July Releases: 'இதயம் முரளி' முதல் 'சிக்மா' வரை! - இம்மாதம் ரிலீஸுக்கு ரெடியாகியிருக்கும் படங்கள்!
ஜூலை மாதத்தில், தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அதிரடி டிரீட் இருக்கிறது. பல ஜானர்களில் எதிர்பார்க்கப்பட்ட படங்கள் பலவும் இம்மாதம் ரிலீஸுக்குத் தயாராக இருக்கின்றன.
விஷ்ணு விஷாலின் 'கட்டா குஸ்தி 2', அதர்வாவின் 'இதயம் முரளி', ஜேசன் சஞ்சயின் 'சிக்மா' உள்ளிட்ட பல படங்கள் இம்மாதம் வெளியாகின்றன. அவை என்னென்ன என்பதை இங்கு பார்ப்போம்.

கட்டா குஸ்தி 2:
இயக்குநர் செல்லா அய்யாவு இயக்கத்தில் விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் நடிப்பில் 'கட்டா குஸ்தி' படத்தின் முதல் பாகம் கடந்த 2022-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. அப்படத்திற்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் எடுத்திருக்கிறார் இயக்குநர் செல்லா அய்யாவு. இப்படம் ஜூலை 3-ம் தேதி திரைக்கு வருகிறது.
இதயம் முரளி:
'டான் பிக்சர்ஸ்' தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் 'இதயம் முரளி' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். அதர்வா, பிரீத்தி முகுந்தன், கயாடு லோஹர், நிஹாரிகா ஆகியோர் நடித்திருக்கும் இப்படத்திற்குத் தமன் இசையமைத்திருக்கிறார். இவர்களோடு, பகத் பாசிலும் ஒரு முக்கியத் தோற்றத்தில் இப்படத்தில் நடித்திருக்கிறார்.
லவ் ஓ லவ்:
'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' படத்தைத் தொடர்ந்து நடிகர் பவிஷ் நடித்திருக்கும் இப்படம் ஜூலை 10-ம் தேதி திரைக்கு வருகிறது. மகேஷ் ராஜேந்திரன் என்பவர் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் இயக்குநர்கள் செல்வராகவன் மற்றும் கே.எஸ். ரவிகுமார் முக்கியத் தோற்றங்களில் நடித்திருக்கிறார்கள்.

அன்பே டயானா:
'ஜமா' பாரி இளவழகன் எழுதி, இயக்கி நடித்திருக்கும் 'அன்பே டயானா' திரைப்படம் ஜூலை 17-ம் தேதி வெளியாகிறது. 'பரிதாபங்கள்' கோபி, ரம்யா ரங்கநாதன், ரோஜா, சேத்தன் ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இப்படத்திற்கு 'மாவீரன்' பட புகழ் பரத் சங்கர் இசையமைத்திருக்கிறார்.
இம்மார்டல்:
இயக்குநர் மாரியப்பன் சின்னா இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ், கயாடு லோஹர் ஆகியோர் நடித்திருக்கும் இப்படமும் ஜூலை 23-ம் தேதி திரைக்கு வருகிறது. இப்படத்திற்குச் சாம் சி.எஸ் இசையமைத்திருக்கிறார்.
சத்யவான் சாவித்ரி:
அறிமுக இயக்குநர் பிரவீன் எஸ் விஜய் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ், மிஷ்கின் ஆகியோர் நடித்திருக்கும் இந்த 'சத்யவான் சாவித்ரி' படம் ஜூலை 24-ம் தேதி திரைக்கு வருகிறது. இப்படத்திற்கும்ச் சாம் சி.எஸ் இசையமைத்திருக்கிறார்.
சிக்மா:
முதல்வர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் 'சிக்மா' படம் ஜூலை 31-ம் தேதி திரைக்கு வருகிறது. சந்தீப் கிஷன், சம்பத் ராஜ், அன்புதாசன் ஆகியோர் நடித்திருக்கும் இப்படத்திற்குத் தமன் இசையமைத்திருக்கிறார்.

மகுடம்:
நடிகர் விஷால் 'மகுடம்' படத்தின் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்திருக்கிறார். விஷாலுடன் அஞ்சலி, துஷாரா விஜயன் ஆகியோரும் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள். இந்தத் திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். இப்படம் ஜூலை மாதம் வெளியாகும் என நடிகர் விஷால் தெரிவித்திருக்கிறார். ஆனால், எந்தத் தேதியில் இப்படம் வெளியாகிறது என்பதைப் படக்குழுவினர் இன்னும் அறிவிக்கவில்லை.
இதில் எந்தத் திரைப்படத்திற்கு எதிர்பார்ப்புடன் நீங்கள் காத்திருக்கிறீர்கள் என்பதைக் கமெண்டில் பதிவிடுங்கள்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)