`உடைந்தது திமுக கூட்டணி' - தவெக ஆட்சி அமைக்க காங்கிரஸ் நிபந்தனையுடன் ஆதரவு! - என்னென்ன நிபந்தனைகள்?

May 06, 2026 - 13:32
0
`உடைந்தது திமுக கூட்டணி' - தவெக ஆட்சி அமைக்க காங்கிரஸ் நிபந்தனையுடன் ஆதரவு! - என்னென்ன நிபந்தனைகள்?

நடந்து முடிந்துள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. கட்சி தோல்வியைத் தழுவிய நிலையில், த.வெ.க அதிக இடங்களை வென்ற தனிக்கட்சியாக உள்ளது.

ஆனாலும் தனிப்பெரும்பான்மை ஆட்சி அமைப்பதற்கான எண்ணிக்கை த.வெ.கவிற்குக் கிடைக்கவில்லை. மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 118 தொகுதிகளை தனிக் கட்சியாக வென்றால் மட்டுமே தனிப்பெரும்பான்மை ஆட்சி அமைக்க முடியும்.

ஆனால் தனிக்கட்சியாக 108 இடங்களை மட்டுமே த.வெ.க வென்றுள்ளது. பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களை கட்சி பெறாததால், ஆதரவு அளிக்க காங்கிரஸை த.வெ.க நாடியிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

விஜய், ராகுல் காந்தி
விஜய், ராகுல் காந்தி

இந்நிலையில் தவெக ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவு அளித்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.

கிரிஷ் சோடங்கர் பெயரில் வெளியாகியுள்ள அந்த அறிக்கையில்,

``தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் திரு. விஜய் அவர்கள், தமிழ்நாட்டில் ஆட்சி அமைப்பதற்கு ஆதரவு அளிக்குமாறு இந்திய தேசிய காங்கிரஸ் (INC) கட்சியிடம் அதிகாரப்பூர்வமாக கோரிக்கை விடுத்துள்ளார். தமிழக மக்கள், குறிப்பாக இளைஞர்கள், அரசியலமைப்பு கொள்கைகளில் நம்பிக்கையுள்ள ஒரு மதச்சார்பற்ற, முற்போக்கு மற்றும் மக்கள் நல அரசாங்கத்திற்காக மிகத் தெளிவான, வலுவான மற்றும் அமோகமான தீர்ப்பை வழங்கியுள்ளனர். அடுத்த அரசாங்கத்தை அமைப்பதற்கு திரு. விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தை அவர்கள் தேர்ந்தெடுத்துள்ளனர்.

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி, இந்தியாவின் மதச்சார்பற்ற, முற்போக்கு மற்றும் மக்கள் நல அரசியலின் நிறுவனக் கட்சியாகத் திகழ்கிறது. தமிழக மக்களின் இந்த ஆணைக்கு மதிப்பளிப்பதும், அதைப் பாதுகாப்பதும், நிறைவேற்ற உதவுவதும் எங்களது அரசியலமைப்பு ரீதியான கடமையாகும். அதற்கேற்ப, தமிழக காங்கிரஸ் கமிட்டியும், காங்கிரஸ் சட்டமன்றக் கட்சியும் ஆட்சி அமைக்க தவெகவிற்கு முழு ஆதரவை வழங்க முடிவு செய்துள்ளன.

இந்திய அரசியலமைப்பில் நம்பிக்கையற்ற எந்தவொரு வகுப்புவாத சக்திகளையும் இந்தக் கூட்டணியில் சேர்க்கக் கூடாது என்ற நிபந்தனையின் அடிப்படையில் எங்களது ஆதரவு அமையும்.

தவெக மற்றும் தமிழக காங்கிரஸ் இடையிலான இந்தக் கூட்டணி, தந்தை பெரியாரின் சமூக நீதிச் சிந்தனைகள் மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் அரசியலமைப்பு லட்சியங்களில் உறுதியான அர்ப்பணிப்புடன், பெருந்தலைவர் காமராஜரின் பொற்கால ஆட்சியை மீண்டும் தமிழகத்திற்குக் கொண்டு வர வரும் காலங்களிலும், தசாப்தங்களிலும் பாடுபடும்.

பரஸ்பர மரியாதை, முறையான பங்கீடு மற்றும் பகிரப்பட்ட பொறுப்பு ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்துள்ள இந்தக் கூட்டணி, இந்த அரசாங்கத்தை அமைப்பதற்கு மட்டுமல்லாமல், எதிர்காலத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தல்கள், மக்களவை மற்றும் மாநிலங்களவைத் தேர்தல்களுக்கும் தொடரும்.

மதச்சார்பற்ற மற்றும் முற்போக்கு அரசாங்கத்திற்காக தமிழக மக்கள் வழங்கிய இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை மதிப்பதற்கும், மக்களின், குறிப்பாக இளைஞர்களின் கனவுகளையும் வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவதற்கும் திரு. விஜய் மற்றும் திரு. ராகுல் காந்தி ஆகியோர் இணைந்து உறுதி பூண்டுள்ளனர்." எனக் குறிப்பிட்டுள்ளார்,

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User