ஆடிக்கிருத்திகையில் முருகப் பெருமானை இப்படி வழிபாடு செய்வதால் இவ்வளவு நன்மைகளா?
முருகப் பெருமானுக்கு மூன்று வழிபாடுகள் மிகவும் விசேஷம். ஒன்று நாள் வழிபாடு, இரண்டாவது திதி வழிபாடு, மூன்றாவது நட்சத்திர வழிபாடு. நாள்களில் செவ்வாய்க்கிழமை முருக வழிபாட்டுக்கு ஏற்றது. திதிகளில் சஷ்டி. வளர்பிறை தேய்பிறை என எதுவாக இருந்தாலும் அதில் சஷ்டி திதியில் முருகனை வழிபட்டால் சகல நன்மைகளும் கிடைக்கும். மூன்றாவது நட்சத்திர வழிபாடு. முருகப்பெருமானின் அவதார நட்சத்திரம் விசாகம். அந்த விசாக நட்சத்திரம் வைகாசி மாதம் வரும்போது மிகவும் விமர்சியாகக் கொண்டாடப்படும். ஆனால் அதைக் காட்டிலும் முருக வழிபாட்டில் முக்கியத்துவம் பெறுவது கிருத்திகை நட்சத்திரம்.
ஒவ்வொரு மாதமும் கிருத்திகை நட்சத்திரத்தில் விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபட்டால் தீராத வினைகளும் தீரும் என்பார்கள். அதுவே ஆடிக்கிருத்திகை என்றால் மிகவும் சிறப்பு. ஆடிக்கிருத்திகையில் விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபட்டால் ஆண்டு முழுவதும் கிருத்திகையில் விரதம் இருந்து வழிபட்ட பலன் கிடைப்பதோடு தொடர்ந்து 12 ஆண்டுகள் வழிபட்டு வந்தால் முருகப்பெருமானின் தரிசனமும் கிடைக்கும் என்கிறார்கள் அடியார்கள்.

பொதுவாக விரதம் என்றால் உண்ணாமல் இருப்பது என்பது பலரின் கருத்து. ஆனால் அதுமட்டுமே விரதம் அல்ல. நாள் முழுவதும் முருகனையே நினைத்துக்கொண்டிருப்பதுவே விரதம். முருகனுக்குரிய மந்திரங்கள், தோத்திரங்கள், நாம ஜபங்களைச் செய்துகொண்டே இருக்க வேண்டும். குறிப்பாக திருப்புகழ், வேல்மாறல், கந்த சஷ்டிக் கவசம் போன்றவற்றைப் பாராயணம் செய்துகொண்டே இருக்க வேண்டும். உண்ணா நோன்பு இருக்க முடியாதவர்கள்கூட இப்படி பாராயண வழிபாட்டையோ நாம ஜப வழிபாட்டையோ செய்யச் செய்ய நற்பலன்கள் மிகும்.
கிருத்திகா நட்சத்திரம் சூரிய பகவானின் ஆளுகைக்கு உரிய நட்சத்திரம். எனவே அந்த நட்சத்திர நாளில் முருகனை வழிபட சூரிய பகவானின் அருள் கிடைக்கும். சூரியனுக்கு ஆத்ம காரகன் என்று பெயர். எனவே நம் ஆத்மாவையும் உடலையும் ஆரோக்கியமாக்குவதற்கும் கிருத்திகா விரத வழிபாடு சிறப்பாகும்.
நவகிரகங்களில் செவ்வாயின் அதிபதி முருகப்பெருமான். எனவே முருகப்பெருமானை கிருத்திகா நட்சத்திர நாளில் வழிபட ரத்தம் சம்பந்தமான வியாதிகள் தீரும். திருமணவரம் கைகூடும். தொழில் விருத்தி ஏற்படும் என்பது ஐதிகம்.





இப்படி முருக வழிபாட்டின் பொருள் உணர்ந்து அவரை ஆடிக்கிருத்திகை நாளில் வழிபடுவது மிகவும் விசேஷம். ஆடிக்கிருத்திகையில் முருகப்பெருமானின் ஆலயங்கள் களைகட்டும். பால்குடங்களும் காவடிகளும் நிறைந்து காணப்படும். எனவே இந்த அற்புதமான நாளில் ஆலய தரிசனம் செய்வது மிகவும் விசேஷம்.
இந்த நாளில் காலை எழுந்ததும் நீராடி முருகப்பெருமானை வழிபட்டு நாள் முழுவதும் அன்ன ஆகாரம் இன்றி முருகப்பெருமானைத் துதித்து வழிபடுவது விசேஷம். இயலாதவர்கள் ஒருவேளை உணவு எடுத்துக்கொண்டு வழிபட்டாலும் போதுமானது. பொதுவாக விரதம் என்பது முதியவர்களுக்கும் குழந்தைகளுக்கும் கர்ப்பிணிகளும் கிடையாது என்பதைப் புரிந்துகொள்வது அவசியம்.
வீட்டில் முருகப்பெருமானை வழிபட விரும்புபவர்கள் முருகப்பெருமானின் படம் அல்லது விக்கிரகத்துக்கு மாலை சாற்றி சடாட்சர மந்திரமான, `சரவணபவ’ என்னும் மந்திரத்தைச் சொல்ல வேண்டும்.
அர்ச்சனை செய்ய உகந்த மலர்கள் : மல்லிகை, சிவப்பு நிற மலர்கள், தாமரை
நிவேதனம் : வீட்டில் சமைக்கும் உணவையே நிவேதனம் செய்யலாம், அவல் பாயசம் செய்து நிவேதனம் செய்வது சிறப்பு.
இந்த ஆண்டு ஆடிக்கிருத்திகை எப்போது?
பலருக்கும் இந்தக் கேள்வி உள்ளது. பல நாள்காட்டிகளில் இன்று (6-8-26) ஆடிக்கிருத்திகை எனப்போடப்பட்டுள்ளது. ஆலயங்கள் பலவற்றிலும் இன்றே ஆடிக்கிருத்திகை கொண்டாடுகிறார்கள். ஆனால் சிலர் நாளை (7.8.26) ஆடிக்கிருத்திகை என்கிறார்கள்.
பஞ்சாங்கப்படி இன்று மாலை 6.19 மணிக்கு கிருத்திகா நட்சத்திரம் தொடங்கி நாளை மாலை 4.15 வரை உள்ளது. எனவே இன்று நாளை என இரு தினங்களில் எந்த நாளில் வேண்டுமானாலும் விரதம் கடைப்பிடிக்கலாம். நாளை ஆடி வெள்ளிக்கிழமையாகவும் அமைகிறது. காலை வேளையில் கிருத்திகா நட்சத்திரமும் அமைகிறது. எனவே நாளை விரதம் கடைப்பிடித்தால் சகல நலன்களும் உண்டாகும்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)