சென்னை: தங்க காசு மோசடி வழக்கில் பெண் இன்ஸ்பெக்டர் - பின்னணி விவரிக்கும் அதிகாரிகள்!

Jun 16, 2026 - 18:00
0
சென்னை: தங்க காசு மோசடி வழக்கில் பெண் இன்ஸ்பெக்டர் - பின்னணி விவரிக்கும் அதிகாரிகள்!

சென்னை குன்றத்தூரைச் சேர்ந்த வங்கி ஊழியர் ஒருவரை கொளத்தூரைச் சேர்ந்த பிரபுமணி என்பவர் தொடர்பு கொண்டு, எங்களிடம் 4,500 ரூபாய் முதலீடு செய்தால் 15 நாள்களுக்குள் ஒரு கிராம் தங்கக் காசை கொடுப்போம் என கூறியிருக்கிறார். பின்னர் தங்கக் காசு சேமிப்பு திட்டம் குறித்தும் வங்கி ஊழியரிடம் விரிவாக பிரபுமணி கூறியிருக்கிறார். அதனால் வங்கி ஊழியரும் 89,32,782 ரூபாயை தங்க காசுக்காக முதலீடு செய்திருக்கிறார். ஆனால் தங்க காசுகளை கொடுக்காமல் வங்கி ஊழியரை பிரபுமணி ஏமாற்றி வந்திருக்கிறார். அதனால் வங்கி ஊழியர், சென்னை போலீஸ் கமிஷனரை சந்தித்து புகாரளித்தார். ஆனால் அந்தப் புகாரின் பேரில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்தச் சூழலில் வங்கி ஊழியரைப் போல காவல்துறையைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்டவர்களையும் பிரபுமணி தரப்பு ஏமாற்றியிருக்கிறது. அதனால் அவர்களும் பிரபுமணி மீது நடவடிக்கை எடுக்க சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அடுத்தடுத்து புகாரளித்தனர். ஆனாலும் சில மேலிட பிரஷர் காரணமாக பிரபுமணி மீது எந்தவித நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

பிரபுமணி

இதையடுத்து பிரபுமணியிடம் தங்க காசுக்காக பணத்தை இழந்தவர்கள் சென்னை பொருளாதார குற்றப்பிரிவில் புகாரளித்தனர். அதன்பேரில் பிரபுமணி மீது மோசடி வழக்குப்பதிவு செய்த போலீஸார், அவரை கைது செய்தனர். பணத்தை இழந்தவர்கள் அளித்த புகாரில் பிரபுமணிக்கு உடந்தையாக செயல்பட்டது ராயபுரம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷீலாமேரி என்று குற்றம் சாட்டியிருந்தனர். அதனால் இந்த வழக்கில் மூன்றாவது குற்றம் சாட்டப்பட்டவராக இன்ஸ்பெக்டர் ஷீலாமேரி சேர்க்கப்பட்டார். அதைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டர் ஷீலாமேரி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

இந்த மோசடி பின்னணி குறித்து சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் கூறுகையில், ``கைது செய்யப்பட்ட பிரபுமணி, சென்னை கொளத்தூரில் அலுவலகம் நடத்தி வந்திருக்கிறார். அப்போது, அவருக்கும் இன்ஸ்பெக்டர் ஷீலாமேரிக்கும் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. அதனால் இருவரும் சேர்ந்து தங்களுக்குத் தெரிந்த போலீஸ் குடும்பங்களைச் சேர்ந்தவர்களிடம் குறைந்த விலைக்கு தங்க காசுகளை தருவதாகக் கூறி லட்சக்கணக்கில் பணத்தை வாங்கியிருக்கிறார்கள். இதில் வங்கி ஊழியரிடம் மட்டும் 90 லட்சம் ரூபாய் வரை பிரபுமணி வாங்கியிருக்கிறார். பின்னர் 27 லட்சம் ரூபாய் வரை திருப்பி கொடுத்திருக்கிறார். மீதியுள்ள பணத்தைக் கொடுக்காமல் பிரபுமணி ஏமாற்றி வந்திருக்கிறார். இதுதொடர்பான புகாரின் பேரில்தான் பிரபுமணி மீது வழக்கு பதிவு செய்தோம். இந்த வழக்கில் பணத்தை இழந்தவர்கள் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ஷீலாமேரியையும் குற்றம் சாட்டப்பட்டவராக சேர்த்திருக்கிறோம். இதுதவிர பிரபுமணியின் உதவியாளர் செந்தில், பிரபுமணி நிறுவனத்தில் வேலை செய்த கல்பனா ஆகியோரும் குற்றம் சாட்டப்பட்டவர்களாக சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். இந்த மோசடி வழக்கில் இன்ஸ்பெக்டர் ஷீலாமேரியிடம் விசாரணை நடத்தப்படும்.

