது.

கதை பிடித்து ஓகே சொன்ன பிறகு, எதிர்பாராதவிதமாக எனக்கு புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. நான் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல வேண்டியிருந்ததால், என்னால் இதில் நடிக்க முடியுமா என்ற சந்தேகம் வந்தது.

'எனக்காக நீங்கள் காத்திருக்க வேண்டாம், வேறு யாரையாவது வைத்துப் படப்பிடிப்பைத் தொடங்குங்கள்' என்றுதான் நான் கூறினேன். ஆனால், ராம் சரண் சாரும், படக்குழுவினரும், 'இல்லை சார், நாங்கள் உங்களுக்காகக் காத்திருக்கிறோம். நீங்கள்தான் இந்த ரோலைச் செய்ய வேண்டும்' என்று அன்போடு கூறி, எனக்காக நீண்ட நாள்கள் காத்திருந்தார்கள். அவர்களின் அந்தப் பெருந்தன்மைக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

ராம் சரண் - சிவராஜ் குமார்
ராம் சரண் - சிவராஜ் குமார்

இந்தப் படம் ஒரு மனிதனின் வாழ்க்கைப் பயணத்தைப் பற்றியது. ஒரு மனிதன் தன் வாழ்வில் என்னென்ன மாதிரியான சூழ்நிலைகளையும், மனிதர்களையும் எதிர்கொள்கிறான் என்பதை இதில் பார்க்கலாம்.

நம் பயணத்தில் பலரைச் சந்திப்போம், அவர்களோடு நமக்கு என்ன மாதிரியான உறவும், பிணைப்பும் ஏற்படுகிறது என்பதை புச்சி பாபு மிக அற்புதமாக எழுதியுள்ளார். அந்தப் பிணைப்பின் மூலம் இந்தச் சமுதாயத்திற்கு ஒரு நல்ல செய்தியையும் இப்படம் வழங்குகிறது.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் சாரை எனக்குப் பல வருடங்களாகத் தெரியும். நான் நடித்த 'இன்ஸ்பெக்டர் விக்ரம்' திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு அவர்தான் மியூசிக் அரேஞ்சராகப் பணியாற்றினார் என்று இப்போதுதான் மேடைக்குப் பின்னால் பேசிக்கொண்டிருந்தோம். அன்றிலிருந்து எனக்கு அவரை மிகவும் பிடிக்கும். அவர் இசையமைப்பாளராக மாறிய பிறகு அவரது இசை வேறு லெவலுக்குச் சென்றுவிட்டது.

இந்தத் திரைப்படத்தில் அவரது இசையின் கீழ் நான் நடித்திருப்பது எனக்குப் பெருமகிழ்ச்சி அளிக்கிறது. அதேபோல் ஒளிப்பதிவாளர் ரத்னவேலு சாருடன் பணியாற்றியதும் ஒரு சிறந்த அனுபவம்.

படப்பிடிப்பில் அவர் என்னைப் பார்த்துக்கொண்ட விதமும், காட்சிகளை அவர் கையாண்ட விதமும் அற்புதம். தயாரிப்பாளர் சதீஷ் கிலாரு மற்றும் ஒட்டுமொத்தக் குழுவிற்கும் என் வாழ்த்துகள்.

பெத்தி படக்குழு
பெத்தி படக்குழு

ராம் சரண் ஒரு மிகப்பெரிய சூப்பர் ஸ்டாரின் மகன், இன்று அவரும் ஒரு மிகப்பெரிய சூப்பர் ஸ்டாராக வளர்ந்து நிற்கிறார். அவரது மனைவியின் குடும்பமும் மிகப்பெரிய பின்னணி கொண்டது. இவ்வளவு பெரிய உயரத்தில் இருந்தும், அவர் செட்டில் ஒரு ஸ்டார் என்ற பந்தா இல்லாமல் எல்லாரோடும் ஒருவராக, மிகவும் எளிமையாகவும், மனிதநேயத்தோடும் பழகுவார்.

அவரது இந்த எளிமை எனக்குள் இருக்கும் என் தம்பி புனித் ராஜ்குமாரை நினைவூட்டுகிறது. ராம் சரணுக்குள் நான் என் தம்பி புனித்தைப் பார்க்கிறேன். இப்படத்தில் அவரது நடிப்பு, உடல்மொழி எல்லாமே பிரமாதமாக வந்துள்ளது. ஜூன் 4-ம் தேதி படம் வெளியாகிறது, உங்களைப் போலவே நானும் திரையில் இதைப் பார்க்கக் காத்திருக்கிறேன்.

'ஜெயிலர்' படத்தில் எனது கதாபாத்திரத்திற்குத் தமிழ் ரசிகர்கள் கொடுத்த வரவேற்பு மறக்க முடியாதது. தற்போது நான் ஒரு நேரடித் தமிழ்த் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன், அந்தப் பணிகளும் போய்க் கொண்டிருக்கின்றன.

சென்னையைப் பற்றிச் சொல்ல வேண்டும் என்றால், இங்கிருந்த பழைய நினைவுகளை நான் மிகவும் மிஸ் செய்கிறேன். குறிப்பாக, 12, 12B பேருந்துகளில் பாண்டி பஜார் சென்றது, 13-ம் நம்பர் பேருந்தில் நியூ காலேஜ் சென்றது என அந்தப் பேருந்து பயணங்களையும், அந்த நாட்களையும் நான் இப்போதும் மிஸ் செய்கிறேன்" என உணர்ச்சிகரமாகப் பேசினார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User