ஜோலார்பேட்டை: சிதிலமடைந்த `அம்மா’ பூங்கா... சமூகவிரோத கூடமாக மாறிய அவலம் - கண்டுகொள்ளாத அதிகாரிகள்!

May 12, 2026 - 15:02
0
ஜோலார்பேட்டை: சிதிலமடைந்த `அம்மா’ பூங்கா... சமூகவிரோத கூடமாக மாறிய அவலம் - கண்டுகொள்ளாத அதிகாரிகள்!

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை சட்டமன்றத் தொகுதிக்குஉட்பட்ட ஏலகிரி மலை அடிவாரம் பொன்னேரி ஊராட்சியில், கடந்தகால அ.தி.மு.க ஆட்சியின்போது `அம்மா’ பூங்கா அமைக்கப்பட்டது. அந்தப் பகுதி மக்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ளவும், பொழுதுபோக்கவும் பூங்காவைப் பயன்படுத்தி வந்தனர்.

இந்த நிலையில், தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு அம்மா பூங்காவைப் பராமரிக்காமல் விட்டுவிட்டனர். கடந்த ஐந்து ஆண்டுகளாக ஜோலார்பேட்டை எம்.எல்.ஏ-வாக இருந்துவந்த க.தேவராஜியிடம் கவனப்படுத்தியும் அவர் கண்டுகொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், பூங்கா சிதிலமடைந்துபோனது. எங்குப் பார்த்தாலும் குப்பைகள் குவிந்துகிடக்கின்றன. சமூகவிரோதிகளின் கூடாரமாகவும் பூங்கா மாறியிருக்கிறது.

சமூகவிரோத கூடமாக மாறிய அவலம்

பூங்காவிற்குள் ஆங்காங்கே அமர்ந்துகொண்டு மது அருந்துவது, குடித்துவிட்டு காலி பாட்டில்களை அங்கேயே வீசிச் செல்வது என பூங்காவின் நிலை பதற வைத்திருக்கிறது. குழந்தைகளை அழைத்துசென்று விளையாட வைக்கவும் பெற்றோர் அச்சமடைகிறார்கள். போதை கும்பல்களின் நடமாட்டத்தால் பூங்காவைச் சுற்றியுள்ள குடியிருப்பு வாசிகளும் பீதியில் இருக்கிறார்கள்.

எனவே, `அம்மா பூங்காவை மீண்டும் புனரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும்’ என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றனர். இது பற்றி, ஜோலார்பேட்டை பி.டி.ஓ ஹரியிடம் கேட்டபோது, `விரைவாக பூங்கா சீரமைக்கப்படும். காவல்துறை மூலம் கண்காணிக்கப்படும்’ என்று உறுதியளித்திருக்கிறார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User