அரக்கோணம்: கார் ஷெட்டில் ரூ.50 லட்சம் மதிப்பிலான செம்மரக் கட்டைகள்; சிக்கிய இருவர்; பின்னணி என்ன?
திருப்பத்தூர் மாவட்டத்தைச் சுற்றியுள்ள ஜவ்வாது மலைத்தொடரில், இயற்கையாகவே மிக உயர்தரமான சந்தன மரங்கள் விளைகின்றன. இங்கிருந்து வெட்டப்படும் சந்தன மரங்களைச் சேகரிக்கவும், பாதுகாப்பாகப் பராமரிக்கவும் அரை நூற்றாண்டுக்கு முன்பாகவே ஒரு மையப்படுத்தப்பட்ட சேமிப்பு வளாகமாக `அரசு சந்தன மரக்கிடங்கு’ உருவாக்கப்பட்டது.
திருப்பத்தூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு எதிரே அமைந்திருக்கும் இந்தப் பிரமாண்ட கிடங்கு, திருப்பத்தூர் வனக்கோட்டத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது.
காலப்போக்கில், தமிழக - ஆந்திர எல்லைப் பகுதிகளில் கடத்தல்காரர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்படும் சந்தன மரங்கள் மற்றும் செம்மரக் கட்டைகளையும் இந்தக் கிடங்கிலேயே பாதுகாப்பதை வனத்துறை வழக்கமாக்கியது.

இவை, தமிழ்நாடு வனத்துறை மூலம் மரங்களின் தரம், குணம் மற்றும் எடையின் அடிப்படையில் பல ரகங்களாகப் பிரிக்கப்பட்டு, குறிப்பிட்ட கால இடைவெளிகளில் சர்வதேச மற்றும் உள்நாட்டு வியாபாரிகளுக்காக ஏலம் விடப்படுகின்றன.
பதிவுபெற்ற வாசனைத் திரவிய தயாரிப்பாளர்கள், மருந்து நிறுவனங்கள் மற்றும் கைவினைப் பொருள் வியாபாரிகள் இந்த ஏலத்தில் பங்கேற்று சந்தன மற்றும் செம்மரக் கட்டைகளை வாங்கிச் செல்கிறார்கள்.
இந்த நிலையில்தான் ஜூலை 19-ம் தேதி இரவு கிடங்கில் இருந்த சிசிடிவி கேமராக்களை அணைத்துவிட்டு உள்ளே புகுந்த மர்ம நபர்கள் சுமார் 1,750 கிலோ எடையுள்ள 55 செம்மரக் கட்டைகளை திருடிச் சென்றனர். இதன் மதிப்பு சுமார் ரூ.50 லட்சம் இருக்கும் எனச் சொல்லப்பட்டது.
இது தொடர்பாக, பணியில் கடமை தவறிய வனத்துறை பணியாளர்கள் 6 பேர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டதோடு, ஒரு வனவரிடம் விளக்கம் கேட்டு குற்றத்தாள் வழங்கப்பட்டது. கிடங்கு அலுவலர் கொடுத்த புகாரின்பேரில், திருப்பத்தூர் நகர காவல் நிலையப் போலீஸார் விசாரணையைத் தொடங்கினர்.
திருப்பத்தூர் வனச்சரகத்திலும் ஜூலை 21-ம் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டு, களவு போன 55 செம்மரக் கட்டைகளை மீட்க 5 குழுக்கள் அமைக்கப்பட்டுத் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டன.
மர வியாபாரிகள், பழைய குற்றவாளிகள், செம்மரக் கடத்தல் வழக்கில் தொடர்புடையவர்கள் எனப் பலரும் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டனர். அதில், ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகேயுள்ள நாகாலம்மன் நகர் பகுதியைச் சேர்ந்த சிட்டி என்பவர் மீது சந்தேகம் ஏற்பட்டது.

அரக்கோணம் விரைந்த தனிப்படை போலீஸார், நாகாலம்மன் நகரிலுள்ள சத்யராஜ் என்பவரின் கார் ஷெட்டில் சோதனை நடத்தியபோது, அங்கு சுமார் 4 டன் எடையிலான 133 செம்மரக் கட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்ததைப் பார்த்து அதிர்ந்து போயினர்.
அந்தச் செம்மரக் கட்டைகளை மீட்ட போலீஸார், திருப்பத்தூர் வனத்துறையினரிடம் ஒப்படைத்து ஆய்வுக்கு உட்படுத்தினர். அதில், திருப்பத்தூர் கிடங்கில் இருந்து திருடுபோன செம்மரக் கட்டைகளும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, கார் ஷெட் உரிமையாளர் சத்யராஜ், அவருடன் தொடர்பிலிருந்த திருத்தணியைச் சேர்ந்த பூவரசன் ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்தனர். மேலும், தலைமறைவாகவுள்ள சிட்டி, அரக்கோணம் அடுத்த போடி நாயுடு கண்டிகை பகுதியைச் சேர்ந்த அஜித் ஆகிய மேலும் 2 பேரையும் போலீஸார் தேடி வருகின்றனர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)