”இன்னொரு தேர்தல் வந்தாலும் 180 இடங்களில் தவெக வென்று ஆட்சி அமைக்கும்” - சொல்கிறார் வைகோ

Jul 08, 2026 - 19:31
0
”இன்னொரு தேர்தல் வந்தாலும் 180 இடங்களில் தவெக வென்று ஆட்சி அமைக்கும்” - சொல்கிறார் வைகோ

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே சத்திரப்பட்டி கிராமத்தில் 97 ஏக்கர் பரப்பளவு உள்ள சீமைகருவேல மரங்கள் அகற்றும் பணிகளை ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ தொடங்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “விவசாயிகள் பயிர்கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை நான் ஆதரிக்கிறேன். நாங்களும் எங்கள் கோரிக்கையாக அரசுக்கு வைத்திருக்கிறோம். ஆனால் தமிழக அரசு நிதிநெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. வாக்குறுதியை நிறைவேற்ற முடியாமல் அதை எப்படி செயல்படுத்துவது என்ற ஆலோசனையில் இறங்கி உள்ளனர்.  புதிதாக பொறுப்பேற்ற அரசு செய்யவில்லை என்று கேட்பது நியாயமானது.

சீமைக்கருவேல மரம் அகற்றம் பணியை தொடக்கி வைத்த வைகோ

அதே நேரத்தில் புற்றுநோயை விட கொடியது ஊழல், கமிஷன். கட்டிடம் கட்ட வேண்டும் என்றால் இத்தனை லட்சம், தொழிற்சாலை ஆரம்பிக்க வேண்டும் என்றால் இத்தனை கோடி, ஆயா வேலைக்கு இத்தனை ஆயிரம் என எல்லா துறைகளிலும் ஊழல் தலைவிரித்து ஆடியது. தலைவிரித்தாடிய ஊழல், மக்களுக்கு கேடான ஒன்றை  முதல்வர் விஜய் நீக்கியுள்ளார் என்பதை யாரும் மறுக்க முடியாது. மக்களுக்கு நடந்து கொண்டிருந்த  தீங்கினை, கொடிய நிலைமையை  மாற்றியுள்ளார். இதைவிட ஒரு அரசு வேறு என்ன செய்ய முடியும். நிதிநெருக்கடி உள்ளது, அதை எப்படி சமாளிப்பது என்று முதல்வர் விஜய் திணறிக் கொண்டிருக்கிறார்.

மத்திய அரசு வஞ்சகம் இல்லாமல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.  நிதி கொடுத்தால் வாக்குறுதி பலவற்றை அவரால் நிறைவேற்ற முடியும். இந்த ஆட்சி ஆறு மாதம் நீடிக்காது என்று சாபம் விட்டனர். இந்த அரசு இருக்காது என்று பேட்டி. கொடுக்கின்றனர். இன்னொரு முறை தேர்தல் வந்தால் 180 இடங்களுக்கு குறையமால் வெற்றி பெற்று  முதல்வர் விஜய் ஆட்சி அமைப்பார்.

ஜே.சி.பி இயந்திரத்தை இயக்கிய வைகோ

மக்களின் மனம் அப்படித்தான் இருக்கிறது. விவசாயிகள் கோரிக்கை வைத்து போராடி வருகின்றனர். கொஞ்சம் கொஞ்சமாக நிர்வாக நுணுக்கங்களை தெரிந்து கொண்டு   முதலமைச்சர் அதை செய்வார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. பணத்தைப் பெற்றுக் கொண்டு நீர்நிலைகள் இருந்த இடங்களை கட்டிடம் கட்டி விட்டீர்கள்.  தி.மு.க மற்றும் அ.தி.மு.க., அரசுகள் செய்த காரணத்தினால்தான்  நீர்நிலைகள் இல்லாமல் போய்விட்டது.

குதிரை பேரதிற்கும் எனக்கும் சம்பந்தமில்லை என்று முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி  கூறுகிறார். குதிரையை கண்டுபிடித்தது தி.மு.க.,தான்.  கம்பம் சட்டமன்ற தொகுதியில் இருந்து ம.தி.மு.க எம்.எல்.ஏ வை ராஜினாமா செய்ய வைத்து தி.மு.க சார்பில் நிற்க வைத்து  அவரை சட்டமன்ற உறுப்பினராக ஆக்கியதே தி.மு.க.,தான். இது பெருச்சாளி பேரமா? நீங்கள் தான் அதற்கு வழி காட்டினீர்கள்.

பதனீர் பருகிய வைகோ

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து விட்டு த.வெ.கவில் சேர்ந்த அ.தி.மு.க-வினரை தேர்தலில் போட்டியிடக் கூடாது என்று கோரிக்கை வைத்துள்ளனர். அதை தடுக்க தேர்தல் ஆணைய விதிமுறைகளில் எவ்வித இடமும் இல்லை. அவர்கள் நிற்கிறார்களோ இல்லையோ என்று எனக்கு தெரியாது... ஆனால் இருப்பதை சட்டப்படி தடுக்க முடியாது. கூட்டணியில் இருந்த போது ஏன் இவ்வளவு கேள்வி கேட்கவில்லை என்று கேட்கின்றனர் . கூட்டணிக்குள் இருந்து கொண்டு பேசுவது கூட்டணி தர்மம் கிடையாது. 

சட்டமன்றத் தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் தேர்தலில் போட்டியிடவில்லை என்றால்  கட்சியின் பதிவு ரத்து செய்யப்படும் என்பதால் தேர்தலில் போட்டியிட்டோம். இல்லையென்றால் நிச்சயமாக முன்பு முடிவு எடுத்தது போல தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று முடிவெடுத்து இருந்தோம். ம.தி.முக பொது குழுவில் உறுப்பினர்கள் வெடித்து விட்டனர்.

சீமைக்கருவேல மரம் அகற்றம் பணியை தொடக்கி வைத்த வைகோ

தி.மு.க கூட்டணியிலிருந்து விலகுகிறோம் என்ற சொன்ன மாத்திரத்தில் அரங்கம் இடிந்து விழும்  வகையில் கைதட்டினர். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளில் நான் தேர்தல் பிரசாரம் செய்து எனது கடமையை செய்தேன். த.வெ.க அரசுக்கு வரும் விமர்சனங்களை தடுத்து நிறுத்தி,  விமர்சனங்கள் செய்தவர்கள் மீது திருப்பிவிடும் கேடயமாக ம.தி.மு.க இருக்கும்” என்றார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User