சபரிமலையில் மோகன்லால் சினிமா படப்பிடிப்பு; கடும் நிபந்தனைகளுடன் தேவஸ்வம் போர்டு அனுமதி!

Aug 11, 2026 - 19:00
0
சபரிமலையில் மோகன்லால் சினிமா படப்பிடிப்பு; கடும் நிபந்தனைகளுடன் தேவஸ்வம் போர்டு அனுமதி!

சபரிமலையிலும், பம்பையிலும் நடிகர் மோகன்லாலின் சினிமா படப்பிடிப்புக்கு திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு அனுமதி வழங்கியுள்ளது. ஆகஸ்ட் 18, 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. 'துடரும்' என்ற சூப்பர் ஹிட் படத்திற்குப் பிறகு மோகன்லாலும் தருண் மூர்த்தியும் இணையும் சினிமாவுக்கு 'அதிமனோகரம்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த சினிமாவின் படப்பிடிப்பு சபரிமலையிலும், பம்பாவிலும் நடைபெறுகிறது. சபரிமலை நடைப்பந்தல் வரை மட்டுமே படப்பிடிப்பிற்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. படப்பிடிப்புக்காக வனத்துறை உட்பட 10-க்கும் மேற்பட்ட அரசுத் துறைகளின் அனுமதியை பெறவும் படக்குழுவினர் நடவடிக்கை எடுத்துவருகின்றனர். தருண் மூர்த்தி இயக்க உள்ள இந்த சினிமாவில் லாவுலாஜன் என்ற காவல்துறை உதவி ஆய்வாளர் கதாபாத்திரத்தில் மோகன்லால் நடிக்க உள்ளார். ஒரு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் தனிப்பட்ட வாழ்வில் நிகழும் கொந்தளிப்பான மற்றும் உணர்ச்சிப்பூர்வமான தருணங்கள் இந்த சினிமா மூலம் காட்சிப்படுத்தப்பட உள்ளன.

சபரிமலை ஐயப்ப சுவாமி கோயில்

 'இஷ்க்', 'ஆலப்புழா ஜிம்கானா' மற்றும் 'மகாராணி' போன்ற சினிமாக்கள் மூலம் கவனம் ஈர்த்த ரதீஷ் ரவி, இந்த சினிமாவுக்கு திரைக்கதை எழுதியுள்ளார். ஆஷிக் உஸ்மான் புரொடக்ஷன்ஸ் பேனரில் ஆஷிக் உஸ்மான் தயாரிக்கும் இத்திரைப்படம் பெரும் பட்ஜெட்டில் உருவாகிறது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு மோகன்லாலுடன் மீரா ஜாஸ்மின் ஜோடி சேரும் இந்த சினிமா, எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. லாலு அலெக்ஸ், மனோஜ் கே.ஜெயன், ஜெகதீஷ், இர்ஷாத், சுதீஷ், உட்பட பலரும் இந்த சினிமாவில் நடிக்கின்றனர். ஜேக்ஸ் பிஜாய் இசையமைக்கிறார். ஷாஜிகுமார் ஒளிப்பதிவு செய்கிறார்.

மோகன்லால் நடிக்கும் அதிமனோகரம் சினிமா போஸ்டர்

இதற்கு முன்பு மகரவிளக்கு காலத்தில் சபரிமலையில் அனுமதி இல்லாமல் படப்பிடிப்பு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்து விவாதத்தை ஏற்படுத்தியிருந்தது. அதையடுத்து தேவஸ்வம் போர்டிடம் படக்குழுவினர் அனுமதி கோரிய நிலையில், கடும் கட்டுப்பாடுகளுடன் படப்பிடிப்புக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சினிமாவின் முழு ஸ்கிரிப்டையும் தேவஸ்வம் போர்டிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும், சபரிமலை ஐயப்ப சுவாமி கோயில் வழிபாடுகள், சடங்குகள், நம்பிக்கைகள் உள்ளிட்டவற்றை கேலி செய்யும் வகையில் காட்சிகள் இடம்பெறக் கூடாது என்பது போன்ற அறிவுறுத்தல்களுடன் படப்பிடிப்புக்கு தேவசம்போர்டு அனுமதி வழங்கியுள்ளது. கோயில் ஆசாரங்களை மீறும் வகையில் செயல்படக் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. படப்பிடிப்புக்காக குறிப்பிட்ட தொகையை படக்குழுவினர் தேவஸ்வம் போர்டுக்கு செலுத்த வேண்டும். மேலும் இந்த படப்பிடிப்பு சம்பந்தமாக கேரள ஐகோர்ட் தேவசம் பெஞ்ச் அனுமதியும் தேவைப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User