டெல்லி மாணவர் போராட்டம்: "தடியடி தேவையில்லை; அரவணைக்கும் கைகள்தாம் தேவை" - நடிகர் சோனு சூட்

Jul 21, 2026 - 16:31
0
டெல்லி மாணவர் போராட்டம்: "தடியடி தேவையில்லை; அரவணைக்கும் கைகள்தாம் தேவை" - நடிகர் சோனு சூட்

நீட் தேர்வு முறைகேடு, கல்வியில் சீர்திருத்தம் மற்றும் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா உட்பட பல்வேறு அம்சங்களை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி போராட்டம் நடத்தி வருகிறது.

இப்போராட்டத்தில் நாடு முழுவதுமிருந்து ஆயிரக்கணக்கான மாணவர்களும் கலந்துகொண்டுள்ளனர். மழைக்காலக் கூட்டத் தொடரின் தொடக்க நாளன்று, பலத்த மழையையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான மாணவர்களும் ஆதரவாளர்களும் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாகச் சென்றனர்.

அவர்கள் மீது நேற்று போலீஸார் தடியடி நடத்தினர். மாணவர்களின் இப்போராட்டத்திற்கு பாலிவுட் பிரபலங்கள் ஆதரவு கொடுத்து வருகின்றனர். இப்போராட்டம் குறித்து பாலிவுட் நடிகர் சோனு சூட் விடுத்துள்ள அறிக்கையில், மாணவர்களிடம் மிகவும் இரக்கமான அணுகுமுறைக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

ஹேமாமாலினி
ஹேமாமாலினி

சமூக ஊடத்தில் சோனு சூட் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "நமது மாணவர்களுக்குத் தடியடி தேவையில்லை, அவர்களை அரவணைக்கும் கரங்களே தேவை" என்று அவர் மேலும் கூறினார்.

இப்போராட்டம் குறித்து பா.ஜ.க எம்.பி.ஹேமாமாலினி அளித்த பேட்டியில், ''ஒரு பிரச்னை என்றால், அதை முறையாக விவாதிக்க வேண்டும். இந்த முறையில் போராட்டம் நடத்துவதால் எதையும் சாதிக்க முடியாது. நாட்டின் இளைஞர்கள் மற்றும் கல்வி முறையைப் பொறுத்தவரை, நமது மோடி அரசாங்கம் எப்போதும் அவர்களுக்குத் துணையாக நின்று, பெரும் பணியைச் செய்யும். அப்படி இருக்கையில், இப்போது நீங்கள் நடத்தும் போராட்டங்களில் அர்த்தமே இல்லை.

இந்த விவகாரம் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்பட வேண்டும் என்றுதான் நான் கூறுவேன். அவர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும்'' என்றார். மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கை குறித்து பதிலளிக்க மறுத்துவிட்டார்.

இதற்கிடையே இந்தியா மற்றும் அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கிசான் மகாபஞ்சாயத்தில் பங்கேற்பதற்காக பஞ்சாப்பிலிருந்து டெல்லியை நோக்கி பேரணியாகச் சென்ற நூற்றுக்கணக்கான விவசாயிகள், ஹரியானாவின் நுழைவு வாயிலான ஷம்பு எல்லையில் ஹரியானா காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

ஆனாலும் பஞ்சாப் மாநிலம் அம்பாலா, குருக்ஷேத்ரா மற்றும் அண்டை மாவட்டங்கள் உட்பட ஹரியானாவைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லிக்குத் தங்கள் பயணத்தைத் தொடர்ந்தனர். ஒரே நேரத்தில் மாணவர்கள், விவசாயிகள் டெல்லியில் கூட இருப்பது பதட்டத்தை அதிகரித்துள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User