’பெரியார், அம்பேத்கர் பெயர் விடுபட்டதற்கு நானே தார்மீக பொறுப்பு’ – அமைச்சர் சம்பத்குமார் விளக்கம்!

Aug 29, 2026 - 18:31
0
’பெரியார், அம்பேத்கர் பெயர் விடுபட்டதற்கு நானே தார்மீக பொறுப்பு’ – அமைச்சர் சம்பத்குமார் விளக்கம்!

கோவை கவுண்டர்மில்ஸ் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் சம்பத்குமார்,  பட்டாக்களை பயனாளிகளுக்கு வழங்கினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சம்பத்குமார், “30, 40 வருடங்களாக வீட்டுமனை பட்டா பெறாமல் போராடி வந்த மக்களுக்கு அவர்களது பகுதிகளுக்கே சென்று பட்டா வழங்கும் பணிகள் தற்போது துவங்கி உள்ளது. முதல் கட்டமாக 500 பயனாளிகளுக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. கோவை காந்திபுரம் பகுதியில் கட்டப்பட்டு வரும் பெரியார் அறிவுலகத்தின் உட்புற பணிகள் நடைபெற்று வருகின்றன. அப்பணிகள் 100% நிறைவடைந்த பிறகு முதல்வரால் அது திறந்து வைக்கப்படும்” என்றார்.

பிற்படுத்தப்பட்டோர் மாநில கோரிக்கை கொள்கை குறிப்பில் அம்பேத்கர், பெரியார், நேரு பெயர்கள் விடுபட்டதற்கு விசிக கண்டனம் எழுப்பியுள்ளது குறித்தான கேள்விக்கு, ”தந்தை பெரியார் மற்றும் அம்பேத்கர் தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை தலைவர்கள். அவர்களுடைய வழிகாட்டுதலில் தான் எங்களுடைய செயல்பாடுகள் உள்ளது. அவர்கள் பெயர்கள் விடுபட்டதற்கு தார்மீக பொறுப்பை நானே ஏற்றுக்கொள்கிறேன். அது குறித்து மறுப்பிரசுரம் வழங்கக்கூடிய பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. வரலாற்றில் மக்களுக்காக உழைத்த தலைவர்களை என்றும் நாங்கள் மறக்க மாட்டோம்” என பதிலளித்தார்.

சம்பத் குமார்
சம்பத் குமார்

தொடர்ந்து பேசிய அவர், “சட்டமன்றத்தில் பெரும்பான்மையான உறுப்பினர்கள் முதல்முறையாக பங்கேற்றவர்கள்தான். மக்களுக்காக தான் சென்றுள்ளோம் என்பதை உணர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். மக்கள் எங்களுக்கு கொடுத்த பிரதிநிதித்துவத்தை என்றென்றும் விட்டுக் கொடுக்க மாட்டோம்.  சட்டமன்றத்தில் எம்.ஜி.ஆர் பாடல் பாடியது ரீல்ஸ்க்காக என்று கூறுகிறார்கள். அந்த ரீல்ஸை முதலில் ஆரம்பித்தது யார் என்று 1970 காலகட்டத்திலேயே வெட்ட வெளிச்சமாக பாடல்கள் புரட்சித் தலைவர் பாடியிருக்கிறார். யாரைக் குறிப்பிடுகிறார் என்று நான் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அது மக்களுக்கே தெரியும்.

மக்கள் நலம், மக்கள் நலம் என்று கூறி மக்களுக்கு கிள்ளி கொடுத்து, தன் மக்களுக்கு அள்ளிக் கொடுத்தது என்று நான் குறிப்பிட்டேன். அதனை யாரும் மறுக்க முடியாது என்று உறுதியாக கூறுவேன். த.வெ.க வெற்றி பெற்ற தொகுதிகள் 108 தான். ஆனால் அதன்பிறகு 234 தொகுதிகளும் தமிழக வெற்றிக் கழக தலைவரின் வசமாகதான் இருக்கிறது” என்றார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User