சென்னை: "ஐயா, என் மனைவிய கொன்னுட்டேன்" - 54 வயது பெண்மணியைக் கொடூரமாகக் கொன்ற 68 வயது முதியவர்

Jun 11, 2026 - 16:02
0
சென்னை: "ஐயா, என் மனைவிய கொன்னுட்டேன்" - 54 வயது பெண்மணியைக் கொடூரமாகக் கொன்ற 68 வயது முதியவர்

சென்னை அண்ணாநகர் கிழக்கு சத்யா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஏகாம்பரம் (68). இவரின் மனைவி சாந்தி (54). கடந்த 2010-ம் ஆண்டு ஏகாம்பரம் தற்கொலை செய்து கொண்டார்.

அதனால் சாந்தி, 2016-ம் ஆண்டு முதல் அதே பகுதியைச் சேர்ந்த 68 வயதுடைய ராஜேந்திரன் என்பவருடன் வாழ்ந்து வந்தார். மேலும் சாந்தி தெரு தெருவாகச் சென்று புடவை வியாபாரம் செய்து வந்தார்.

பிசினஸிக்காக சாந்தி சிலரிடம் கடன் வாங்கியதாகவும் கூறப்படுகிறது. அந்தக் கடனை சாந்தி சரிவர கொடுக்காததால் கடன் கொடுத்தவர்கள் வீட்டுக்கு வந்து பிரச்னையும் செய்து வந்தனர். அதனால் ராஜேந்திரனுக்கும் சாந்திக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்தது.

தற்கொலை
தற்கொலை

இது தவிர சாந்தியின் நடத்தையலும் ராஜேந்திரனுக்குச் சந்தேகம் இருந்ததாகக் கூறப்படுகிறது. சம்பவத்தன்று அதிகாலையில் ராஜேந்திரனுக்கும் சாந்திக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ராஜேந்திரன், சுத்தியலால் தூங்கி கொண்டிருந்த சாந்தியை அடித்து கொலை செய்தார்.

பின்னர் அவர், அண்ணா நகர் காவல் நிலையத்துக்கு வந்து, ''ஐயா என் மனைவியைக் கொலை செய்துவிட்டேன். அவளின் சடலம் வீட்டிலிருக்கிறது. என்னைக் கைது செய்யுங்கள்'' எனக் கூறியிருக்கிறார்.

அதைக்கேட்ட போலீஸார், ராஜேந்திரனை அழைத்துக் கொண்டு அவரின் வீட்டுக்குச் சென்றனர். அங்கு ரத்த வெள்ளத்தில் சாந்தி சடலமாகக் கிடந்தார். இதையடுத்து சாந்தியின் சடலத்தைக் கைப்பற்றிய போலீஸார் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

அதைத் தொடர்ந்து மனைவியைக் கொடூரமாக சுத்தியலால் அடித்துக் கொலை செய்த குற்றத்துக்காக ராஜேந்திரனைக் கைது செய்தனர்.

இதுகுறித்து அண்ணாநகர் போலீஸார் கூறுகையில், ``கைது செய்யப்பட்ட ராஜேந்திரன், செக்யூரிட்டியாக வேலை செய்து வருகிறார். இவரின் முதல் மனைவி இறந்துவிட தனியாக வசித்து வந்தார். அப்போதுதான் கணவரை இழந்த சாந்தியுடன் ராஜேந்திரனுக்குப் பழக்கம் ஏற்பட்டு இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்தனர்.

சாந்திக்கு முதல் கணவர் ஏகாம்பரத்தின் மூலம் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த வயதில் சாந்தி மீது ஏற்பட்ட சந்தேகம். அவர் வாங்கிய கடன் தொல்லை ஆகிய காரணங்களால் அவரைக் கொலை செய்தததாக ராஜேந்திரன் விசாரணையின் போது தெரிவித்தார். தொடர்ந்து விசாரித்து வருகிறோம்'' என்றனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User