கோவை: சாதிய வன்கொடுமையால் மாணவர் அகிலன் தற்கொலை விவகாரம்; முடிவுக்கு வந்த பெற்றோர் போராட்டம்
கோவை பீளமேடு பகுதியில் உள்ள கே.கே.நாயுடு என்ற அரசு உதவி பெறும் பள்ளியில் 11 ம் வகுப்பு படித்து வந்த அகிலன் என்ற பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த மாணவன் கடந்த 21ம் தேதியன்று வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
“நீ எஸ்.சி.யா, பீஃப் சாப்பிடுவீயா?” என வகுப்பறையில் கேட்டு ஆசிரியர் மற்றும் சக மாணவர்கள் இழிவுபடுத்தியதால் அகிலன் தற்கொலை செய்து கொண்டதாக பெற்றோர்கள் குற்றம்சாட்டினர்.
இது தொடர்பாக சக மாணவர்கள் இருவர், வகுப்பு ஆசிரியர் விஜயகுமார், தலைமை ஆசிரியர் அருண் குமார் ஆகிய நான்கு பேர் மீதும் 3 பிரிவுகளில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சாதிய வன்கொடுமை தொடர்பாக புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத ஆசிரியர்களைக் கைது செய்யும் வரை, அகிலனின் உடலை வாங்க மாட்டோம் என அவனது பெற்றோர், உறவினர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் கடந்த 7 நாட்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் அகிலன் தற்கொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றி டி.ஜி.பி. மகேஷ்குமார் அகர்வால் நேற்று உத்தரவிட்டார். பின்னர் அகிலனின் குடும்பத்திற்கு ரூ.6 லட்சம் நிதியுதவியையும், அகிலனின் சகோதரிக்கு ஆனைக்கட்டி உண்டு உறைவிடப் பள்ளியில் இளநிலை உதவியாளர் பணிக்கான பணி நியமன ஆணையையும் அமைச்சர் சம்பத்குமார் வழங்கினார்.
7 நாட்களுக்குப் பிறகு இன்று காலை அகிலனின் உடலை, அவனது பெற்றோர்கள் பெற்றுக் கொண்டனர். இதனால் கடந்த ஒரு வார காலமாக நடைபெற்று வந்த போராட்டம் முடிவுக்கு வந்தது.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)