Bigg Boss Tamil: "லக்ஷ்மி பிரியாவுக்கு சேனலில் நல்ல செல்வாக்குனு சொல்றாங்க"- ஆனந்தி அம்மா பேட்டி
19 போட்டியாளர்களுடன் விஜய் டிவியில் செப்டம்பர் 6ம் தேதி தொடங்கிய பிக்பாஸ் சீசன் 10 விறுவிறுப்படையத் தொடங்கியிருக்கிறது.
உடல் நலனைக் கருத்தில் கொண்டு பிளாக் பாண்டி நிகழ்ச்சி தொடங்கிய சில தினங்களிலேயே வெளியேற, அடுத்தடுத்த எவிக்ஷன் மூலம் சாவின்யா, மணிவண்ணன், ஜாவித் ஆகியோர் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறி இருக்கின்றனர். முன்னதாக ஷோ தொடங்கிய ஒரு வாரம் கழித்து ஆனந்தியும் ஒரு போட்டியாளராக பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றது நினைவிருக்கலாம்.
ஆனந்தி சென்றது முதலே அவருக்கும் நடிகை லக்ஷ்மி பிரியாவுக்கும் இடையில் மோதல்தான்.
இந்நிலையில் ஆனந்தியின் அம்மா ரேணுகாவிடம் பேசினோம்.

''அடிப்படையில் நான் ஒரு டீச்சர். கேந்திரிய வித்யாலயாவுல வேலை பார்த்து ரிட்டயர்டு ஆகிட்டேன். என் வீட்டுக்காரர் உடற்பயிற்சி ஆசிரியர். அதனால நாங்க ரெண்டு பேருமே பிக்பாஸ் பார்க்கறதில்லங்கிறது மட்டுமில்ல, எங்க சர்க்கிள்ல உள்ளவங்க கூட யாரும் இந்த நிகழ்ச்சியைப் பார்த்ததில்ல.
சொல்லப் போனா, நான் ஸ்கூல்ல ஒர்க் பண்ணிட்டிருந்தபோது, 'பிக்பாஸ் நிகழ்ச்சியையெல்லாம் பார்க்கக் கூடாது'னு பசங்களைத் திட்டிட்டிருப்பேன்.
ஏன்னா அது ஒரு அறிவு சார்ந்த நிகழ்ச்சி இல்லையல்லவா?
ஆனாலும் மகள் விருப்பம். அவ மீடியாவுக்குப் போறேன்னு சொன்னப்பவே முதல்ல யோசிச்சோம். ஆனா அடம் பிடிச்சா, ஸ்போர்ட்ஸ்ல ஆர்வம் உள்ள பொண்ணுங்கிறதால எந்தச் சூழலையும் எதிர் கொள்ள பயப்பட மாட்டா.. அந்த ஒரு நம்பிக்கையேலே அப்ப ஓ.கே சொன்னோம்.
இது அதோட ஒரு தொடர்ச்சிதான்னு நினைச்சுக்க வேண்டியதுதான். இப்ப என்னுடைய நட்பு வட்டத்துல இருந்து, 'நீ அவ்வளவு பேசுன, இப்ப உன் மகளே அந்த நிகழ்ச்சியில இருக்கா'னு என்னைக் கலாய்க்கிறாங்க'' என்றவரிடம் நிகழ்ச்சியில் ஆனந்தியின் பெர்ஃபார்மன்ஸ் குறித்துக் கேட்டோம்.

''அவ உள்ள போனது முதலே அவளுக்கெதிரா ஒரு குரூப் ஃபார்ம் ஆகிடுச்சோனு எனக்குத் தோணுது. நான் ஆனந்தியின் நட்பு வட்டத்துல விசாரிச்சப்ப லக்ஷ்மி ப்ரியாவுக்கு விஜய் டிவியிலயே நல்ல இன்ஃப்ளூயன்ஸ் இருக்குன்னு கேள்விப்பட்டேன். அதனால ஷோவுல அந்தப் பொண்ணுக்குச் சாதகமா நிறைய விஷயங்கள் நடக்குதோனு நினைக்கத் தோணுது.
என் மகளைப் பொறுத்தவரை இந்த நிகழ்ச்சியை ஒரு கேம் ஷோவா நினைச்சுதான் போயிருக்கா. அதனால நிகழ்ச்சிக்குள் அவ இயல்பாதான் இருக்கான்னெல்லாம் சொல்ல மாட்டேன். கேமுக்கு என்ன தேவையோ அதைச் செய்யணும்னுதான் நினைப்பா.
பொதுவா ஜெயிக்கணும்னு நினைக்கிற போட்டியாளர்கள் எதையாவது செய்யணும்னுதான் நினைப்பாங்க. சும்மாவே உட்கார்ந்திட்டிருக்கவா நிகழ்ச்சிக்குள் வருவாங்க? அதுல ஒரு தம்பி குமரன்னு ஒரு நடிகராம். பாவம் அவரெல்லாம் சும்மாவே உட்கார்ந்திட்டிருக்க மாதிரிதான் தெரியுது.
எது எப்படியோ அவகிட்ட தெளிவா சொல்லிட்டேன். இஷ்டப்பட்டதால் போயிட்டு வா. ஒருவேளை அங்க ஜெயிக்க முடியலனா வந்ததும் புலம்பிட்டிருக்காம அடுத்த வேலையைப் பார்க்க கிளம்பிடணும்னு. சரினு சொல்லித்தான் போயிருக்கா.
இன்னொரு விஷயத்தையும் சொல்லணும். சில நேரம் அவ அழுறதப் பார்க்கிறவங்க அவ நடிக்கிறானு சொல்றாங்க. அதைக் கேக்கத்தான் கஷ்டமா இருக்கு. ஏன்னா ஏதாவது பிரச்னைனா அழுதுடுறது அவளுடைய இயல்பு. அழுதுட்டா அந்தப் பாரம் குறைஞ்சிடும்னு நம்புவா.
அழுது முடிச்சாச்சுன்னா அந்தப் பிரச்னையை லேசா எடுத்துக்க தொடங்கிடுவா. அதனால அவ நடிக்கிறாங்கிற கமென்ட்டுகளைத்தான் ஏத்துக்க முடியலை'' என்கிறார்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)