மும்பை மாணவர்கள் போராட்டம்: போலீஸ் வேனை மடக்கிக் கேள்வி கேட்ட பெண்; இணையத்தைக் கலக்கும் ரியா யார்?

Jul 24, 2026 - 10:32
0
மும்பை மாணவர்கள் போராட்டம்: போலீஸ் வேனை மடக்கிக் கேள்வி கேட்ட பெண்; இணையத்தைக் கலக்கும் ரியா யார்?

டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் மாணவர்களுக்கு ஆதரவாக மும்பையிலும் போராட்டம் நடத்தப்பட்டது. மும்பை தாதர் பகுதியில் ஆயிரக்கான மாணவர்களும், பொதுமக்களும் கூடி இப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களை போலீஸார் கைது செய்து வேனில் அழைத்துச்சென்றனர். அப்போது போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்திருந்த இளம்பெண் ஒருவர் துணிச்சலுடன் போலீஸ் வேன் முன்பு நின்று போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அவர் உங்களது உரிமையைத் தெரிந்துகொள்ளுங்கள் என்று துணிச்சலுடன் போலீஸாரிடம் தெரிவித்தார்.

போலீஸ் வேன் முழுக்க மாணவர்கள் இருந்தனர். போலீஸார் வேனின் படிக்கட்டுகளில் நின்று கொண்டிருந்தனர்.

அவர்கள் அப்பெண்ணை விலகும்படி கேட்டுக்கொண்டனர். ஆனால் அவர் போலீஸ் வேனுக்கு வழிவிட மறுத்து மறித்துக்கொண்டு நின்றார். அப்பெண்ணின் பெயர் ரியா அஹிர்(27) என்று தெரிய வந்துள்ளது. அவர் ஒரு மாடல் ஆவார். ரியா போலீஸ் வாகனத்தின் முன்பிருந்து நகர மறுத்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அவருடன் மற்றவர்களும் சேர்ந்து போலீஸ் வாகனத்தை மறித்தனர். இதையடுத்து போலீஸார் அங்குள்ள பூங்காவில் அடைத்து வைத்திருந்த மாணவர்களை விடுவித்தனர்.

இது குறித்து ரியா கூறுகையில், ''நான் போராட்டத்தில் கலந்துகொள்ளச் சென்றிருந்தேன், என் நண்பர்களுக்காகக் காத்திருந்தேன். சற்று தொலைவில் போராட்டத் தளத்திலிருந்து உற்சாகமான கோஷங்கள் ஒலிப்பதை என்னால் கேட்க முடிந்தது. போலீஸார் மாணவர்களை வேனில் ஏற்றிச்செல்வதைப் பார்த்தேன்.

உள்ளே இருந்த மாணவர்கள் கோஷம் எழுப்பியவண்ணம் இருந்தனர். நான் போலீஸாரிடம் மாணவர்களைக் கைது செய்துள்ளீர்களா என்று கேட்டேன். ஆனால் அதற்கு போலீஸார் பதிலளிக்கவில்லை. இதையடுத்து போலீஸ் வேனை மறிக்க முடிவு செய்தேன். உடனடியாக நான் அந்த வாகனத்தின் முன் நின்றேன்.

அந்த மாணவர்களைக் போலீஸார் அழைத்துச் செல்ல அனுமதித்தால், ஒரு குடிமகளாக எனது கடமையைச் செய்வதில் நான் தவறிவிடுவேன் என்று நினைத்தேன். நான் என் இடத்தில் உறுதியாக நின்று 'இன்குலாப் ஜிந்தாபாத்' என்ற முழக்கங்களை எழுப்பத் தொடங்கினேன். 'தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும்' என்ற முழக்கங்களையும் எழுப்பினேன்," என்று அவர் தொடர்ந்தார்.

ரியாவின் செயலுக்காகப் பாராட்டுகள் குவிந்து வருகிறது. ரியாவுக்குப் பாராட்டுகளைத் தெரிவிக்கும் தொலைபேசி அழைப்புகளும் செய்திகளும் குவிந்து வருகின்றன.

இது தனக்கு ஒரு "நெகிழ்ச்சியான அனுபவம்" என்றும், அதே வேளையில் இது ஒரு பொறுப்புணர்வு சார்ந்த விஷயமாக உணர்வதாகவும் அவர் கூறுகிறார்.

போதைப்பொருள் வழக்கில் கைது செய்வேன்

போராட்டத்தில் கலந்து கொண்ட மாணவர்களிடம் உங்கள் மீது போதைப்பொருள் வழக்கு பதிவு செய்வேன் என்று போலீஸ்காரர் ஒருவர் மிரட்டி வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரனாது.

அதில் போராட்டத்தில் கலந்து கொண்ட மாணவர்களிடம், "நீங்கள் மீண்டும் இங்கு வந்தால், உங்கள் வாழ்க்கையை நான் அழித்துவிடுவேன்" என்று மாணவர்களை மிரட்டினார்.

டெல்லி மாணவர்கள் போராட்டம்
டெல்லி மாணவர்கள் போராட்டம்

அதோடு அவர்களை போலி போதைப்பொருள் வழக்கில் சிக்க வைப்பேன் என்றும் கூறினார். அவர், நான் உங்கள் பைகளில் 50-50 கிராம் போதைப்பொருள் பொடியைப் போடுவேன், உங்கள் வாழ்க்கை முடிந்துவிடும் என்றும் போலீஸ்காரர் கூறுவது வீடியோவில் பதிவாகி இருந்தது.

இது குறித்து காங்கிரஸ் கட்சி மும்பை போலீஸாரின் கவனத்திற்குக் கொண்டு சென்றது. இதையடுத்து அந்த போலீஸ்காரர் உடனே பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அதோடு இது குறித்து விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User