கைது
கைது

இன்ஸ்பெக்டர் ஷீலாமேரியைத் தவிர இன்னும் சில அதிகாரிகளும் இந்த மோசடிக்குப் பின்னணியில் இருப்பதாகவும் தகவல் கிடைத்திருக்கிறது. தற்போது கைது செய்யப்பட்டிருக்கும் பிரபுமணியை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்திருக்கிறோம். அவரின் வங்கி கணக்குகளை ஆய்வு செய்த போது லட்சக்கணக்கான பண பரிவர்த்தனைகள் நடந்திருப்பது தெரியவந்திருக்கிறது. இதுதவிர தீபாவளி பண்ட் நடத்தி வந்திருக்கிறார் பிரபுமணி. கடந்த ஆண்டு தீபாவளியின் போது தீபாவளி பண்டில் சேர்ந்தவர்களுக்கு தங்க காசு, மளிகை பொருள்கள், பட்டாசுகளை கொடுப்பதில் பிரபுமணிக்கு சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. அப்போது இன்ஸ்பெக்டர் ஒருவர், வங்கியில் லோன் போட்டு அந்தப் பணத்தை பிரபுமணியிடம் கொடுத்திருக்கிறார். இதுதவிர வடசென்னையில் பணியாற்றிய காவல்துறை அதிகாரிகளில் சிலர், பிரபுமணியின் தங்க காசு முதலீடு திட்டத்தில் சேர்ந்து பயனடைந்திருக்கிறார்கள். அவர்களின் விவரங்களையும் சேகரித்திருக்கிறோம். இதுவரை 3 கோடி ரூபாய் வரை மோசடி நடந்திருப்பது தெரியவந்திருக்கிறது. பிரபுமணியிடம் பணத்தை கொடுத்த ஏமாந்தவர்கள் அடுத்தடுத்து புகாரளித்து வருவதால் மோசடி தொகை அதிகரிக்க வாய்ப்புள்ளது'' என்றனர்.

இன்ஸ்பெக்டர் ஷீலா மேரி

இன்ஸ்பெக்டர் ஷீலாராணியின் பின்னணி குறித்து போலீஸார் கூறுகையில், ``இவர், 2004-ம் ஆண்டு காவல்துறையில் பணிக்குச் சேர்ந்திருக்கிறார். 2023-ம் ஆண்டு முதல் ராயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணியாற்றி வருகிறார். இன்ஸ்பெக்டர் ஷீலாமேரி வடசென்னையில் உள்ள சில காவல் நிலையங்களில் பணியாற்றிய போது அவருக்கு கொளத்தூரைச் சேர்ந்த தொழிலதிபர் பிரபுமணியுடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. அக்காள், தம்பியாக இருவரும் பழகி வந்திருக்கிறார்கள். அதன்பிறகுதான் தங்க காசு முதலீடு திட்டம், தீபாவளி பண்ட், ரியல் எஸ்டேட் ஆகிய பிசினஸ்களில் பிரபுமணிக்கு இன்ஸ்பெக்டர் ஷீலாமேரி உறுதுணையாக இருந்து வந்திருக்கிறார். பிரபுமணியிடம் போலீஸ் குடும்பங்களைச் சேர்ந்த பலர் தங்க காசு முதலீடு திட்டத்தில் சேர, இன்ஸ்பெக்டர் ஷீலாமேரியும் ஒரு காரணம். ஷீலாமேரியின் வங்கி கணக்குகளை ஆய்வு செய்ததில் சில முக்கிய தகவல்கள் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாருக்கு கிடைத்திருக்கிறது. அந்த ரிப்போர்ட் அடிப்படையில்தான் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார். பிரபுமணி, இன்ஸ்பெக்டர் ஷீலாமேரி ஆகியோருடன் மோசடி விவகாரத்தில் தொடர்புடையவர்களும் தற்போது பீதியிலிருக்கிறார்கள்'' என்றனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User