"திண்டுக்கல் சீனிவாசனுக்கும், செல்லூர் ராஜூவுக்கும் இடையே யார் பெரிய Scientist எனப் போட்டி"- உதயநிதி
திண்டுக்கல் மாவட்டத்தில் நிலக்கோட்டை, திண்டுக்கல் மற்றும் வேடசந்தூர் தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக நேற்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார்.
திண்டுக்கல் தொகுதி திமுக வேட்பாளர் ஐ. பி. செந்தில்குமாருக்கு ஆதரவாக நாகல் நகர் பகுதியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசும்போது, “16 நாள்களாக 100 சட்டமன்றத் தொகுதிகளுக்குச் சென்றுள்ளேன். திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்காக வாக்கு சேகரித்து வருகிறேன். ஐ. பி. செந்தில்குமாருக்கு உதயசூரியன் சின்னத்தில் உங்களிடம் வாக்கு கேட்கலாம் என்று வந்து பார்த்த பின்புதான் தெரிகிறது ஏற்கனவே நீங்கள் அனைவரும் முடிவு எடுத்து வைத்துள்ளீர்கள்.
திண்டுக்கல் என்றாலே மகிழ்ச்சிதான் கெத்துதான். திண்டுக்கல் என்றாலே பூட்டுதான். இந்தச் சட்டமன்றத் தேர்தலில் அடிமைக் கூட்டத்திற்கும் சங்கிக் கூட்டத்திற்கும் திண்டுக்கல்லில் சரியான பூட்டு போட்டு ஆக வேண்டும்.
திண்டுக்கல்லில் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி நிச்சயம் என்று மக்களின் எழுச்சியைப் பார்க்கும் பொழுது தெரிகிறது. திமுகவின் துணைப் பொதுச்செயலாளர் ஐ. பெரியசாமி அவர்களின் மகன் தான் ஐ.பி. செந்தில் குமார், எனது உற்ற தோழர், எனது தம்பி, கூட பிறக்காத தம்பி எனது நண்பன்தான் செந்தில்குமார். தகப்பனார் வழியில், தாய் 8 அடி பாய்ந்தால் பிள்ளை 16 அடி பாயும் என்று சொல்கிறார்கள்
ஐ.பெரியசாமியுடன் போட்டி போடும் அளவிற்கு மக்கள் பணி ஆற்றி உழைத்து வருபவர் ஐ. பி. செந்தில் குமார். இளைஞர் அணியில் இருந்து வந்தவர்தான் ஐ.பி. செந்தில்குமார். தொகுதி மக்களுக்கு என்ன தேவையோ பார்த்து பார்த்து செய்யக் கூடியவர் ஐ.பி. செந்தில்குமார். திண்டுக்கல்லிற்குத் திட்டங்களைக் கொடுத்திருக்கிறோம் என்ற உரிமையில் உங்களிடம் ஓட்டு கேட்க வந்திருக்கிறேன்.
திண்டுக்கல் மாநகராட்சியில் விடுபட்ட பகுதிகளுக்குப் பாதாள சாக்கடைத் திட்டப் பணிகளுக்கு 280 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு நடந்துட்டு இருக்கு. 75 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய புறநகர் பேருந்து நிலையம் (Bus Stand) கட்டிக் கொடுத்திருக்கிறோம்.
ஐ.பி. செந்தில்குமாரை எதிர்த்து போட்டி போடும் திண்டுக்கல் சீனிவாசன் ஒரு மாபெரும் சிந்தனையாளர், பெரிய சயின்டிஸ்ட். அவர் சொல்றதெல்லாமே அப்போது புரியாது, அப்புறமாக வீட்டுக்குப் போய் யோசித்தால்தான் புரியும். அந்த அளவுக்கு யோசிச்சு யோசிச்சு தத்துவங்களைச் சொல்லுவார். அவருக்கும் பக்கத்து மாவட்டத்துல இருக்கக்கூடிய இன்னொரு சயின்டிஸ்ட் ஒருத்தர் இருக்கிறார், விஞ்ஞானி அண்ணன் செல்லூர் ராஜூ. இவங்க ரெண்டு பேருக்கும்தான் மிகப்பெரிய போட்டி.
இவங்க ரெண்டு பேருக்குள்ள என்ன போட்டி? யார் அதிகமா தத்துவங்கள் சொல்வது, யார் பெரிய சயின்டிஸ்ட் என இருவருக்குள்ளும் போட்டிகள் நடக்கின்றன. பாராளுமன்றத் தொகுதி வரையறையை எதிர்த்து முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.
முரட்டு அடிமை எடப்பாடி பழனிசாமி ரொம்ப நல்ல விஷயம் என்கிறார். இதனால் யாருக்கும் பாதிப்பு வராது எனச் சொல்கிறார். தொகுதியும் மறு வரையறையால் பாதிப்பு வரும் எனச் சொல்லிவிட்டால் பாஜகவிடமிருந்து எடப்பாடி பழனிசாமிக்குப் பாதிப்பு வந்துவிடும்.
அதனால்தான் மீண்டும் மீண்டும் சொல்றேன், எடப்பாடி பழனிசாமி தமிழ்நாட்டு மக்களுக்கு மிகப்பெரிய துரோகத்தைச் செஞ்சுக்கிட்டு இருக்கிறார். அவருக்கு வருகிற 23 ஆம் தேதி உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து பாடம் புகட்ட வேண்டும்” என்றார்
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0