’விசுவாசம் குறித்து அனிதா ராதாகிருஷ்ணன் பேசுவது அரசியல் முரண்பாட்டின் உச்சம்!’ –காங்கிரஸ் பதிலடி

May 19, 2026 - 13:32
0
’விசுவாசம் குறித்து அனிதா ராதாகிருஷ்ணன்  பேசுவது அரசியல் முரண்பாட்டின் உச்சம்!’ –காங்கிரஸ் பதிலடி

காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கணபதி சிவகுமார் வெளியிடுள்ள அறிக்கையில், “அமைச்சர் பதவியும் அதிகாரமும் பறிபோன பின்னர், அரசியல் விரக்தியிலும் அகங்காரத்திலும் சிலர் தங்களது நாவைக் கட்டுப்படுத்த முடியாமல் பேசுவது புதிதல்ல. ஆனால், அதற்கும் ஒரு எல்லை உண்டு. அந்த எல்லையையே முற்றிலும் மீறியுள்ளார் அனிதா ராதாகிருஷ்ணன்.

கண்டிக்கத்தக்கவை

இந்தியாவின் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், நாட்டின் முக்கிய இளம் தலைவருமான ராகுல் காந்தியையும், காங்கிரஸ் மூத்த தலைவர்களையும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களையும் குறிவைத்து அவர் பயன்படுத்திய தரங்கெட்ட, வக்கிரமான மற்றும் அநாகரிகமான வார்த்தைகள் கடுமையாகக் கண்டிக்கத்தக்கவை.

கருத்து வேறுபாடு அரசியலில் இயல்பு. ஆனால் தனிநபர் இழிவும், தரக்குறைவான மொழியும் அரசியல் பண்பாட்டின் அடையாளமல்ல. அது அரசியல் வீழ்ச்சியின் அறிகுறி. தமிழக அரசியல் கலாச்சாரத்தை சீரழிக்கும் வகையில் பொதுவெளியில் இத்தகைய பேச்சுகளை பயன்படுத்துவது வெட்கக்கேடானது.

தமிழகத்தில் தி.மு.க கூட்டணி வெற்றிபெற, காங்கிரஸ் தொண்டர்களின் உழைப்பும், காங்கிரஸ் கட்சியின் கூட்டணி ஒற்றுமையும், குறிப்பாக ராகுல் காந்தியின் தேசிய அளவிலான மதிப்பும் முக்கிய காரணிகளில் ஒன்றாக இருந்தது என்பதை யாராலும் மறுக்க முடியாது.

இன்று அரசியல் வசதிக்காக அதையே மறந்து, அவரை இழிவுபடுத்துவது எந்த நாகரிக அரசியல்? கூட்டணியில் இருக்கும் போது தோழமை, தேர்தல் நேரத்தில் ஆதரவு, வெற்றி கிடைத்த பிறகு அவமதிப்பு — இதுதான் தி.மு.க-வின் அரசியல் பண்பாடா என்ற கேள்வி இன்று எழுகிறது.

கணபதி சிவக்குமார்
கணபதி சிவக்குமார்

அரசியல் முரண்பாட்டின் உச்சம்!

அனிதா ராதாகிருஷ்ணன் அவர்களே... துரோகம் பற்றி பேசுவதற்கு முன் உங்கள் அரசியல் வரலாற்றை மறந்துவிடாதீர்கள். அ.தி.மு.க-வில் வளர்ச்சி பெற்று, மறைந்த முதல்வர் ஜெயலலிதா தலைமையில் பதவிகளையும் வாய்ப்புகளையும் அனுபவித்த நீங்கள், பின்னர் அதே கட்சியையும் அதன் தலைமையையும் விட்டு விலகி தி.மு.க-வில் இணைந்தது தமிழக மக்களுக்கு தெரியும்.

அ.தி.மு.க-வுக்கும், ஜெயலலிதா நம்பிக்கைக்கும் துரோகம் செய்து வந்த ஒருவர், இன்று மற்றவர்களுக்கு விசுவாசம் குறித்து அறிவுரை கூறுவது அரசியல் முரண்பாட்டின் உச்சம்.

காங்கிரஸ் என்பது சாதாரண அரசியல் கட்சி அல்ல. இந்திய ஜனநாயகத்தின் அடித்தளத்தை அமைத்த இயக்கம். அந்த இயக்கத்தையும் அதன் தலைவர்களையும் தரக்குறைவாகப் பேசுவதன் மூலம் யாரும் உயர்ந்து விட முடியாது. தி.மு.க தலைமை இந்த விவகாரத்தில் மௌனம் காக்கக் கூடாது.

அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சை உடனடியாக கண்டித்து, அவரிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரச் சொல்ல வேண்டும். இல்லையெனில், இந்த இழிவான அரசியல் மொழியே தி.மு.க-வின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு என்று மக்கள் கருத வேண்டிய சூழல் உருவாகும். அரசியலில் நாகரிகம் வேண்டும். எதிரிகளை விமர்சிக்கலாம், ஆனால் இழிவுபடுத்த முடியாது. தமிழக அரசியல் தரத்தை கீழிறக்கும் இத்தகைய பேச்சுகளுக்கு மக்கள் தகுந்த பதில் அளிப்பார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User