`கொடூரமானது' - கண்ணீர் சிந்திய இந்தியர்: 30 ஆண்டாக வசிக்கும் ஹோட்டல் உரிமையாளரை வெளியேற்றும் ஜப்பான்

May 18, 2026 - 10:01
0
`கொடூரமானது' - கண்ணீர் சிந்திய இந்தியர்: 30 ஆண்டாக வசிக்கும் ஹோட்டல் உரிமையாளரை வெளியேற்றும் ஜப்பான்

வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் சமீப காலமாக கடுமையான சிக்கல்களை சந்தித்து வருகின்றனர். இந்தியாவை சேர்ந்த மனீஷ் குமார் என்பவர் கடந்த 30 ஆண்டுகளாக ஜப்பானில் வசித்து வருகிறார். அவர் அங்குள்ள சைதாமா என்ற இடத்தில் உணவகம் ஒன்றை நடத்தி வந்தார்.

மனீஷ் குமார் ஜப்பானில் நிரந்தர குடியுரிமைக்கு விண்ணப்பிக்காமல் அடிக்கடி தனது விசாவை மட்டும் நீட்டித்துக்கொண்டிருந்தார். இந்நிலையில் ஜப்பான் அரசு திடீரென விசா விதிகளை மாற்றி அமைத்து இருக்கிறது. அதன் படி ஜப்பானில் பிஸ்னஸ் மேனேஜர் விசா பெற ஏற்கனவே இருந்த 5 மில்லியன் ஜப்பான் கரன்சியை 30 மில்லியன் ஜப்பான் கரன்சியாக அந்நாடு அதிகரித்துவிட்டது.

அதாவது 1.90 லட்சம் அமெரிக்க டாலர் ஆகும். இந்த அளவுக்கு அதிக தொகையை கட்டி ஜப்பானில் விசாவிற்கு விண்ணப்பிப்பது நடுத்தர மக்களால் முடியாத ஒன்றாகும். இதனால் பிஸ்னஸ் மேனேஜர் விசா கேட்டு வரும் விண்ணப்பங்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது.

விசாவை தவறாக பயன்படுத்திவிடக்கூடாது என்பதற்காக விசா விதிகளை அரசு மாற்றி அமைத்தது.

மனீஷ் குமார் தான் 30 ஆண்டுகளாக ஜப்பானில் இருப்பதால் தனக்கு விசா கிடைப்பதில் சிக்கல் இருக்காது என்று நினைத்தார். ஆனால் ஜப்பான் இமிகிரேஷன் அதிகாரிகள் புதிய விசா விதிகளின் படி மனீஷ் குமாரின் விசா விண்ணப்ப நீட்டிப்பு மனுவை நிராகரித்துவிட்டனர். இதனால் 30 ஆண்டு ஜப்பான் வாழ்க்கையை முடித்துக்கொண்டு இந்தியாவிற்கு திரும்ப வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அவர் 18 ஆண்டுகளாக உணவகம் நடத்தி வந்தார். இதனால் அவருக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல செல்வாக்கு இருந்தது.

ஜப்பானில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய மனீஷ் குமார் மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக பேசினார். அவர் தனது பேச்சில், ``எனது குழந்தைகளுக்கு ஜப்பான் மொழி மட்டும்தான் தெரியும். எங்களிடம் இந்தியாவிற்கு செல்லும்படி கூறுகிறார்கள். எனது குழந்தைகள் இங்குதான் பிறந்தார்கள். அவர்கள் இப்போது உயர்நிலைப்பள்ளியில் படிக்கின்றனர். அவர்களுக்கு ஜப்பான் நண்பர்கள் மட்டும்தான் இருக்கின்றனர். நானும் மிகவும் கஷ்டப்பட்டு உழைத்து சொந்தமாக ஒரு வீடும் வாங்கினேன்.

அப்படி இருக்கும்போது தன்னிச்சையாக இந்தியாவிற்கு செல்லும்படி கூறுவது எந்த வகையில் மனிதாபிமான செயல்? இந்த நிலைக்கு வர நான் மிகவும் கடினமாக உழைத்தேன்.

நான் எந்த தவறும் செய்யவில்லை. திடீரென விதிகளை மாற்றிவிட்டார்கள் என்பதற்காக மக்களை அவர்களது சொந்த ஊருக்கு செல்லும்படி கூறுவது கொடூரமானது''என்று பேசியபோது அவர் கண்ணில் இருந்து கண்ணீர் வந்தது.

அமெரிக்காவில் ஏற்கனவே அந்நாட்டு அரசு விசா விதிகளை மாற்றி சட்டவிரோதமாக தங்கி இருந்தவர்களை விமானத்தில் அடைத்து அவர்களது சொந்த ஊரில் கொண்டு போய்விட்டது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User