`42 வருஷ தொடர்பை முடிச்சு விட்டுட்டாங்க!'- டப்பிங் யூனியனில் இருந்து நீக்கப்பட்ட நடிகர் ராஜேந்திரன்
சினிமா டப்பிங் யூனியனிலிருந்து சீனியர் உறுப்பினர்களான நடிகர்கள் எஸ்.வி.சேகர், ராஜேந்திரன் இருவரும் நீக்கப்பட்டிருக்கிறார்கள்.
சில தினங்களுக்கு முன் நடந்த யூனியனின் பொதுக்குழுவில் இந்த தகுதி நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
நடிகர் ராஜேந்திரனிடம் இது குறித்துப் பேசினோம்.

''42 வருஷமா யூனியனில் இருந்தேன். டப்பிங்கிலும் தமிழ் சினிமாவுல பெரிய நடிகர்கள் உள்ளிட்ட எல்லாருக்கும் தெரிஞ்ச ஒரு ஆளா இருந்தேன். மறைந்த கோட்டா சீனிவாசராவ் அவருடைய கேரக்டருக்கு நான்தான் பேசணும்னு உறுதியா நின்னு பேசச் சொல்வார்.
யூனியன்லயும் உறுப்பினராகத்தான் சேர்ந்தேன். நாளடைவுல சக உறுப்பினர்களின் ஆதரவுடன் இணைச் செயலாளர், துணைத் தலைவர் பொறுப்புகளையும் வகிச்சிருக்கேன்.
கடைசியா, விட்டா இவன் தலைவர் பதவிக்கு வந்துடுவான் போலனு நினைச்சாங்களோ என்னவோ... பொய்யான குற்றச்சாட்டுகளைச் சுமத்தி யூனியன்ல இருந்து வெளியேத்திட்டாங்க.
நான் உறுப்பினரா சேர்ந்த பிறகுதான் இப்ப தலைவரா இருக்கிற ராதாரவியே யூனியன் உறுப்பினரானார். ஆனா இன்னைக்கு ஒரு சிலருடைய பேச்சைக் கேட்டுக்கிட்டு அவரும் எல்லா முறைகேடுகளுக்கும் உடந்தையா இருக்கார்.
பை லா பிரதியை உறுப்பினர்களுக்குக் கொடுங்கனு நான் கேட்டது குத்தமாம். அதுக்கு ஒழுங்கு நடவடிக்கை குழு முன்னாடி ஆஜராகணும்னு சொன்னாங்க. முழுக்க அசிங்கப்படுத்தினா அவங்களே ஒதுங்கிடுவாங்கங்கிறதுதான் அவங்க எண்ணம்.
ஓரளவுக்குத்தான் பொறுமையாப் போவாங்க. சுயமரியாதைன்னு ஒண்ணு இருக்கில்லையா? அதனால என்ன நடத்த நினைக்கிறாங்களோ நடத்தட்டும்னு விட்டுட்டேன். இப்ப நீக்கி கடிதம் அனுப்பியிருக்காங்க.

என்னோடு சேர்ந்து நடிகர் எஸ்.வி.சேகரையும் நீக்கியிருக்கறதா சொன்னாங்க. தனியே ஒரு டப்பிங் யூனியன் வச்சு ரெண்டுலயும் உறுப்பினரா இருக்கார்ங்கிறது அவர் மீதான குற்றச்சாட்டு. நடிகர் நாசர் போன்ற இன்னும் சிலரும் அப்படி இருக்காங்க. அவங்க மேல நடவடிக்கை இல்லை.
டிவி நடிகர் சங்க தலைவரா இருந்தப்ப உறுப்பினர்களுக்கு நல்லது செய்யப் போய் சேனல்களின் பகையைச் சம்பாதிச்சு, வாய்ப்புகளை இழந்தேன். இந்த யூனியன்லயும் உறுப்பினர்கள் நலனே நோக்கமா இருந்தது.. தலைவரா நின்னா நிச்சயம் ஜெயிப்பேன்ங்கிற நம்பிக்கை இருந்திச்சு. தேர்தல்ல நிக்க விடாம பண்ணியதோட இப்ப யூனியன்ல இருந்தே வெளியேத்திட்டாங்க. நல்லா இருக்கட்டும்'' என நொந்தபடி முடிக்கிறார்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)