கரூர் மரணங்கள்: `இறந்தோரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கியது செல்லாது' - உயர் நீதிமன்றக் கிளை

Jul 27, 2026 - 18:32
0
கரூர் மரணங்கள்: `இறந்தோரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கியது செல்லாது' - உயர் நீதிமன்றக் கிளை

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கியது செல்லாது என உயர் நீதிமன்றக் கிளை தீர்ப்பு வழங்கியிருக்கிறது. முதலமைச்சர் விஜய் வழங்கிய பணி ஆணை உத்தரவுகளும் ரத்து செய்யப்படுவதாகத் தெரிவித்திருக்கிறது.

கரூரில் தவெக தலைவர் விஜய் கடந்த செப்டம்பர் மாதம் தேர்தல் பிரசாரம் செய்தபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். அதைத் தொடர்ந்து, கடந்த 10-ம் தேதி கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் விஜய் கருணை அடிப்படையிலான அரசு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

தவெக தலைவர் விஜய்

அப்போதே, கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி  உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு அரசுப் பணி வழங்க தடை விதிக்கக் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நாம் தமிழர் கட்சி மற்றும் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் பொதுமனு தாக்கல் செய்யப்பட்டது.

விசாரணையின்போது நீதிபதிகள், "கரூர் நெரிசலில் இறந்தோர் குடும்பத்துக்கு அரசுப் பணி வழங்குவதில் என்ன தவறு... அவர்களுக்கு பொருளாதார உதவி தேவை தானே? அரசின் கொள்கைகளில் தலையிட நீதிமன்றம் விரும்பவில்லை. ஆனாலும் நீதிமன்றம் இறுதி முடிவு எடுக்கும் வரை தற்காலிக பணி வழங்கலாம்" எனக் கூறி வழக்கின் விசாரணையை 21-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

21-ம் தேதி நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், சக்திவேல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அரசின் பதில் மனு முழுவதுமாக தயாராகவில்லை, எனவே ஜூலை 27-ம் தேதி வழக்கை ஒத்தி வைக்க வேண்டும் என்று அரசின் தரப்பில் கேட்கப்பட்டது.

இந்த நிலையில், இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், ``31 பேருக்கு பணி வழங்கியது என்பது அரசின் கொள்கை முடிவு. அரசியலமைப்புச் சட்டத்தின் கட்டமைப்பிற்கு உட்பட்டு வேலை வழங்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் ஒப்புதல் பெற விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது." எனத் தமிழ்நாடு அரசின் தரப்பில் வாதிடப்பட்டது.

உயர் நீதிமன்றம் மதுரை கிளை

மேலும், வழக்கு விசாரணையின் போது, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் அனுமதி தேவையில்லை என்று டிஎன்பிஎஸ்சி தரப்பிலும் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிலையில், உயர் நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், சக்திவேல், ``திறன் வளர் பயிற்சி வழங்கி பாதிக்கப்பட்டோரின் குடும்பத்துக்கு உதவலாமே? அரசு தரப்பில் சாதாரணமான அரசு வேலையே வழங்கியுள்ளதாக அரசுத் தரப்பு வைத்த வாதம் ஏற்க முடியாதது. எந்தப் பணியும் சாதாரணம் அல்ல. ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் உதவும் பணியே.

தினந்தோறும் சாலை விபத்தில், பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலர் உயிரிழக்கின்றனர். அவர்களுக்கெல்லாம் அரசு வேலை வழங்க முடியுமா?" எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கியது செல்லாது எனத் தீர்ப்பளித்திருக்கின்றனர். இதன் அடிப்படையில் முதல்வர் வழங்கிய பணி ஆணை ரத்தாகியிருக்கிறது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User