Doctor Vikatan: தீவிரமான TB பாதிப்பு... 35 வருடங்கள் கடந்த நிலையில் கேன்சரை ஏற்படுத்துமா?

Oct 28, 2026 - 11:00
0
Doctor Vikatan: தீவிரமான TB பாதிப்பு... 35 வருடங்கள் கடந்த நிலையில் கேன்சரை ஏற்படுத்துமா?

Doctor Vikatan: என் வயது 67. எனக்கு தீவிரமான டிபி பாதிப்பு ஏற்பட்டு அதிலிருந்து முற்றிலும் குணமாகி 35 வருடங்கள் ஆகிவிட்டன. இந்நிலையில் எனக்கு புற்றுநோய் வர வாய்ப்புகள் உண்டா?

-Ravidaivanayagom Ravi, விகடன் இணையத்திலிருந்து

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த  நெஞ்சக மற்றும் உணவுக்குழாய் புற்றுநோய் அறுவை சிகிச்சை மருத்துவர் காதர் ஹுசைன்

நெஞ்சக மற்றும் உணவுக்குழாய் புற்றுநோய் அறுவை சிகிச்சை மருத்துவர் காதர் ஹுசைன்

காசநோய் (டிபி) என்பது பாக்டீரியாவால் ஏற்படும் ஒரு தொற்றுநோய்.  ஆனால், புற்றுநோய் என்பது உடலின் சொந்த செல்கள் மாறுபடுவதால் உருவாகிறது. காசநோயால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நீண்டகால நுரையீரல் பிரச்னைகள் ஏற்படுவதில்லை. மேலும் பெரும்பான்மையானவர்களுக்குப் புற்றுநோயும் வருவதில்லை.

இருப்பினும், சில ஆய்வுகள் கடந்த கால காசநோய்க்கும் நுரையீரல் புற்றுநோய்க்கும் இடையே ஒரு சாத்தியமான தொடர்பைக் கண்டறிந்துள்ளன. கடுமையான காசநோய், நுரையீரலில் தழும்புகளை ஏற்படுத்தக்கூடும். இத்தகைய நிரந்தர பாதிப்பு ஏற்படும் நபர்களுக்கு, அது நுரையீரல் புற்றுநோயுடன் தொடர்புடையதாக இருக்க வாய்ப்புள்ளது. இதற்கான ஆபத்து 5 முதல் 10 சதவிகிதம் வரை உள்ளது என்கிறது அந்த ஆய்வு.  

ஆய்வு சொல்லும் இந்தத் தகவலை வைத்து காசநோய்தான் புற்றுநோயை உண்டாக்குகிறது என்பதற்கான சான்றாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. நீங்கள் 35 ஆண்டுகளுக்கு முன்பே முழுமையாகக் குணமடைந்துவிட்டதால், கூடுதல் ஆபத்து ஏற்படுவது என்பது மிகக் குறைவு. அதுவும் தழும்புகளால் வரக்கூடுமே தவிர, தொற்றினால் அல்ல.

நீங்கள் புகைபிடிப்பவராக இருந்தால், உங்களுக்கான ரிஸ்க் 70 முதல் 80 சதவிகிதம் வரை உயரக்கூடும்.

புகைபிடித்தல் இதில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்துகிறது. புகைபிடிப்பவராக இருந்தால், உங்களுக்கான ரிஸ்க் 70 முதல் 80 சதவிகிதம் வரை உயரக்கூடும். எனவே, நீங்கள் புகைபிடிப்பவராக இருந்தால், அதை நிறுத்துவதே நீங்கள் எடுக்கக்கூடிய சிறந்த முடிவாக இருக்கும்.

உங்கள் ஒட்டுமொத்த ரிஸ்க், உங்கள் வயது, காற்று மாசுபாடு மற்றும் வீட்டுப் புகைச் சூழலின் வெளிப்பாடு, குடும்பப் பின்னணியில் உள்ள புற்றுநோய் வரலாறு மற்றும் நுரையீரலில் உள்ள நிரந்தர பாதிப்புகள் ஆகியவற்றையும் பொறுத்தது. விழிப்புணர்வுடன் இருப்பது நல்லது. அதே சமயம் பயப்படத் தேவையில்லை.

67 வயதில், பின்வரும் அறிகுறிகளில் எதையேனும் நீங்கள் கவனித்தால், தாமதிக்காமல் மருத்துவரை அணுகவும். இவை கண்டிப்பாக புற்றுநோயைக் குறிப்பவை என்று அர்த்தமில்லை. ஆனால், இவற்றை அலட்சியப்படுத்தக் கூடாது.

• மூன்று வாரங்களுக்கு மேல் நீடிக்கும் இருமல்

• சளியில் ரத்தம் வருதல்

• காரணமில்லாமல் உடல் எடை குறைவது அல்லது பசியின்மை

• தொடர்ச்சியான நெஞ்சு வலி அல்லது மூச்சுத்திணறல் அதிகரிப்பது

• மீண்டும் மீண்டும் ஏற்படும் நெஞ்சுத் தொற்றுகள்

உங்கள் பழைய நெஞ்சக எக்ஸ்ரே (X-ray) மற்றும் காசநோய் சிகிச்சை பதிவுகளைப் பாதுகாப்பாக வைத்திருங்கள்.

உங்கள் பழைய நெஞ்சக எக்ஸ்ரே (X-ray) மற்றும் காசநோய் சிகிச்சை பதிவுகளைப் பத்திரமாக வைத்திருங்கள். அப்போதுதான் உங்கள் மருத்துவர் அவற்றை புதிய பரிசோதனைகளுடன் ஒப்பிட்டுப் பார்க்க முடியும். தேவைப்படுகிற புதிய பரிசோதனைகளைச் செய்யச் சொல்வார்.

உங்களுக்கு எந்த அறிகுறிகளும் இல்லை என்றால், வழக்கமான சுகாதாரப் பரிசோதனைகள், ஆரோக்கியமான வாழ்வியல் முறை மற்றும் புகையிலைப் பழக்கம் இல்லாமல் இருப்பது ஆகியவையே சிறந்த வழிகளாகும். விழிப்புடன் இருங்கள், கவலைப்பட வேண்டியதில்லை.

டாக்டர் காதர் ஹுசைன்:

சென்னை, Apollo Proton Cancer Center-ல் நெஞ்சக மற்றும் உணவுக்குழாய் புற்றுநோய் அறுவை சிகிச்சை மருத்துவராகப் பணிபுரிகிறார். 

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.   

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User