பொது இடத்தில் சிறுநீர் கழிப்பவர்களுக்கு செக் வைத்த `மிரர் டெக்னிக்!'- நோபல் பரிசுக்குரிய ஐடியாவா?!

May 06, 2026 - 19:01
0
பொது இடத்தில் சிறுநீர் கழிப்பவர்களுக்கு செக் வைத்த `மிரர் டெக்னிக்!'- நோபல் பரிசுக்குரிய ஐடியாவா?!

மைசூரு புறநகர் பேருந்து நிலையம் எதிரே உள்ள ஒரு குறிப்பிட்ட சுவர், திறந்தவெளியில் சிறுநீர் கழிக்கும் ஒரு இடமாக இருந்து வந்தது. அதிகாரிகள் எத்தனையோ எச்சரிக்கை பலகைகள் வைத்தும் எந்த பயனும் இல்லை. அபராதங்களை விட வேறு ஏதாவது புதிய வழியைக் கண்டுபிடிக்க வேண்டும் என நினைத்த அதிகாரிகள், அந்த சுவர் முழுவதும் பெரிய, பளபளப்பான `ஸ்டீல் கண்ணாடிகளை' (Reflective steel mirrors) பொருத்தியுள்ளனர். இரவு நேரங்களிலும் இந்த கண்ணாடிகள் தெளிவாகத் தெரிய வேண்டும் என்பதற்காக சுவரில் LED விளக்குகளையும் அமைத்துள்ளனர்.

மிரர் டெக்னிக்
மிரர் டெக்னிக்

இந்த நடவடிக்கை 'Self-awareness through reflection' (தன்னைத்தானே உணர்தல் அல்லது சுய கூச்சத்தை ஏற்படுத்துதல்) என்ற அடிப்படையைக் கொண்டது.

ஒருவர் அந்த சுவரில் சிறுநீர் கழிக்கச் செல்லும்போது, அங்குள்ள பெரிய கண்ணாடியில் அவர் செய்யும் செயல் அவருக்கே அப்பட்டமாகத் தெரியும். ஒரு பொது இடத்தில், தான் செய்யும் அருவருப்பான செயலை கண்ணாடியில் பார்க்கும் போது, அந்த நபருக்குத் தாமாகவே ஒருவித அவமானமும், கூச்சமும் ஏற்படும். இதன் மூலம் அவர்கள் அந்த செயலைச் செய்யாமல் பின்வாங்குவார்கள் என்பதே இந்த மிரர் டெக்னிக்கின் முக்கிய நோக்கம்.

X (ட்விட்டர்) தளத்தில் @Theshashank_p என்ற பயனர் இந்த வீடியோவைப் பகிர்ந்து, "இந்த ஐடியாவைக் கண்டுபிடித்தவருக்கு நோபல் பரிசே கொடுக்கலாம்... அவர் ஒரு ஜீனியஸ்!" என்று பதிவிட்டிருந்தார். இதிலிருந்துதான் இந்தச் செய்தி 'நோபல் ஜீனியஸ்' என்ற பெயரில் வைரலானது.

"இது ஒரு அட்டகாசமான ஐடியா, மக்களின் செயலை மாற்ற எச்சரிக்கைகளை விட இதுபோன்ற வழிகள்தான் சரிப்பட்டு வரும்" என பலர் பாராட்டியுள்ளனர். வேறு சிலரோ, "மக்கள் கண்ணாடியை உடைத்துவிட்டோ அல்லது கொஞ்சம் தள்ளிப் போயோ மீண்டும் அதே தவற்றைச் செய்வார்கள். இதற்கு நிரந்தர தீர்வு பொதுமக்களுக்கு போதுமான, சுத்தமான பொதுக் கழிப்பறைகளை (Public Toilets) கட்டிக் கொடுப்பதுதான். கழிப்பறை வசதிகளை மேம்படுத்தாமல், கண்ணாடிகளை வைப்பது முழுமையான தீர்வாகாது" என ஆழமான கருத்துகளையும் முன்வைத்துள்ளனர்.

மிரர் டெக்னிக்
மிரர் டெக்னிக்

உண்மையில் இது இந்தியாவில் முதல்முறையாக செய்யப்படுவது அல்ல. இதற்கு முன்பே 2020-ம் ஆண்டு பெங்களூருவில் (சர்ச் ஸ்ட்ரீட், கே.ஆர். மார்க்கெட், இந்திராநகர் போன்ற பகுதிகளில்) மாநகராட்சியால் இதே போன்ற கண்ணாடிகள் வைக்கப்பட்டன. பெங்களூருவில் வைக்கப்பட்ட கண்ணாடிகளில் ஒரு QR Code-ம் இருந்தது. அதை போனில் ஸ்கேன் செய்தால் அருகில் உள்ள கழிப்பறைக்கு அது வழிகாட்டும் வகையில் உருவாக்கப்பட்டிருந்தது. ஆனால், காலப்போக்கில் பராமரிப்பு குறைபாடுகளால் அது எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.

பொதுமக்களிடம் சமூகப் பொறுப்புணர்வு என்பது தானாக வர வேண்டும். அது அல்லாமல் சட்டங்களும் அபராதங்களும் எந்த வகையிலும் உதவாது; ஆனால் இது போன்று அவர்களின் மனசாட்சியைத் தட்டி எழுப்பும் நூதன முயற்சிகளும் சிலநேரம் தேவை என்பதையே மைசூரு மாநகராட்சியின் இந்த முயற்சி நிரூபிக்கிறது.

தூய்மையான இந்தியா என்பது அரசாங்கத்தின் திட்டங்களில் மட்டுமல்ல, ஒவ்வொரு குடிமகனின் எண்ணங்களிலும் இருக்க வேண்டும்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User